பக்தி யாருக்கு வேலை செய்யும்? யாருக்குச் செய்யாது?
கோயிலுக்கு தினமும் தவறாமல் சென்று கன்னத்தில் போட்டுக்கொள்வதுதான் பக்தி என்ற மனநிலை பரவலாக உள்ள நிலையில், உண்மையில் ‘பக்தி’ எனும் தன்மை எப்போது உருவாகிறது என்பதை சத்குரு கூறும்போது நமது அனுமானங்கள் அனைத்தும் தகர்ந்துவிடுகிறது! பக்தியின் பாதை யாருக்கு வேலை செய்யும் என்பதை இப்பதிவு தெளிவுபடுத்துகிறது!
கோயிலுக்கு தினமும் தவறாமல் சென்று கன்னத்தில் போட்டுக்கொள்வதுதான் பக்தி என்ற மனநிலை பரவலாக உள்ள நிலையில், உண்மையில் ‘பக்தி’ எனும் தன்மை எப்போது உருவாகிறது என்பதை சத்குரு கூறும்போது நமது அனுமானங்கள் அனைத்தும் தகர்ந்துவிடுகிறது! பக்தியின் பாதை யாருக்கு வேலை செய்யும் என்பதை இப்பதிவு தெளிவுபடுத்துகிறது!
சத்குரு:
Subscribe
முக்தி அடைவதற்கு மிகவிரைவான ஒரு வழியாக இருப்பது பக்தி. ஆனால் இன்றைக்கு மக்கள் இருக்கும் நிலையில், அறிவு முன்னணிவகிக்கும் இந்தவொரு காலகட்டத்தில், உங்களால் ஒரு பக்தராக இருக்க முடியாது. ஒரு பக்தனுக்கு தனிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அவனது பக்திக்குரிய பொருளில் கரைந்து போவதுதான் அவனுடைய ஒரே குறிக்கோள். அவன் சிவபக்தனாக இருந்தால் சிவனில் ஒன்றாகக் கலந்துவிடுவதற்கு அல்லது சிவனுக்காக உயிரைவிடுவதற்குத்தான் விரும்புகிறான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான். நன்றாக வாழ்வது பற்றியும், செல்வந்தராவது பற்றியும் அல்லது சொர்க்கத்திற்குச் செல்வது குறித்தும் அவன் நினைப்பது கிடையாது. நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? இல்லை. உங்களைப் பொறுத்தவரை, பக்தி என்பது, எளிதாக வாழ்வதற்கான ஒரு கரன்ஸி நோட்டாக இருக்கிறது. உலகத்தில் உள்ள பிரார்த்தனைகளைப் பாருங்கள். தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்களின் பிரார்த்தனைகளும், “அது கொடுப்பா, இது கொடுப்பா, காப்பாத்துப்பா” என்றுதான் இருக்கிறது.
இது பக்தி அல்ல, இது ஒரு ஒப்பந்தம். நீங்கள் ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே பக்தராகி, பக்தியின் வாயிலாக முக்தியடைய விரும்பினால், உங்களுக்கென்று எந்த நோக்கமும் இருப்பதில்லை. நீங்கள் நினைத்தபடி வாழ்க்கை நடக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பதில்லை. உச்சபட்ச சாத்தியத்துடன் கலந்துபோவது மட்டும்தான் உங்களது விருப்பமாக உள்ளது. இந்தவிதமாக நீங்கள் இருந்தால், பக்தி என்பது தன்னை உணர்தலுக்கான மிகவிரைவான வழியாக உள்ளது.
ஆனால் இன்று உங்களுடைய கல்விமுறை மற்றும் கேள்வி கேட்கும் மனதைக் கொண்டு, பக்தி செலுத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை. சற்று கவனித்துப் பாருங்கள், யாரிடமாவது உங்களால் உண்மையான பக்தி செலுத்த முடியுமா? முடியாது. ஆகவே அதைப்பற்றிப் பேசாதீர்கள். உங்களுக்குள் பக்தி என்ற உணர்வே கிடையாது என்று நான் கூறவில்லை.
உங்களுக்குள் பக்தி இருக்கிறது. சிலவற்றை அது நிகழ்த்தமுடியும். ஆனால், உச்சபட்ச நிலையை எட்டுவதற்கான வழியாக அது உங்களுக்கு இருக்கமுடியாது. உங்களுக்கு இருக்கும் பக்தி உணர்வைக்கொண்டு, சிறு விஷயங்களை நிகழ்த்திக்கொள்ள முடியும். ஒரு கோவிலில் பத்து நிமிடங்கள் அமர்ந்து, “சிவா, என்னைக் காப்பாற்று” என்று கூறிவிட்டு, சிவனின் அனுக்கிரகம் கிடைத்துவிட்ட நம்பிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தைக் கடந்து செல்லமுடியும். அந்த அளவுக்கு அது வேலை செய்கிறது. ஆனால் அதுவே உங்களின் உச்சபட்சத்திற்கான பயணமாக இருக்கமுடியாது. ஏனெனில், இயல்பாகவே நீங்கள் ஒரு பக்தனாக வளரும் வகையில், குறிப்பிட்ட அளவுக்கான உணர்தல் உங்களுக்குள் நிகழும் வரையில், உங்களுடைய தர்க்கஅறிவானது, எவருக்கும் முழுமையாகத் தலைவணங்குவதற்குச் சம்மதிப்பதில்லை.
ஈஷா யோகா ஆசிரமத்திற்கு மக்கள் முதலில் துப்பறிவாளர்களாக வருகிறார்கள். பிறகு மெல்ல மாணவர்களாகிறார்கள், பிறகு சிஷ்யர்களாகிறார்கள், அதன் பிறகு பக்தர்களாகிறார்கள். அது வாழ்வின் ஒரு இயல்பான வளர்ச்சியாக இருக்கிறது. அவர்களின் உணரும் தன்மை அதிக ஆழமாகச் செல்லச் செல்ல, அவர்களுக்கு வேறுவழியே இருப்பதில்லை. இங்கே நிகழும் விஷயங்களில் அவர்கள் தங்களை இழக்கின்றனர். அதற்குப்பிறகு அவர்களால் முழுமையாகத் தலைவணங்காமல் இருக்க முடிவதில்லை. ஒருவருக்குத் தலைவணங்குவதும், அவரது பாதங்களைத் தொடுவதும் மட்டும் பக்தி கிடையாது. உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன் இருக்கப்போகிறது என்பதால் நீங்கள் தலைவணங்குகிறீர்கள். நீங்கள் ஒரு குருவின் ஆசிகளைப் பெற்றால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வியாபாரம் நன்றாக நடக்கும், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று யாரோ உங்களுக்குச் சொன்னார்கள். அதனால் நீங்கள் குருவை வணங்குகிறீர்கள். அது நல்லவிஷயம்தான். நீங்கள் விரும்பியவைகளும் நிறைவேறும். அந்த அளவுக்கு மட்டும்தான் பக்தி உங்களுக்குப் பயன்படுகிறது. ஆனால் அனைத்தையும் கடந்திருக்கும் ஒரு நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும் உச்சபட்ச வாகனமாக உங்களது பக்தி செயல்படவில்லை.
உங்களது மற்ற பரிமாணங்களையும் நீங்கள் பயன்படுத்தவேண்டும். தற்போது நீங்கள் அறிவு செய்யும் சர்க்கஸை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை விரும்புகிறீர்கள். ஏதேனும் ஒன்றை புதிதாகக் கண்டுபிடித்தால், அதில் மிகவும் சிலிர்த்துப் போகிறீர்கள். அந்தச் சிலிர்ப்பிலேயே உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கழித்துவிடுகிறீர்கள். நீங்கள் பெரிதென எண்ணுகின்ற இந்தக் கண்டுபிடிப்பு எதுவுமே புதியது அல்ல. ஏனெனில் இயற்கையில் அது எப்போதும் இருந்து கொண்டிருப்பதுதான். உங்களுக்கு ஒரு தெளிந்த பார்வை இருந்தால், உங்கள் கண்டுபிடிப்புகள் அத்தனையும் ஏற்கெனவே இருந்துள்ளதை அறிந்துகொள்வீர்கள். உங்களுடையது எத்தகைய மாபெரும் கண்டுபிடிப்பாக இருந்தாலும், இந்த பூமி, இந்த மண் அதை அறிந்திருக்கிறது. அமெரிக்காவில் மண்ணை அழுக்கு, அசுத்தம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த அழுக்குதான், உங்களது மூளையைவிட அதிகமாக அறிந்திருக்கிறது. நீங்கள் அறிந்திருப்பது அனைத்தும், உங்கள் புதிய கண்டுபிடிப்புகள் அத்தனையும், மறு-கண்டுபிடிப்புகள்தான். இந்த பூமி எல்லாவற்றையும் முன்னரே அறிந்திருக்கிறது.
இங்கே எதுவும் பெரியவிஷயம் அல்ல. ஆனால் உங்களது அறிவைக் குறித்து நீங்கள் அதிகமாகவே சிலிர்த்துப் போயிருக்கிறீர்கள். நீங்கள் அறிவில் கிளர்ந்து போனால், நாம் உங்களிடம் அதே அறிவைப் பயன்படுத்தமுடியும். அறிவைக் காட்டிலும் நீங்கள் உணர்வுப்பூர்வமானவர் என்றாலும் அல்லது அறிவைவிட நீங்கள் உடல் தன்மையானவர் என்றாலும் அல்லது அறிவைவிட நீங்கள் சக்திமயமானவர் என்றாலும், நாம், அதற்கேற்ப உங்களுக்கு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்துத் தந்திருப்போம். இப்போது நீங்கள் பெருமளவு அறிவிலும், மற்றபரிமாணங்களில் சிறிதளவுமாக நிலை கொண்டிருப்பதால்தான், இவ்வளவு அதிகமான பேச்சு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வார்த்தைகளை விரும்புகிறீர்கள், அறிவின் சர்க்கஸை விரும்புகிறீர்கள். ஆகவே நான் உங்களை சர்க்கஸ் வித்தைக்கு உட்படுத்துகிறேன். இதுவரை நீங்கள் அறிந்திருந்ததை விடச் சற்று மேலான சர்க்கஸ்.
உங்களிடம் பக்திக்கு இடமில்லாத காரணத்தால், மற்ற காரணிகளையும் நீங்கள் இப்போது பயன்படுத்துவது நல்லதுதான். பக்தி நல்லதல்ல என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அது மிகவும் விரைவானவழி. பக்தி எக்காலத்திலும் விரைவான வழிதான். ஆனால் பக்தி என்பது வந்துவிட்டால் நீங்கள் ‘நான்’ என்பதை விலக்கிவிட வேண்டும். ‘நான்’ என்பதை வேரோடு சாய்க்கவேண்டும். அப்போதுதான் அது செயல்படுகிறது; இல்லையெனில் அது செயல்படாது. இன்றைய காலகட்டத்தில், அறிவு வளர்ச்சி பெற்று, அதற்கு முக்கியத்துவம் கூடியுள்ள நிலையில், உங்களால் அறிவை முழுவதுமாக புறந்தள்ள முடியாது.
உங்களால் அறிவை ஒதுக்கிவிட்டு, என்னிடம் சரணாகதி அடைய முடியுமா? உங்களால் அது முடியாது. அது உங்களால் முடியும் என்று நீங்கள் கூறினால், அது ஏமாற்றுவேலை. நான் அதை அறிவேன். பல பிறவிகளாகப் பார்த்துவிட்டேன், நான் அவற்றை நம்பமாட்டேன். தினமும் பக்தர்கள் என்னிடம் வந்து, “சத்குரு, என் உயிரையே உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”, என்று கூறுகின்றனர். இலட்சக்கணக்கானவர்கள் இதைக் கூறியுள்ளனர். ஆனால், ஒரு சிலரால்தான் அதை உண்மையாக நடைமுறைப்படுத்த முடிகிறது. அவர்கள் வித்தியாசமானவர்கள். மற்றவர்கள், தங்களது உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்கும் அந்தக் கணத்தில், உண்மையாகவே அந்தமாதிரி உணர்கின்றனர். ஆனால் அவர்களுக்கே, அவர்களது வரையறைகள் தெரிவதில்லை. நான் அவர்களை நன்றாக அறிவேன்.
உங்களுடைய தற்போதைய மனநிலையில், பக்தி என்பது ஒரு உச்சபட்ச வாகனமாக உங்களுக்குச் செயல்படாது. அது உங்களுக்குச் சாத்தியமில்லை. உங்களுடைய உடலுக்கும், அறிவுக்கும் நீங்கள் அதிகம் கட்டுப்பட்டுள்ளீர்கள். சட்டென்று எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு, ஒரு பக்தனாக முடியாது. செயலளவில் வெளிப்படும் பக்தி ஆபாசமானது. ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கும் பக்தி அற்புதமானது. பக்தியின் பாதையில் நீங்கள் செல்ல விரும்பினால் அது உங்களுக்குச் செயல்படுமா என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். நீங்கள் சிந்திக்கும் மனிதர் என்றால் அது உங்களுக்கு வேலை செய்யாது. சிந்திக்கும் மனிதர்கள் பக்தராக இருக்கமுடியாது.
அதற்குப்பதில், உங்களைச் சுற்றிலும் இருக்கும் உயிர்களிடம் நீங்கள் சிறிதேனும் பக்தி மற்றும் மதிப்பை வளர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் அறிவு சார்ந்த மனம் உங்களுக்கிருந்தால் பக்திபற்றிப் பேசவேண்டாம். யாரோ ஒருவருடைய முன்னிலையில், உங்கள் மனம் முழுதும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்றால், உங்கள் எண்ணமும், உணர்வும் முக்கியத்துவம் இழக்கிறது என்றால், அந்த யாரோ ஒருவர் எல்லாவகையிலும் உங்களுக்கு முக்கியமானவராக இருக்கிறார் என்றால் அப்போது பக்தி உங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.