அஷ்டாங்க யோகா என்று குறிப்பிடப்படும் யோகத்தின் எட்டு அங்கங்களைப் பற்றி சத்குருவின் விளக்கத்தை இங்கே தெரிந்துகொள்வோம்...

சத்குரு:

அஷ்டாங்கா என்றால் எட்டு அங்கம் என்று அர்த்தம். இங்கு நாம் எட்டு அங்கங்களைப் பற்றி பேசுகிறோம், எட்டு நிலைகளைப் பற்றி அல்ல. யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரத்யாஹாரா, தாரணா, தியானா, சமாதி இவற்றையே யோகத்தின் எட்டு அங்கங்கள், அஷ்டாங்க யோகம் என்கிறோம்.

யமா நியமா

யமா, நியமத்தை சுலபமாக விளக்க வேண்டுமென்றால் - எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது அதுவே யமா, நியமா. ஒருவரது ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தவிதமான சூழ்நிலை உறுதுணையாய் இருக்குமோ, எது உதவாமல் தடையாய் இருக்குமோ, இவற்றையே யமா, நியமா என்றனர்.

குறிப்பிட்ட விதத்தில் அமர்வதன் மூலம் நீங்கள் சிந்திக்கும், புரிந்துகொள்ளும், உணரும் விதங்களை மாற்ற முடியும்.

உங்களுக்குள் மனிதம் நிரம்பி தழும்பினால், இது சரி, அது தவறு என்று யாராவது உங்களுக்குச் சொல்லித் தரவேண்டுமா என்ன? தெய்வீகம் அலையாய் பொங்கி, கரை தட்டினால், நிரம்பி வழிந்தால், இதைச் செய், அதைச் செய்யாதே என்று யாராவது பாடமெடுக்க வேண்டுமா என்ன? கடவுளிடம், "இதைச் செய் அதைச் செய்யாதே என்று சொல்லத் தேவையிருக்குமா? மனிதம் மலராமல், இறைத்தன்மை ஒருவருக்குள் கனியாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே செய், செய்யாதே என குறிப்புகள் வழங்கத் தேவையிருக்கும்.

ஆசனா

இது யோகத்தின் மூன்றாவது அங்கம். இவ்வுடல் எண்ணிலடங்கா உடல் நிலைகளை எடுக்க முடியும். இந்த உடல்நிலைகளில் சிலவற்றை நாம் "யோக ஆசனா", யோகாசனா என்று அழைக்கிறோம். வாழ்வின் உயர்ந்த பரிமாணங்களை உணரச் செய்வது யோகா. உங்களை அந்த உயர்ந்த நிலையை உணரச் செய்ய வைக்கும் ஒரு ஆசனம் யோகாசனம். நம் உணர்ச்சி, மனநிலைக்கு ஏற்றவாறு உடல் அமரும் நிலையும் மாறுவதை நீங்கள் கவனித்திருக்க முடியும். சந்தோஷமாக இருந்தால் ஒருவாறு அமர்வீர்கள். துக்கமாக இருந்தால் இன்னொரு மாதிரி அமருவீர்கள். அமைதியாக இருந்தால் நீங்கள் உட்காரும் விதம் மற்றொரு விதத்தில் இருக்கும். கோபம் வந்தால் வேறொரு விதத்தில் அமர்வீர்கள். இதனை நீங்கள் கவனித்ததுண்டா? இதன் அடிப்படையிலேயே ஆசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

விழிப்புணர்வாக உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் விழிப்பு நிலையையும் நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட விதத்தில் அமர்வதன் மூலம் நீங்கள் சிந்திக்கும், புரிந்துகொள்ளும், உணரும் விதங்களை மாற்ற முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆசனா ஒரு உடற்பயிற்சி அல்ல, உடலை உயர்ந்த சாத்தியத்திற்கு தயார் செய்யும் முறையே ஆசனா. நீங்கள் என்றாவது பானை செய்திருந்தால், மண்ணை பிசைந்து தயார்செய்வது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். சப்பாத்தி செய்திருந்தால் மாவை பிசைவது எத்தனை முக்கியம் என்று தெரிந்திருக்கும். அதைப் போலவே ஆசனங்களும் உங்கள் சக்தியை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்துவதற்கான சூட்சுமமான முறை. இதனை குறிப்பிட்ட விழிப்புணர்வு நிலையிலிருந்து செய்வது மிக அவசியம்.

ஆசனா செய்வதில் பல நிலைகள் உள்ளன. வெறும் உடலளவில் செய்யலாம், அல்லது இன்னும் ஆழமாகவும் செல்ல முடியும். மூச்சினை கவனத்தில் கொண்டு, உணர்வுகளை கவனித்து, அதிர்வுகளுடன் இருந்து, நாடிகளை விழிப்புணர்வில் வைத்து, பொருத்தமான மந்திரங்களை உச்சரித்து இதனை பல நிலைகளில் செய்ய முடியும். உடலின் ஒரு அங்கத்தைக் கூட நகர்த்தாமலும் ஆசனாக்களைச் செய்ய முடியும். அதுவும் சாத்தியம்தான்.

பிராணாயாமம்

நான்காவது பரிமாணத்தை பிராணாயாமம் என்கிறோம். அஷ்டாங்க யோகத்தைப் பற்றி நாம் பேசும்போது, அதன் முதல் மூன்று அங்கங்களை "நெருப்பு" பகுதி என்கிறோம். கடைசி நான்கு அங்கங்களை "வெளிச்ச" பகுதி என்கிறோம்.

பிராணாயாமம் நெருப்பு, வெளிச்சம் இவை இரண்டிலும் இடம்பெறும். சுத்தப்படுத்தும் எதையும் நெருப்பு என்கிறோம். ஞானோதயம் வழங்கும் எதையும் வெளிச்சம் என்கிறோம். பிராணாயாமம் நெருப்பு, வெளிச்சம் இந்த இரண்டு அம்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பிரத்யாஹாரா

இன்றைய காலகட்டத்தில், பிரத்யாஹாரா அஷ்டாங்க யோகத்தின் மிக முக்கியமான அம்சம். பிரத்யாஹாரா என்றால் "உள்நோக்கி திரும்புவது" என்று அர்த்தம். கவனத்தை வெளியிலிருந்து உள்நோக்கி திருப்புவது பிரத்யாஹாரா. இன்று இருப்பதைப்போல் என்றைக்குமே மனிதர்களுக்கு இத்தனை கவனச் சிதறல்கள் இருந்திருக்கவில்லை. இயற்கையில் இருந்திருந்தால், நிற மாற்றத்தைக் காண, சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். இன்று தொழில்நுட்பம் வழங்கியிருக்கும் வசதியைப் பாருங்கள். டிவி முன் உட்கார்ந்த மாத்திரத்தில், நொடிக்கு நொடி அத்தனை வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தொழில்நுட்பம் இத்தனை வசதிகளை நமது வாயிலுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. வசதிகளோடு சில இடர்களும் கூடியிருக்கின்றன. மனித புலனுறுப்புகள் இன்று தூண்டப்படுவது போல் வேறெப்போதும் தூண்டப்படவில்லை.

சமா என்றால் சமநிலை, தி என்றால் புத்தி. அதாவது சமநிலையுள்ள புத்தி என்று அர்த்தம்.

இத்தனை விஷயங்கள் மனிதர்களைத் தூண்டுவதற்கு இருக்க, வெளிப்புற கவனத்தைத் தவிர்த்து, கண்களை மூடி, உள்நோக்கி திரும்புவது சவாலான விஷயம்தான். உள்முகமாக திரும்புவதைப் பற்றி நாம் பேசும்போது, நமது உடலையும் மனதையும் வெளிப்புற விஷயங்களாகத்தான் நாம் பார்க்கிறோம். இவற்றிலிருந்து கவனத்தை நீக்கி, உள்முகமாக திரும்புவது நீங்கள் செய்யக்கூடிய செயல் அல்ல. உள்முகமாக திரும்ப நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. வெளியே பரவும் உங்கள் கவனத்தை குறைப்பது ஒன்றே நீங்கள் செய்யக்கூடிய செயலாக இருக்கும். பிரத்யாஹாரா என்றால் "உள்முகமாக திரும்புவது".

எதையோ ஒன்றை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், உங்கள் சக்தியை சற்று வெளிநோக்கி நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எதையோ ஒன்றை கேட்பதற்கு காது கொடுக்கும்போது சக்தியை விரயமாக்க வேண்டி இருக்கும். சக்தியை இரைக்காத பட்சத்தில், கேட்க இயலாது. எதையோ ஒன்றை உணர, சக்தியை செலுத்த வேண்டி இருக்கும். உங்கள் புலன் உறுப்புகளை எத்தனைக்கு எத்தனை துடிப்பாக வைத்திருக்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை சக்தி விரயம் ஏற்படும். நீங்கள் உறங்கும்போது, புலனுறுப்புகளை முழுமையாக அடைத்து வைக்கிறீர்கள்.

உடல் உயிரோடு, மனம் உயிரோடு, உலகம் துடிப்போடு, அத்தனையும் உயிரோடு இருக்க புலன்கள் மட்டும் அடைக்கப்படுகிறது. காலையில் அத்தனை சக்தியோட்டத்துடன் கண்விழிக்கிறீர்கள். படுக்கப்போகும் போது அவ்வாறு இருப்பதில்லை. உறக்கத்தின்போது நீங்கள் அடைக்கும் புலனுறுப்புகள் உங்களுக்கு அத்தனை சக்தியை தேக்கித் தருகிறது.

பிரத்யாஹாரா செய்வதற்கு தயாரற்ற நிலையில் நீங்கள் இருப்பதால், வெளிப்புறம் செல்லும் சக்தியை தடைசெய்வது அவசியம். இப்படி தடைசெய்யும்போது சக்திநிலை மென்மேலும் வளரும். சக்தியை வெளிநோக்கி செலுத்தாதபோது, இயல்பாகவே அது உள்நோக்கிச் செல்லும். "உள்முகமாக" என்று நான் சொல்லும்போது, உடல் மனதிற்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சொல்கிறேன். ஏனெனில், இந்த உடலும் மனமும் வெளியிலிருந்து சேகரிக்கப்பட்டவைதான்.

தாரணா

நீங்கள் ஏதாவது ஒன்றிற்கு போதுமான கவனம் செலுத்தினால் அதனுடன் ஆழமான தொடர்பு ஏற்படுவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். இன்று பெரும்பாலான மனிதர்கள் கவனக் குறைப்பாட்டால் அவதியுறுகிறார்கள். ஒன்றன் மீது கவனம் செலுத்த சிரமப்படுகிறார்கள். அச்சடிக்க நாம் கற்றபோது, புத்தகங்கள் அடித்தபோது, மக்களுக்கு ஏதோ ஒன்றன் மேல் கவனம் செலுத்தும் பழக்கம் ஏற்பட்டது. புத்தகம் எப்படி இருந்தாலும் சரி, கவனம் செலுத்தினோம். புத்தகத்தின் சுவாரஸ்யம் கூடக்கூட நம் ஈடுபாடு அதிகரித்தது. எதைப் படித்தாலும் அதனுடன் முழுமையாக ஈடுபாடு கொண்டோம். அதனால் எப்படிப்பட்ட புத்தகம் வாசித்தாலும் நாம் தாரணா நிலையில் இருக்கிறோம்.

இன்று வளர்ந்து வரும் எலக்ட்ரானிக் உலகத்தில் இந்தத் திறனை நாம் இழந்து வருகிறோம். ஏதோ ஒன்றுடன் உங்கள் கவனம் இருக்கையில் அதனுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. உள்ளுணர்வால் இத்தொடர்பு ஏற்படுகிறது என்று நான் சொல்வேன். பொதுவாக பெண்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும். தன்மேல் கவனம் செலுத்த வேண்டிய யாரோ ஒருவர் தன்னிடம் போதிய கவனம் செலுத்தாதபோது அவர்கள் முதல் ஆளாக அலர்ட் ஆவார்கள். ஆண்களோ விபரீதம் ஏற்படும் வரை காத்திருப்பார்கள். ஏனெனில், ஆண் முதல் முறையிலேயே விபரீதத்தை உணர்ந்து கொள்வதில்லை. போதுமான ஈடுபாடு காட்டாமல் இருக்கும்போது, உறவு உடைந்துவிட்டதை உணரத் தவறுகிறான். எதனிடம் நீங்கள் கவனம் செலுத்தவில்லையோ அந்த உறவு முறிந்துவிடுகிறது. எங்கு கவனம் செலுத்துகிறீர்களோ அங்கு உறவு நிலைத்திருக்கும். இதுவே தாரணா.

தியானம் சமாதி

தற்சமயம், உங்களால் என் மீது முழுமையான கவனம் செலுத்த முடியுமென்றால், நீங்கள் மெல்ல என்னுடன் தொடர்பு நிலைக்கு வருவீர்கள். இப்போது, இங்கு நீங்கள், நான் என இரண்டு இருக்கிறது. ஆனால், இவ்விரண்டும் தொடர்பில் இருக்கிறது. இந்த கவனம் ஒரே முனை உடையதாய் ஆனால், தொடர்பு உறுதியானால், அங்கு இரண்டு இருக்காது ஒன்றாய் மாறிப்போகும். இதனைத்தான் நாம் "தியானம்" என்கிறோம். அங்கு இரண்டு இருந்தது, கவனம் செலுத்தியதால் அதில் தொடர்பு ஏற்பட்டது, இது தாரணா. கவனம் செலுத்திய இவை ஒன்றானது, இதனை தியானம் என்கிறோம். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலைத்து நின்றால், அங்கே ஒன்றுமே இருக்காது, ஒன்றோடு ஒன்று கரைந்துவிடும், இரண்டுமே கரைந்துவிடும். மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த ஏதோ ஒன்று இருக்கப்பெறும்போது அங்கு இருப்பது இல்லாமல் போகும். இரண்டுமே இல்லாமல் போகும். இது நடந்தால், அதனை "சமாதி" என்கிறோம்.

சமா என்றால் சமநிலை, தி என்றால் புத்தி. அதாவது சமநிலையுள்ள புத்தி என்று அர்த்தம். ஏதோ ஒன்றன் மேல் அசைவற்ற கவனத்தை நீங்கள் செலுத்தினால், கொஞ்சம் காலத்தில் இரண்டிற்கும் தொடர்பு ஏற்பட்டு, ஒன்றாகி, அதில் ஒன்று கரைந்து, பின் இரண்டும் கரைந்து, அதன்பின் வேறொரு பரிமாணத்தைச் சேர்ந்த ஒன்று அனுபவ உண்மையாக இருக்கும். இதனையே சமாதி என்கிறோம். பிளவுபடாத கவனத்தினால் இது சாத்தியமானது. உங்கள் புத்தி சமநிலைப் பெற்றது, அது பகுத்துப் பார்க்கும் திறனை இழந்தது.

இன்று நவீன அறிவியல், அத்தனையும் ஒரே சக்தியிலிருந்து தோன்றியதுதான் என்று சொல்கிறது. அதை இதைப் பற்றி, உங்களையும் என்னையும் பற்றி, இருப்பது இல்லாதது பற்றியெல்லாம் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்கள் யாவும் பௌதீகத்தின்படி உண்மையல்ல, நியூரோ சைன்ஸஸ் படியும் அது உண்மையல்ல.

காலமும் வெளியும் உங்கள் அறிவின் உருவாக்கம். ஏனெனில், அறிவு அனைத்தையுமே பகுத்துப் பார்க்கின்றது. நீங்கள் பிழைப்பு நடத்துவதற்கான சக்திவாய்ந்த கருவி இது. பிழைக்க வேண்டும் எனும் உணர்வை ஒதுக்கி வைக்கும்போதுதான் அறிவை அமிழ்த்தி வைத்து, அதனை ஒரு கண்ணாடி போல் ஆக்க முடியும். கண்ணாடியின் முகம் அனைத்தையும் பிரதிபலிப்பது. அதற்குள் எதுவும் மாட்டிக்கொள்ளாது, அதனுள் கழிவுகள் சிக்காது. கண்ணாடி எதனை பிரதிபலிக்கிறதோ, பிரதிபலிக்கப்படுவதன் குணம் கண்ணாடிக்குள் பதிவதில்லை. எப்போது உங்கள் மனம் இப்படி ஆகின்றதோ அப்போது நீங்கள் சமாதி நிலையில் வாழ்கின்றீர்கள் என்று அர்த்தம். நீங்கள் சமாதி நிலையில் வாழும்போது, இதுவும் இல்லை அதுவும் இல்லை, மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த ஏதோ ஒன்று அங்கு பரிணமிக்கத் துவங்குகிறது.