அர்த்தமற்ற சடங்குகளுக்கு உதாரணம் காட்டும் ஜென்கதை!
அசைவ உணவு பற்களுக்கு இடையில் சிக்கினால், எடுப்பதற்கு வசதியாக ஒரு குச்சியை இலைக்கு அருகில் வைப்பது முதலில் வழக்கமாக இருந்ததாம். காலப்போக்கில், குச்சி என்பது கொம்பு என்று புரிந்துகொள்ளப்பட்டு, முதலில் ஏதோ ஒரு முட்டாள் ஓர் உலக்கையை வைத்தான். அதுவே பிற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயம் ஆகிவிட்டது. உலக்கையால் பல் குத்த முடியுமா?
ஜென்னல் பகுதி 15
பார்வையற்றவன் இருட்டில் வெளியே புறப்பட்டான். நண்பன் அவனிடம் ஒரு விளக்கைக் கொடுத்தான்.
“கண் தெரியாத எனக்கு இந்த விளக்கால் என்ன லாபம்?”
“நண்பா... இது உன் கையில் இருந்தால், எதிரில் வருபவர்கள் உன் மீது மோதாமல் தவிர்ப்பார்கள்.
விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு அவன் இருட்டில் நடந்தான். இருந்தபோதிலும் யாரோ ஒருவன் மீது மோதிக்கொண்டான். “என் கையில் தான் விளக்கு இருக்கிறதே... கவனித்து வந்தால் என்ன?’’ என்று சற்றே கோபமாகக் கேட்டான்.
மோதியவன் சொன்னான், “விளக்கு இருக்கிறது. ஆனால், சுடர் எப்போதோ அணைந்துவிட்டு இருக்கிறது நண்பா!”
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
விளக்கை அவன் கையில் வைத்திருந்தது அதன் வெளிச்சத்துக்காக. அது அணைந்துபோனப் பின்னும், அதை உயர்த்திப்பிடித்து நடந்து வருவது அர்த்தமற்ற ஒரு சடங்காகிவிட்டது. ஏதோ ஒன்றின் நோக்கம் தேய்ந்து போய், அது வெறும் சடங்காக எப்போது மாறிப் போகிறதோ, அதன்பின் அந்தச் செயலால் எந்த நன்மையும் வர வாய்ப்பு இல்லை.
நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு நோக்கத்துடன் செய்த பல விஷயங்கள் அவற்றின் உண்மைத் தன்மையை இழந்து வெறும் சடங்குகளாகத் தொடர்கின்றன.
கர்நாடகாவில் சில கிராமங்களில் ஒரு வழக்கம். வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு அசைவம் பரிமாறினால், சாப்பாட்டு இலைக்குப் பக்கத்தில் ஓர் உலக்கை வைப்பார்கள். எதற்கு என்று விசாரித்ததில் அர்த்தம் பிடிபட்டது.
அசைவ உணவு பற்களுக்கு இடையில் சிக்கினால், எடுப்பதற்கு வசதியாக ஒரு குச்சியை இலைக்கு அருகில் வைப்பது முதலில் வழக்கமாக இருந்ததாம். காலப்போக்கில், குச்சி என்பது கொம்பு என்று புரிந்துகொள்ளப்பட்டு, முதலில் ஏதோ ஒரு முட்டாள் ஓர் உலக்கையை வைத்தான். அதுவே பிற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயம் ஆகிவிட்டது. உலக்கையால் பல் குத்த முடியுமா?
இப்படித்தான், நம் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருப்பதற்குச் சில செயல்முறைகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையை மறந்துவிட்டு, தாத்தா பண்ணினார் அப்பா பண்ணினார் என்று தொடர்ந்து அவை வெறும் சடங்காகிவிட்டன.
அவற்றின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அவற்றை மறுபடியும் நமக்கு வழிகாட்டியாக மாற்றிக்கொள்ளும் அவசியம் வந்துவிட்டது. இல்லையென்றால், பார்வையற்றவன் சுமந்த விளக்கைப்போல, அச்சடங்குகளால் நம் வாழ்க்கைக்கு எந்தப் பயனும் இல்லை!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418