அல்லம மஹாபிரபுவின் ஆற்றல்
வேர்கள் மண்ணை பலமாகப் பற்றிக்கொள்ள நிமிர்ந்து நிற்கும் மரங்கள்தான் கம்பீரம் என்று நினைப்பவர்களால், மரம் வேரோடு விழுந்துவிடும் அபாயம் இருப்பதை உடனே உணரமுடியாது. ஒருவர் பக்தியில் புல்போல் பணிந்திருந்தால் எந்தப் புயலும் அசைக்கமுடியாத ஆற்றல் பெறுவார் என்பதை, தீவிர சிவபக்தரான அல்லம மஹாபிரபுவின் கதை மூலம் சத்குரு விளக்கியுள்ளார்.
வேர்கள் மண்ணை பலமாகப் பற்றிக்கொள்ள நிமிர்ந்து நிற்கும் மரங்கள்தான் கம்பீரம் என்று நினைப்பவர்களால், மரம் வேரோடு விழுந்துவிடும் அபாயம் இருப்பதை உடனே உணரமுடியாது. ஒருவர் பக்தியில் புல்போல் பணிந்திருந்தால் எந்தப் புயலும் அசைக்கமுடியாத ஆற்றல் பெறுவார் என்பதை, தீவிர சிவபக்தரான அல்லம மஹாபிரபுவின் கதை மூலம் சத்குரு விளக்கியுள்ளார்.
சத்குரு:
கர்நாடகத்தின் யோகப் பாரம்பரியத்தில் ஒரு அழகான கதை சொல்வார்கள். சித்தலிங்கர் என்ற பெயரில் ஒரு மகத்தான யோகி இருந்தார், அவர் தென்னிந்தியாவின் தக்கான பீடபூமியிலுள்ள கர்நாடகா - ஆந்திரா பகுதிகளில் வாழ்ந்து வந்தார். மிகுந்த அதிகாரத்துடன் அவர் இப்பகுதியில் உலாவந்தார், எல்லாப் பக்கமும் சென்று தான்தான் மிகவும் உயர்ந்த யோகி என்று எல்லோரிடமும் பறைசாற்றி வந்தார். அவர் காயகல்பத்தின் பாதையில் இருந்தார். "காயா" என்றால் "உடல்", "கல்பா" என்றால் உங்கள் உடலை முற்றிலும் வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச்செல்வது என்று பொருள். இப்பாதையை மேற்கொள்பவர்கள் அடிப்படையான பஞ்சபூதங்களின்மீது ஆளுமை கொள்ளும் யோகமரபைச் சேர்ந்த யோகிகள்.
Subscribe
இப்படிப்பட்ட ஆன்மீக சாதனத்தின் மூலம் அவர்கள் தங்கள் உடலை மிகவும் கடினமாக்கி உறுதிபடுத்தியிருந்தார்கள். இவர்கள் 300 முதல் 400 வருடங்கள் வாழும் வகையைச் சேர்ந்தவர்கள். பஞ்சபூதங்கள் மீது இவர்கள் கொண்ட ஆளுமையால் உடலை ஸ்திரப்படுத்தியிருந்ததால், சாதாரணமாக மனிதர்கள் வாழக்கூடிய காலத்திற்கு அதிகமாக இவர்கள் வாழ்ந்தார்கள். கதையில் கூறப்படும் இந்த சம்பவம் நடந்தபோது சித்தலிங்கருக்கு ஏற்கனவே 280 வயதைத் தாண்டிவிட்டது என்றும், அவர் தன் உடலை வைரம் போல் வலுவாக வைத்திருந்தார் என்றும் கூறுவர். அந்த காலகட்டத்தில் ஆயுதங்கள் அனைத்தும் இரும்பு, பித்தளை, செம்பு, அல்லது அதுபோன்ற வேறு உலோகங்களால் உருவாக்கப்பட்டன. அதனால் அப்போது இருந்த எந்த ஆயுதத்தாலும் அவரை எவராலும் வெட்ட முடியவில்லை. அதுதான் அவருடைய பெருமை. அவர் எங்கு சென்றாலும், மக்களிடம் சவால் விட்டு தன்னை மிக உயர்ந்த யோகியாக நிரூபித்து வந்தார்.
சித்தலிங்கர், இன்னொரு மகத்தான யோகியான அல்லமா பற்றிக் கேள்விப்பட்டார். பொதுவாக அல்லம மஹாபிரபு என்று அழைக்கப்பட்ட அல்லமா, ஒரு அற்புதமான துறவியாகவும் சிவபக்தராகவும் இருந்தார். அவர் தென்னிந்தியாவில் மிகவும் மதிக்கப்பட்டு, இன்றும் மரியாதையுடன் போற்றப்படும் யோகியாக விளங்குகிறார். அக்க மஹாதேவியும் இன்னும் பல பக்தர்களும் அவரோடு தொடர்பில் இருந்தனர். அல்லமா மக்களுக்கு அருளிய அனைத்தையும் அரவணைக்கும் பக்தி சாதனமும், இன்னும் பல ஆன்மீக சாதனங்களும் அக்காலத்தில் பெரிய அளவில் பரவிக்கொண்டு இருந்தது.
அல்லமா ஒரு அரசர், அவருக்கு உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருந்தன, அதனால் அரசரைப் போல உடை அணிந்தார், அரசரைப் போல வாழ்ந்தார், ஆனால் அவர் ஒரு யோகி. சித்தலிங்கரோ யோகியைப் போல உடை அணிந்து யோகியாகவே வாழ்ந்தார். அவர் முகம் முழுவதும் "யோகி" என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதனால் நன்றாக உடை உடுத்தி, நன்றாக உணவருந்தி, அரண்மனையில் வாழ்ந்துகொண்டு தன்னைத் தானே யோகி என்று அழைத்துக்கொள்ளும் அல்லமாவை சித்தலிங்கருக்குப் பிடிக்கவில்லை. அவர் அல்லமாவிடம் சென்று சவால் விட்டார், "உங்களை நீங்களே யோகி என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களை சிவபக்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களிடம் என்ன இருக்கிறது? என்னிடம் காட்டுங்கள்" என்றார்.
அல்லம மஹாபிரபு, "நீங்கள்தான் மிகவும் உயர்ந்த யோகி. நீங்கள் செய்யமுடிந்ததைக் காட்டுவதுதானே உசிதம்!" என்றார்.
வைரம் பூசப்பட்ட ஒரு வாளை எடுத்து அல்லமாவிடம் கொடுத்த சித்தலிங்கர், "இந்த வாளை எடுத்து உங்கள் முழு பலத்துடன் என் தலையில் அடியுங்கள். எனக்கு எதுவும் ஆகாது." என்றார்.
அல்லமாவிற்கு இது வேடிக்கையாக இருந்தது. இருந்தும் வாளை எடுத்து இரண்டு கைகளிலும் பிடித்து தன் முழு பலத்துடன் சித்தலிங்கரின் தலையில் அடித்தார். அந்த வாள் அவர் தலையில் பட்டவேகத்தில் பந்தைப்போல் தெறித்துவிட்டது, அவர் உடல் அவ்வளவு கடினமாகியிருந்தது. சித்தலிங்கர் ஒரு பாறையைப் போல நின்றார். அவர் சிரித்தபடி, "பார்த்தீர்களா, உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது." என்றார். பிறகு சித்தலிங்கர், "நீங்கள் என்மீது வாளை பயன்படுத்தியதால் நானும் உங்கள்மீது வாளை பயன்படுத்துவேன்." என்றார்.
சரி என்றார் அல்லமா. சித்தலிங்கர் வாளை அல்லமா மீது வீசினார். காற்றின்மீது வாள்வீசுவது போல அவர் உடலின் ஊடே வாள் ஊடுருவிச்சென்றது. சித்தலிங்கர் மறுபடியும் வாளை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக அவர்மீது வீசிப்பார்த்தார், ஆனால் அவரைத் தொடக்கூட செய்யாமல் வாள் அவரை ஊடுருவிச்சென்றது. பிறகு சித்தலிங்கர் சிரம்தாழ்த்தி அவரை வணங்கி, "வலிமையின் யோகா எனக்குத் தெரியும், ஆனால் மென்மையின் யோகா எனக்குத் தெரியாது" எனச்சொல்லி அல்லமாவின் சீடரானார்.
வீரசைவர்கள் எனும் துறவிகள் வம்சத்தை ஊக்குவித்து உருவாக்கினார் அல்லமா. வீரசைவர்கள் வீரர்களாகத் திகழ்ந்த பக்தர்கள். அவர்கள் சிவபக்தர்கள், ஆனால் கையில் ஆயுதம் வைத்திருப்பார்கள். அல்லமா மிகவும் மென்மையான மனிதர், மிக ஆழமான கருத்தும் பரிமாணமும் கொண்ட ஆயிரக்கணக்கான வெண்பாக்களை அவர் இயற்றியுள்ளார். பலவிதங்களில் மனிதகுலத்தின் சரித்திரம் முழுவதிலும் அவர் ஒரு தனிரகம் என்றே நான் சொல்வேன். அவர் மிகவும் அசாதாரணமான மனிதராகத் திகழ்ந்தார்.