பாலுணர்வு... காதல்... கடவுள்! பகுதி 6

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புகழ்ந்து, அன்புகொஞ்சி பேசுவதும், அன்பு பரிசுகளை அவ்வப்போது அளித்துக்கொள்வதும், ‘நீ இன்றி என்னால் வாழமுடியாது!’ என அறிவிப்பதும்தான் வழக்கமாக நாம் பார்க்கும் காதலாக உள்ளது. காதல் என்பதற்கு ஆண் பெண்ணிற்கிடையே ஏற்படும் ஈர்ப்பு என்பதைத் தாண்டி, வேறொரு பரிமாணம் இருப்பதை சத்குருவின் இந்த கட்டுரை உணர்த்துகிறது!

சத்குரு:

காதல்

காதல் என்பது மனிதனின் கற்பனையல்ல. ஒரு தனிமனிதனின் அனுபவத்தில் இது உண்மைதான். மற்றவருக்கு அது உண்மையற்ற ஒன்றாக இருக்கலாம். சூரியோதயத்தை பார்த்தீர்கள், இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு மிகுந்த ஆனந்தமாகிவிட்டது. உங்களுக்கு இது உண்மையான அனுபவம்தான். ஆனால் இன்று கண்விழிக்கக்கூடாது என்றிருக்கும் மனிதருக்கு சூரியோதயம் துன்பமான ஒன்று. அவருக்கும் இது உண்மையான அனுபவம்தான். எனவே மனிதனின் அனுபவத்தில் இருப்பதில் எது உண்மை, எது பொய் என்று கேட்டுக்கொண்டிருப்பது தவறானது. ஏனென்றால், ஒருமனிதனது அனுபவத்தில் உண்மையாய் இருக்கும் ஒன்று, உங்கள் அனுபவத்தில் அப்படியில்லாமல் இருக்கலாம்.

நம் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் உருவாகிற நிர்பந்தத்தை மட்டும் காதல் என்று எண்ணாதீர்கள்.

இன்று சமூகத்தில் ஆண், பெண் இருவருக்கும் இடையிலான ஈர்ப்பை மட்டுமே காதல் என்கிறார்கள். ஆண், பெண் இருவருக்குமிடையே ஏன் ஈர்ப்பு ஏற்படுகிறதென்றால், இனப்பெருக்கம் செய்ய வேண்டுமென்று இயற்கைக்கு ஆசை. மனிதகுலம் தொடர்ந்து நீடிக்கவேண்டுமென்றால், இனப்பெருக்கம் தொடர்ந்து நிகழவேண்டும். அதனை நீங்களாக முன்வந்து மேற்கொள்ளமாட்டீர்கள். எனவே இயற்கை இருபாலருக்குள்ளும் ஒரு இரசாயன மாற்றத்தினை ஏற்படுத்தி உங்களுக்குள் ஒரு ஆழமான கட்டாயச் சூழலை உருவாக்குகிறது. உடல்நிலையில் இருக்கும் இந்தக் கட்டாயம் வெளிப்படும்போது அது மனநிலையிலும், உணர்ச்சிநிலையிலும் பலவிதமாக வெளிப்படும். உணர்ச்சிநிலையில் வெளிப்படும்போது இதனைக் காதல் என்கிறோம். உடல்நிலையில் வெளிப்படும்போது காமம் என்கிறோம். மனநிலையில் வெளிப்பட்டால் அன்பு என்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காதல் என்பது ஆண், பெண் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. நம் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் உருவாகிற நிர்பந்தத்தை மட்டும் காதல் என்று எண்ணாதீர்கள். அடிப்படையாக காதல் என்றால் மனநிலையிலான, உணர்வுநிலையிலான ஆழமான ஈடுபாடு. இந்த ஈடுபாட்டின் காரணமாக மனிதனுக்குள் ஒரு புதுவிதமான ஆனந்தம் உருவாகிறது. இந்த ஈடுபாட்டினை மனநிலையில் வெளிப்படையாகக் கொண்டுவரும் திறமை நமக்கிருந்தால் எதனோடு வேண்டுமானாலும் இந்த ஈடுபாட்டினைக் கொண்டுவர முடியும். இந்த ஈடுபாட்டினை மனப்பூர்வமாகவும், விழிப்புணர்வாகவும் கொண்டுவரும் திறமை இல்லாதபோது அது இரசாயன மாற்றமாய் நிகழ வாய்ப்புண்டு. பெரும்பாலான மக்களுக்கு இந்த விழிப்புணர்வு இல்லாததால், இரசாயன மாற்றத்தால் மட்டுமே ஈடுபாடு வரமுடியும் என்ற சூழ்நிலை அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளது. எனவே தான், காதல் என்றால் ஆண், பெண் சம்பந்தப்பட்டது என்ற தவறான முடிவு சமூகத்தில் உருவாகிவிட்டது.

மனநிலையிலும் உணர்வுநிலையிலும் மனிதனுக்கு ஈடுபாடு வரவில்லையென்றால் வாழ்வின் சாரத்தைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்த ஈடுபாட்டை ஆண் பெண்ணிற்குள்ளும், பெண் ஆணிற்குள்ளும் கொண்டுவர வேண்டும். இல்லாவிடில் நாம் செய்கின்ற செயலில் இந்த ஈடுபாட்டினை கொண்டுவரலாம். நாம் விளையாடும் விளையாட்டில் இந்த ஈடுபாட்டைக் கொண்டுவரலாம். அல்லது வெறுமனே கண்மூடி அமர்ந்து எதன் தொடர்புமில்லாமல் இந்த ஈடுபாட்டினைக் கொண்டுவர முடியும். எதனோடும் எந்தத் தொடர்புமில்லாமல் ஆழமான ஈடுபாட்டுடன் இருப்பதையே தியானம் என்கிறோம். இன்னொருவரின் உதவியில்லாமலேயே இந்த ஈடுபாட்டை நம்மால் கொண்டுவர முடியும். மற்றவரின் உதவியில்லாமல் ஆழமான ஈடுபாட்டுடன் இருக்கமுடியுமானால், இது நம் வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியதாக இருக்கும். மற்றவருடைய உதவியினால் இது நேர்ந்திருக்குமானால், அதாவது காதல், திருமணம் வரை செல்கிறது, பின்னர் சிலருக்கு அது வெறுப்பைத் தருகிறது, விவாகரத்துவரை சென்றுவிடுகிறது. ஏனென்றால் இன்னொருமனிதர் நீங்கள் எதிர்பார்த்தவிதமாக வாழ்க்கை முழுவதும் நடக்க வாய்ப்பில்லை. உலகில் ஒரு மனிதர்கூட நீங்கள் நினைக்கும்விதமாக நடக்கப்போவதில்லை. நீங்கள் எப்போது இன்னொரு மனிதரைக் காதலிக்கிறீர்களோ அப்போது நீங்கள் நினைத்தவிதமாக அவர் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வந்துவிடுகிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது காதல் மறைந்து வெறுப்பாகவும், துன்பமாகவும், தற்கொலையாகவும் மாற வாய்ப்புள்ளது.

மனிதர்களிடம் அனைத்து நிலையிலும் ஆழமான ஈடுபாட்டைக் கொண்டுவந்திருக்கும் காதலுக்கு அடிப்படையாக உடலில் நிகழும் இரசாயன மாற்றம் இருக்கத் தேவையில்லை. இந்த ஈடுபாட்டை நமது புத்திசாலித்தனத்தின் மூலமாகவும், விழிப்புணர்வின் மூலமாகவும் உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த விதமாக ஈடுபாடு உருவாக்கும்போது காதல் என்பது எப்போதுமே நம்மிடம் இருக்கும். எதைப் பார்த்தாலும் காதல், எதையும் பார்க்காவிட்டாலும் காதல். மனிதனின் உயிரே காதலாய் நடக்கும்போது இதனை ஆன்மீகம் என்கிறோம். ஆன்மீகமென்றால் இடைவெளியில்லாத காதல், நோக்கமில்லாத காதல் எப்போதும் நம்முள் நிகழ்ந்திருக்கிறது என்றே பொருள்.

அழகு

நீங்கள் எப்போது இன்னொரு மனிதரைக் காதலிக்கிறீர்களோ அப்போது நீங்கள் நினைத்தவிதமாக அவர் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வந்துவிடுகிறது.

அழகு என்பது எங்கே இருக்கிறது? எந்த உருவம் அழகானது? எந்த உருவம் அழகற்றது? என்ற கேள்வி உங்களுள் எழலாம். உருவம், ஒரு உருவமாகவே இருக்கிறது. அதில் அழகும் இல்லை, அசிங்கமும் இல்லை. நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கும்போது எல்லாமே அழகுதான். நீங்கள் உங்களுக்குள் ஆனந்தம் இல்லாமல் இருக்கும்போது எதுவுமே அழகில்லை. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்கு அடிமையாக உங்கள் மனம் இருப்பதால், குறிப்பிட்டவிதமான உருவங்கள் அழகாகவும் மற்றவை அழகற்றும் தெரிகிறது.

உங்கள் குழந்தை, உங்களுக்கு அழகாகத் தெரிகிறது. ஆனால் மற்றவர்களுக்கோ அப்படியில்லை. உங்கள் கடவுள், உங்களுக்கு மிக அழகானவர். வேறு கலாச்சாரத்திலுள்ள மனிதனுக்கு, உங்கள் கடவுள் அசிங்கமானவராகத் தெரியலாம். எனவே அழகு என்பது கலாச்சாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. இதை மனதின் கட்டுப்பாடு என்றும் சொல்லலாம். சின்னஞ்சிறு புல்லை எடுத்துப் பார்த்தாலும், அந்தப் புல்லினை உருவாக்கிய சக்தி எதுவாயிருந்தாலும் சரி, அந்தப் புல் மிக கவனமாக உருவாக்கப்பட்டதை அறியமுடியும். படைப்பினை நிகழ்த்தும் சக்தி, ஒரு புல்லைக்கூட எந்த அளவிற்கு ஈடுபாட்டோடும் கவனத்தோடும் உருவாக்கியிருக்கிறது, பாருங்கள். அதே அளவு ஈடுபாட்டுடனும் கவனத்தோடும் நீங்களும் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். அதேவிதமான ஈடுபாட்டுடன் இருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் அழகாகத்தான் பார்ப்பீர்கள். எதுவும் அசிங்கமாகத் தெரியாது. ஈடுபாடு இல்லாததால்தான் அது நமக்கு அசிங்கமாய்த் தெரிகிறது. நம் அனுபவத்தில் எதனோடு முழுமையாக ஈடுபட்டிருக்கிறோமோ அது மிகவும் அழகாக இருக்கிறது. அடிப்படையாக நீங்கள் ஓர் ஆனந்தமான மனிதராகயிருந்தால் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்.

(முற்றும்)

'பாலுணர்வு... காதல்... கடவுள்!' தொடரின் பிற பதிவுகள்