உயிர்போகும் ஆபத்து இருப்பது தெரிந்தும் சாகசம் செய்ய நினைக்கும் மனப்பான்மையானது, வெகுசிலரிடமே இருப்பதைக் காணலாம். அப்படிப்பட்ட இளைமைப் பருவத்திற்கு சொந்தக்காரராக இருந்தவர் சத்குரு. தான் மேற்கொண்ட சாகசங்கள் பற்றியும், அவற்றை மேற்கொள்ள தூண்டுகோலாய் இருந்தது எது என்பதையும் சத்குரு இங்கே சுவைபட பகிர்கிறார்.

சத்குரு:

சிறு வயதில் நன் சம்பாதித்த பணமெல்லாம், அபாயகரமான செயல்கள் என மற்றவர்கள் நினைத்தவற்றைச் செய்து பெற்றதுதான். பத்து ரூபாய் பந்தயத்துக்காக உயிரைக்கூடப் பணயம் வைத்துக் கட்டடத்தில் பின்புறமாகவே ஏறி இருக்கிறேன். பணத்துக்காக அல்ல. அதில் கிடைக்கும் பெரும் மகிழ்ச்சிக்காக!

ஆபத்தில்லாத ஒன்றைச் செய்து முடிப்பதற்குச் 'சாகசம்' என்று ஏன் பெயரிடப் போகிறீர்கள்?

நான் செய்வதைப் பார்த்து அதிர்ந்தவர்கள், 'அதிர்ஷ்ட தேவதை உன் பக்கம் இருக்கிறாள். அவள்தான் ஒவ்வொரு முறையும் உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள்' என்று சொல்வார்கள்.

இருக்கலாம். சிறுவனாக இருந்த காலத்திலிருந்து அபாயத்தையும், என்னையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஒட்டி உறவாடுபவர்கள் நாங்கள். எப்போதும் அபாய விளிம்பில்தான் என் வாழ்க்கை பயணிக்கிறது. அபாயம் இல்லாத இடம் எனக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் பெரிய பெரிய நேரான சாலைகளில் வாகனத்தைச் செலுத்துகையில் போரடிப்பதாக உணர்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனக்குப் பத்து வயதிருக்கும். ஆறாவது படித்துக் கொண்டு இருந்தேன். குண்டக்கல்லில் இருந்தோம். என் அப்பா ரயில்வேயில் மருத்துவராக இருந்ததால், ரயில்வே காலனியில் எங்களுக்கு வீடு. பள்ளியிலிருந்து வீட்டுக்கு நேர்ப்பாதையில் போனால், இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதனால், குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடித்தோம்.

அந்தப் பாதையில் ரயில்வே யார்டு ஒன்று குறுக்கிடும். தடை செய்யப்பட்ட அந்த யார்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைவோம். மாட்டிக் கொண்டால், என் அப்பாவின் பெயரைச் சொல்லித் தப்பித்துவிடுவோம். உலோக தாதுப்பொருட்கள் ஏற்றப்பட்ட நீளமான சரக்கு ரயில்கள் அங்கே நிறுத்தப்பட்டு இரக்கும். ரயில் புறப்பட ஆயத்தமாகும் வரை காத்திருப்போம். நாற்பது, ஐம்பது பெட்டிகள் கொண்ட ரயிலில், இன்ஜின் இழுத்ததும் ஒவ்வொரு பெட்டியாக அடுத்ததைச் சுண்டி இழுக்கும். தட்... தட்... தட்... என்று ரயில் நகரத் துவங்கும்போது, பெட்டிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் புகுந்து தண்டவாளத்தைக் கடப்பது எங்களுக்குப் பிடித்தமான ஒரு விளையாட்டு. குறுக்கில் செல்லும் வேக்குவம் பைப்களைத் தவிர்த்து, அகலப்பாதையைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டும். அதே வேகத்தில் அதேபோல மறுபடி கடந்து இந்தப் பக்கம் வரவேண்டும்.

ஒவ்வொரு பெட்டியாகக் கடக்கையில் ரயிலின் வேகம் கூடும். தட்... தட்... என்ற ஒலி மாறி, தட... தட... என்று அதிரும். பெட்டிகள் கோக்கப்பட்ட இடைவெளிகளில் குனிந்து சடார் சடார் என்று மறுபடியும் கடக்கும் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும். யார் அதிக எண்ணிக்கையில் இதைச் செய்து காட்டுகிறார்கள் என்பதுதான் எங்களுக்குள் போட்டி. நான் நூறு தடவைக்கு மேல் இப்படிச் செய்தது உண்டு.

ஒருமுறை யாரோ இதைக் கவனித்து, என் வீட்டில் புகார் செய்துவிட்டார்கள். 'செத்துத் தொலைப்பாயடா!' என்று என் வீட்டில் கத்தினார்கள். அவ்வளவு இளம் வயதில் இறக்கமாட்டேன் என்று என் உள்ளுணர்வு சொன்னதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கூடம் செல்லவே தடை விதித்தார்கள்.

இது என்றில்லை. எந்தவித சாகசத்தில் ஈடுபட்டாலும் அதில் அபாயம் பொதிந்திருக்கிறது. ஆபத்தில்லாத ஒன்றைச் செய்து முடிப்பதற்குச் 'சாகசம்' என்று ஏன் பெயரிடப் போகிறீர்கள்?

ஒருமுறை சாமுண்டி மலையின் உயரத்திலிருந்து தார்ச் சாலையில் வராமல், பாறைகள், புதர்கள், செடி கொடிகள் இவற்றினூடே மலைச்சரிவில் அப்படியே என் மோட்டார் சைக்கிளைச் செங்குத்தாகச் செலுத்தி இறங்கினேன். ஒரு மரக்கிளையில் மோதி, என் விரல் ஒன்று உடைந்தது. ஆனாலும் இறங்கிக்கொண்டு இருந்த வேகத்தில் வண்டியை நிறுத்தப் பார்த்தால் வண்டி குட்டிக்கரணம் அடித்து என்னை தூக்கி எறிந்துவிடும் என்ற நிலை.

யாருக்கும் எதையும் பிரகடனம் செய்வதற்காக ஆபத்தான செயல்களில் நான் ஈடுபடவில்லை.

சில சமயம், ஏதோ ஒரு துருத்திய பாறையில் மோதி என் மோட்டார் சைக்கிள் 10, 12 அடிகள் கூட தாவிச் சென்றது. அதே வேகத்தில் ஒரு பாறையின் துருத்தல் என்னைத் தூக்கி அடித்திருந்தால், எலும்புக்கூட கிடைத்திருக்காது.

இதையெல்லாம் பணத்துக்காக நான் செய்யவில்லை. உண்மையில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் நான் ஈடுபட்ட சாகச விளையாட்டுக்கள் அவை.

பதினான்காம் லூயி, போரில் ஈடுபட்டிருந்தபோது, எதிரிகளின் முகாம் வரை சென்று ரகசியமாக வேவு பார்த்து வந்து சொல்லும் வீரருக்கு 100 பொற்காசுகள் தருவதாக அறிவிக்கப்பட்டது. துணிச்சலுக்குப் பேர்போன வீரர்களில் ஒருவனைத் தவிர வேறு எவரும் இந்த அபாயகரமான வேலையில் ஈடுபட முன்வரவில்லை.

அந்த வீரன் வேவு பார்க்கச் சென்று பல நாட்கள் கழிந்தன. எதிரிகளிடம் சிக்கி அவன் உயிர் இழந்திருப்பான் என்று எல்லோரும் முடிவு செய்துவிட்ட கட்டத்தில், அவன் எதிரிகள் முகாமிலிருந்து தகவல்கள் திரட்டி வந்து சேர்ந்தான்.

ராணுவ அதிகாரிகள் மிக்க மகிழ்ந்து பரிசுத் தொகையை வழங்கியபோது, 'வெறும் பணத்துக்காக இப்படிப்பட்ட ஆபத்தான வேலையில் நான் ஈடுபட்டதாக நினைத்து வேடிக்கை செய்யாதீர்கள்' என்று அவன் சொன்னான்.

அதே நிலைதான் என்னுடையதும். மற்றவர்கள் பார்வையில் நான் செய்தது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். உயிரைப் பணயம் வைத்ததாகத் தோன்றலாம். ஆனால், என்னுள் இருந்த ஒழுங்கமைப்பும் என் உடல் மீது எனக்கு இருந்த ஆளுமையும்தான் எனக்கு உற்சாகம் தந்து இவற்றில் ஈடுபட வைத்தன. கண்களை மூடிக் கொண்டு இருட்டுக்குள் குதிப்பது புத்திசாலித்தனமல்ல என்று அறிந்திருந்தேன். கணக்கிட்டுத் திட்டமிட்டு சில ஆபத்துக்களை எதிர்கொண்டேன் அவ்வளவுதான்!

இத்தனை ஆபத்துக்களை எதிர்கொண்ட நான், இன்றும் உடலளவில் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். வருடத்துக்கு ஒருமுறை கைலாய மலைக்குக் கடினமான பயணம் மேற்கொள்கிறேன். சாகசங்களில் ஈடுபடாமல் வீட்டில் உட்கார்ந்திருந்த என் வயதே ஆனவர்களில், இன்று எழுந்து நடப்பதற்குக்கூடச் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள்.

யாருக்கும் எதையும் பிரகடனம் செய்வதற்காக ஆபத்தான செயல்களில் நான் ஈடுபடவில்லை. வேறு யாருடைய பார்வையிலோ சாதனையாளனாக இருக்க வேண்டும் என்று என் வாழ்வில் நினைத்ததேயில்லை. சொல்லப்போனால், பல ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபட்டபோது யாருடனும் எந்தப் போட்டியும் வைத்து வெற்றி பெற்றுக் காட்டக்கூட நினைத்ததில்லை. எது செய்தாலும் அதில் கிடைத்த ஆனந்தக் கிளர்ச்சிக்காகத்தான் செய்தேன்.