திருமதி. விஜயகுமாரி, நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் மஹாசமாதி அடைந்தார். ஒர் ஆன்மீக சாதகரின் உச்சபட்ச நோக்கமே மஹாசமாதி அடைவதுதான். நம் கலாச்சாரத்தில் இந்நிலையை எட்டிய பல யோகிகளின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறிவோம். முழு விழிப்புணர்வுடன் விஜி அம்மா, அவர்தம் உடலை நீத்த பிறகு, 12 மணி நேரம் கழித்து, 2000க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் விஜி அவர்களது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஆன்மீகப் பாதையையும் அதன் செயல்முறைகளையும் பொருத்தவரை, வார்த்தைகளால் ஓரளவு மட்டுமே விவரிக்க இயலும். ஒரு நிலையைக் கடந்த பின்னர், ஆன்மீக செயல்முறைகளையும், அதன்மூலம் நடக்கும் நூதன நிகழ்வுகளையும் விவரிக்க வார்த்தைகள் இருப்பதில்லை. இதனால்தான் உள்நிலை பரிமாணம் சார்ந்த பல அனுபவங்களைப் பற்றி பேசுவது தேவையற்ற சர்ச்சைகளுக்கு உள்ளாகிறது. அவற்றை அனுபவத்தில் உணர்வோருக்கு அவை உண்மையென்று தெரியும். அவற்றை உணர முடியாதவர்கள், உணராதவர்கள்,‌ அத்தகைய நிகழ்வுகளை தங்கள் தர்க்கரீதியான புரிதலுக்குள் கொண்டு வர முடியாதவர்களாய் இருக்கின்றனர். நிச்சயமாய், சில விஷயங்கள் நம் தர்க்க அறிவிற்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கின்றன. அவற்றில் மஹாசமாதியும் ஒன்று.

இந்து கலாச்சாரம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது மஹாசமாதி. பழங்காலம் முதல் சமீபகாலம் வரை பல்லாயிரம் யோகிகளும் ஞானிகளும் விழிப்புணர்வாக தங்கள் உடலை நீத்திருக்கின்றனர். சமீபகால உதாரணங்கள் சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமென்றால்: 20ம் நூற்றாண்டில் மிகப் பிரசித்தி பெற்ற இந்திய யோகிகளுள் ஒருவரான பரமஹம்ச யோகானந்தர், 1952ல் மஹாசமாதி அடைந்தார். அதே செயல்முறையின் மூலம் சுவாமி நிர்மலானந்தர் மிக சமீபமாக 1997ல் உடல் நீத்தார்.

1997 ஜனவரியில் விஜி அம்மா மஹாசமாதி அடைந்த சில நாட்களுக்குப் பிறகு பேசிய சத்குரு அவர்கள், "பொதுவாக இத்தகைய நிகழ்வுகள் பழங்கால முனிவர்கள், சித்தர்களோடு முடிந்துவிட்டன என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆன்மீகம் என்பது உச்சபட்ச சாத்திய நிலையில் இன்றளவும் மிகுந்த உயிர்ப்புடன் இருக்கிறது. மனிதர்களுக்கு எத்தகைய வாய்ப்பு இருக்கிறதென அவர்களுக்குத் தெரியட்டும், ஒரு மனிதரால் பிறப்பையும் இறப்பையும்கூட தன் கைவசப்படுத்த முடியும். இது சரியா தவறா என்று நானோ அல்லது வேறெவரோ கேள்வி கேட்க இயலாது," என்றார்.

விஜி மா விடைபெற்றது ஈஷா யோக மையத்திலுள்ள அனைவருக்கும் பெருந்துயரை ஏற்படுத்திய போதிலும், அது முற்றிலும் எதிர்பாராத விதத்தில் நடந்த நிகழ்வு அல்ல. நமக்குப் பிரியமான ஒருவரை இழப்பதற்கு பொருத்தமான நல்ல நேரமும் இல்லை, அந்த இழப்பை தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்க வழியும் இல்லை. சத்குரு அதுகுறித்து மேலும் பேசியபோது, "அவளுக்குப் பிரியமான சிலருடன் அவள் இதைப் பற்றி பலமுறை பேசியிருக்கிறாள். எவ்வித பற்றுதலுமின்றி முழு விழிப்புணர்வுடன் தன் உடலைவிட்டு விடைபெற வேண்டுமென்ற தனது தீவிர ஆசையை அவள் வெளிப்படுத்தி இருக்கிறாள். என்னிடமும் அவள் 'நான் விடைபெற விரும்புகிறேன்,' என்று மந்திரம்போல இடைவிடாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்," என்றார்.

நடந்த உண்மைச் சம்பவம் என்ன என்று துளிகூட புரிந்து கொள்ளாமல், வேண்டுமென்றே பிரச்சனை செய்ய விரும்புபவர்கள், மிக மகத்துவமான இந்நிகழ்வை பொய்களால் ஜோடித்து, திரித்து கூறுவது நாம் வாழும் காலத்தின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனமாக இருக்கிறது. விஜி மா மஹாசமாதி நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகுதான் இதில் சூழ்ச்சி இருக்கிறதென்று குற்றம்சாட்டி காவல்துறையில் சிலர் வழக்குத் தொடுத்தனர். மனித கண்ணியத்திற்கு மதிப்பளிக்காமல் செய்யப்பட்ட இந்த அநாகரிக செயல்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தினாலும், சட்ட அமலாக்கத் துறையினரை முழு விசாரணை நடத்தச் சொல்லி ஈஷா வரவேற்றது. விஜி அம்மா மஹாசமாதி அடைந்தது குறித்து நடந்த விசாரணையில் சந்தேகத்திற்கு இடமே இல்லை என்று இறுதியில், 1999ல், நீதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்தது.

விஜி அம்மா மஹாசமாதி அடைந்ததைப் பற்றி சத்குரு பேசியபோது, "வாழ்நாள் முழுவதும் ஆன்ம சாதனையில் ஈடுபடும் தேர்ந்த யோகிகள்கூட இந்நிலையை அடையப் போராடுவார்கள். உடலுக்கு காயம் ஏற்படுத்தாமல் உடலைவிட்டு உயிரை வெளியே வீசுவதற்கு வேறு விதமான தன்மை தேவை," என்றார். இது ஒவ்வொரு ஆன்மீக சாதகரின் உச்சபட்ச இலக்கு. அதை அடைவோர் மிகுந்த மதிப்புடன் போற்றப்படுகின்றனர், ஏனென்றால் இதற்கு அதீத ஒழுக்கமும் பக்தியும் தேவை.