காவேரி நினைவேடுகள்: சத்குருவின் காவேரிப் பயணம்: நாள் 6
இப்பயணத்தின் முதல் நாளில் இருந்து பயணித்த பங்கேற்பாளர்கள் இன்று விடைபெற்றுக் கிளம்புகின்றனர். அவர்களின் பகிர்தல்களுடன் காலை ஆரம்பம். இன்று மாலை பெங்களூருவில் திரிபுர வாஸினி மாளிகை மைதானத்தில் பொதுமக்கள் கூட்டம் நடைபெறும்.

முதல் கட்டப் பயணம் இன்று முடிவடைகிறது
பங்கேற்பாளர் பகிர்தல்கள்:

"இங்கு வரும்போது நான் மிகவும் இறுக்கமான மனிதராக வந்தேன். மரத்தின் கீழ் அமர்வதோ, படகில் போவதோ, மண்ணைத் தொடுவதோ, எதற்குமே எனக்கு விருப்பம் இருக்காது. இப்போது… நான் மண்ணில் நடக்கிறேன், மரத்தடியில் ஆனந்தமாக அமர்கிறேன், டென்ட்டில் சிலந்தி இருந்தால்கூட அது எனக்குப் பிரச்சினையாக இல்லை." - லியோன், ஜெர்மனி.
நேபாளத்தில் இருந்து வந்த ரஞ்சன் என்ற இளைஞர், "நேபாளத்தில் அடர்ந்த வனப்பகுதி போன்ற இடத்தில் இருந்து வருகிறேன். நான் வளர்ந்ததும்கூட அதுபோன்ற இடங்களில்தான். ஆனால் இங்கு நடப்பது முற்றிலும் வித்தியாசமான ஒன்று. வெட்டவெளியில் காம்ப் செய்வது போன்ற பயணங்கள் மேற்கொண்டால், வயதானவர்கள் எல்லாம் அதில் தாக்குப்பிடிக்க முடியாது. தினமும் பேருந்தில் இவ்வளவு தூரம் பயணம்செய்வது, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் தங்குவது, 10-12 நேரத்திற்குள் பெட்டிபடுக்கைகளை கட்டிக்கொண்டு அடுத்த இடத்திற்கு பயணிப்பது இதெல்லாம் முடியாத காரியமாக இருக்கும். இவ்வயதில் எனக்கேகூட அது மிக சிரமமாக இருக்கும். ஆனால் இங்கு கலைப்பு என்றால் என்னவென்றே தெரியாததுபோல் தினமும் புத்துணர்வோடு திளைக்கீறோம். இது சத்குருவின் அருளால் மட்டுமே சாத்தியமாகும்"

"எனக்கு 73 வயதாகிறது. 18 ஆண்டுகளாக ஈஷாவுடன் தொடர்பில் இருக்கிறேன். டென்னஸியில் உள்ள ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயன்சஸ்"-ல் ஆசிரமவாசியாக உள்ளேன். ஒவ்வொரு முறை சத்குரு என்னைப் பார்க்கும் போதும், "அதோ 93 வயது பெண்மணி, அதோ 80 வயது பெண்மணி" எனும்போது எனக்கே என் வயது குழம்பிப் போகிறது. காவேரி கூக்குரல் இயக்கம் விரிவதை அருகில் இருந்து பார்க்கவும், எல்லையற்ற சக்தி மற்றும் புத்துணர்வின் உருவமாய் ஒவ்வொரு நாளும் சத்குருவை தரிசிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்! இப்பயணத்தின் அடுத்த பாகத்திலும் நான் பயணிக்கப் போகிறேன். அதன்பிறகு நடக்கவிருக்கும் காசி புனிதப் பயணத்திலும் கலந்து கொள்ளப் போகிறேன். அவரின் அருளோடு எனக்கு எல்லாம் சாத்தியமே!"
சென்னையில் இருந்து வந்த கண்ணன் அவர்கள், "மிக அற்புதமான பயணமாக அமைந்தது. என் வாழ்நாளில் இதை மறக்கமாட்டேன். காவேரியைக் காக்கும் பயணத்தில் நானும் பங்கெடுத்தேன் என்று பெருமையாக என் பேரப் பிள்ளைகளிடம் ஒருநாள் நான் பெருமை பேசுவேன். எல்லோரும் காவேரிக்காக நிதி திரட்டுவதில் ஈடுபட வேண்டும்"
பங்கேற்பாளர்களில் பலர் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு பணம் திரட்ட அவரவர் இயக்கங்களைத் துவங்கிவிட்டார்கள். அக்டோபர் 10-ற்குள் 1 லட்சம் மரங்களுக்கு நிதி திரட்டவேண்டும் என்று நினைத்து ஒருவர் தன் நிதி திரட்டும் பக்கத்தை சில தினங்களுக்கு முன் ஆரம்பித்தார். ஆனால் இன்றே 60,000 மரங்களுக்கு மேல் நிதி சேர்ந்துவிட்டதாம்! 1 லட்சம் மரங்களுக்கு நிதி திரட்ட இன்னொருவருக்கு 77,000 மரங்களுக்கான நிதி சேர்ந்துவிட்டதாம்! தன் பிறந்தநாளிற்குள் 25,000 மரங்களுக்கு பணம் திரட்டவேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்திருக்கிறார். இன்னும் 3-4 நபர்கள் இம்முயற்சியின் கட்டமைப்புப் பணிகளுக்கு நிதிஉதவி செய்வதாக கூறியிருக்கிறார்கள். இயற்கையோடு பயணித்த இவர்கள் ஒவ்வொருவருக்கும் இனி அவர்கள் வாழ்வில் இயற்கையோடு தொடர்பு கொள்ளும் விதமே மாறிவிடும் என்று தோன்றுகிறது!
காலை 5 மணிக்கே நமது அன்னபூரண அணி தம் வேலையைத் துவங்கிவிடுவார்கள். சுவாமி தேவபாஹூ, மா சந்திரஹாசா, முத்து அண்ணா, இரண்டு துணை சமையல்காரர்கள் மற்றும் இரண்டு தன்னார்வத் தொண்டர்கள். பங்கேற்பாளர்கள் சேர்ந்த 200 பேருக்கு உணவு சமைக்கிறார்கள் - 3 வேளை. ஒவ்வொரு முறை சமைத்ததும் பாத்திரங்களை துலக்கி மீண்டும் ஏறக்கட்டிவிட்டு, பங்கேற்பாளர்களோடு பயணித்து அடுத்த வேளைக்கு திரும்பவும் அனைத்தையும் பிரித்து வைத்து சமைக்கவேண்டும். அப்போதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் வகைவகையாக பல வகை உணவுகளை தயாரித்து வழங்கியிருக்கிறார்கள். நினைக்கவே மலைப்பாக உள்ளது!

காலை 9:20, ETV கன்னடா சேனலுக்கு சத்குரு நேர்காணல் கொடுக்கிறார். பேட்டி எடுக்க வந்திருப்பவர் அனுஸ்ரீ. "சத்குருவுடன் விளையாட்டாக ஒரு நேர்காணல்" என்ற தலைப்பிற்கு இணங்க உரையாடல் விளையாட்டாய் நிகழ்கிறது…

அங்கு விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வந்த இளைஞர்களுடன் சத்குருவும் சிறிது நேரம் விளையாடினார்.
|
|
|
|
|
|
இப்போது உடன் பயணிக்கும் பைக்கர் "நவீன விவசாயி" சஷிகுமாருடன் சத்குரு உரையாடுகிறார். "விவசாயத்தின் எதிர்காலம் என்ன? நம் மக்களுக்கு நம்மால் உணவு தயாரிக்க முடியாமல் போகுமா?"

சத்குரு கூறுகிறார், "உணவு விளைவிப்பது பெரும் பிரச்சினையாக இருக்காது… நம் விவசாய முறைகளை நாம் மாற்றினால்! இப்போது விவசாயம் செய்யப்படும் 3ல் 1 பங்கு நிலத்தில், 5ல் 1 பங்கு உழைப்பில் நமக்குத் தேவையான உணவை நாம் தயாரித்துவிட முடியும். நம் விவசாயிகள் எப்படியோ பாடுபட்டு நமக்கு இதுவரை உணவளித்துவிட்டார்கள். ஆனால் இனி இதை நாம் மாற்றவேண்டும். மண்வளத்தை உயர்த்தி, இயற்கையோடு ஒன்றியைந்த நவீன தொழில்நுட்பங்கள் நாம் பயன்படுத்த வேண்டும். காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு இதற்கான பயிற்சிகளையும் அளிக்கிறோம். 2 மாநிலங்களிலும் விவசாய பயிற்சி முகாம்கள் நடத்தி, முறையான பயிற்சி நிலையமும் நிறுவ உள்ளோம். மாண்டியாவில் நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையில் அனைத்து விவசாயத் தலைவர்களும் இதற்கு ஆதரவாக செயல்பட ஒன்று சேர்ந்துள்ளனர். பெங்களூருவில் 120 ஏக்கர் நிலத்தில் விவசாயப் பயிற்சி நிலையம் உருவாக்க உத்தேசித்துள்ளோம்"
காலை 10:15, ETV தெலுங்கு சேனலுக்கு சத்குரு நேர்காணல் கொடுக்கிறார். பேட்டி எடுக்க வந்திருப்பவர் தனஞ்ஜெய் அவர்கள்.

11:30 மணிக்கு மோட்டார் சைக்கிள் ராலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கானோர் திரண்டுள்ளனர். டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அகுல் பாலாஜி அவர்கள், இந்தியாவின் பைக்கிங் சமூக உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்
|
|
|
|
|
|
ராலியில் கலந்து கொள்பவர்கள் தவிர, பலர் காவேரி கூக்குரல் பிரச்சார அட்டைகளை ஏந்தி சாலையின் இருபக்கமும் ஆதரவு தெரிவித்து நிற்கின்றனர். இதில் ஒரு சிறுமி காவேரி கூக்குரலுக்கு ஆதர்வு தெரிவிக்கும் விதமான உடையை தயார் செய்து அணிந்து வந்திருக்கிறாள்.
Subscribe


ராலி ஆரம்பம்…


|
|
|
|
|
|
12:30 மணியளாவில்,ராலி நிறைவு பெறுகிறது

இன்றைய ராலியில் பார்த்த வித்தியாசமான முயற்சிகள்… இவர் பெயர் ஷர்வானி ஹெக்டே. இவர் ஒரு யக்ஷகானா நாட்டியக் கலைஞர். 22 கிலோ எடையுள்ள இந்த உடையலங்காரத்துடன் இன்றைய மோட்டார் சைக்கிள் ராலியில் இவர் கலந்து கொண்டார். அடுத்தவர் நம் கடலைக்கடை அன்பர்.


நம் தமிழ்நாட்டில் தங்கள் வீட்டு விசேஷங்கள் நடைபெறும் இடத்தில், மேடையில், வரவேற்பிடத்தில் என பல இடத்திலும் காவேரி கூக்குரல் பிரச்சார அட்டைகளை நம் தன்னார்வத் தொண்டர்கள் வைக்கத் துவங்கிவிட்டார்கள். இவர் அடுத்தபடியாக தன் திருமண அழைப்பிதழிலும் அம்முயற்சியை எடுத்துள்ளார். அழைப்பிதழ் எதற்காக என்பதுதான் சற்று சந்தேகமாக உள்ளது. வாழ்க தன்னார்வம்! வளர்க தமிழ்ஆர்வம்!
(தமிழ் மக்களின் ஆர்வத்தை குறிப்பிடுகிறோம்)

மாலை 4:45 பொதுமக்கள் நிகழ்ச்சிக்குக் கிளம்புவதற்கு சத்குரு தயாராக இருக்கிறார். கர்நாடகத்தில் நடைபெறும் கடைசி நிகழ்ச்சி இது. அவர் உடையில், "என் இதயம் காவேரிக்காகத் துடிக்கிறது" என்று எழுதியிருக்கிறது. அதை சுட்டிக்காட்டி தன் இதயத்தைத் தட்டிக் காண்பித்தார்.
|
|
|
விழா நடைபெறும் இடத்தில் மக்கள் கூடிவிட்டார்கள். கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
|
|
|
பாடல் இசைப்பவர் திரு.வாசு தீக்ஷித். கூடியிருக்கும் மக்களின் விருப்பத்திற்கேற்ப தற்கால பிரபல பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார் திரு.வாசு தீக்ஷித்
|
|
|
5:05க்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சத்குரு தன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் காவேரி கூக்குரல் அட்டைகளை காண்பித்து சத்குருவை ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர்.

சத்குருவிற்காக காத்திருந்து அவர் வரும்போது தான் வரைந்த ஓவியத்தையும், 1 மரம் வளர்க்க ₹42ம் கொடுக்கும் 4 வயதே ஆன கேனிஷா வெர்மா. 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த நதிகளை மீட்போம் பேரணியிலும் இவர் கலந்துகொண்டாராம்! அருகில் இருப்பவர் ஈஷானி காஷ்யப். பெற்றோர்கள் கொடுத்த ஒரு வருட பாக்கெட் மணியை அப்படியே இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளார்.
|
|
|

ஆச்சாரியா கல்வி நிறுவனத்தில் பயிலும் 70க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் இதில் பங்கெடுக்க வந்திருக்கிறார்கள். அந்த கல்வி நிறுவனத்தின் NCC மற்றும் NSS மாணவர்கள் வேம்பு, ஆலமரம், ரப்பர் போன்ற மரங்களின் விதை உருண்டைகளை (விதைகளை பாதுகாப்பாக மண்உருண்டைக்குள் வைத்து விதைக்கும் முறை) தும்கூர் வனநிலத்தில் வன அதிகாரிகளின் உதவியோடு ஆகஸ்ட் 31, 2019ல் நட்டுள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர்கள்
மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு.எட்டியூரப்பா அவர்கள்
பயோகான் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் நிறுவனர் திருமதி கிரண் மஜூதார் ஷா அவர்கள்
ராஜமாதா பிரமோதா தேவி அவர்கள்
மாண்புமிகு பெங்களூரு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. P.C.மோகன் அவர்கள் மாண்புமிகு மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. C.T.ரவி அவர்கள்
டாக்டர் M.A.ஷங்கர் அவர்கள்



|
|
|

கிட்டத்தட்ட 6,000 மக்கள் குழுமியிருக்கும் ஹாலில், அனைவரையும் சந்திக்கும் விதமாக ஹாலின் கடைசிவரை சத்குரு நடந்து சென்றுவிட்டு வந்தார்.

டாக்டர் M.A.சங்கர் அவர்கள், "௳ரங்கள் வளர்த்தால், வேரின் வழித்தடத்தில் மழைநீர் மண்ணை ஊடுறுவி கீழே செல்ல வழிசெய்யும். இது நிலத்தடி நீர்மட்டம் உயர வழிசெய்யும். மரத்தில் இருந்து உதிரும் இலை தழைகள் மண்ணின் வளத்தை அதிகரிக்கும்" என்று வேளாண்காடுகளின் பயங்களை எடுத்துரைத்தார்.
நதிகளை மீட்போம் வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான கிரண் மஜூம்தர் ஷா அவர்கள், ஒருவேளை காவேரி நம்மோடு பேசினால், என்ன கூறுவாள்? "என் காடுகளை அழித்துவிட்டீர்கள், என் நீரில் மாசு கலந்துவிட்டீர்கள், என் மணற்படுக்கைகளை தோண்டிவிட்டீர்கள். இப்படி பல விதத்திலும் என்னை தவிக்கவிட்டு விட்டீர்கள். மீண்டும் என்னில் தண்ணீர் ஓடட்டும், விவசாயிகளும் மக்களும் நலமும் வளமும் பெறட்டும்." என்று கேட்பாள் அல்லவா? காவேரி உயிர்ப்போடு இன்னும் பல காலம் வாழவேண்டும். உங்கள் மனதையும், செல்வத்தையும் காவேரிக்காக திறந்து வையுங்கள்!
மதிப்பிற்குரிய மைசூரின் ராஜமாதா திருமதி பிரமோதா தேவி அவர்கள் காவேரியைக் காக்க கர்நாடக மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். "காவேரியைக் காக்கத் தேவையான 242 கோடி மரங்களை நடுவதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்று சத்குரு அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் அனைவரும் மனம் வைத்தால் மூன்றாண்டுகளிலேயே அப்பணிக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்க முடியும்" என்றார்.
மாண்புமிகு மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திரு C.T.ரவி அவர்கள், எல்லோரும் நன்கறிந்த பொன்முட்டையிடு வாத்தை வயிற்றைக் கிழித்துப் பார்ப்பதுபோல், காவேரி அன்னையை பதம் பார்த்துவிட்டோம். "பல்லாயிரம் ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும் வளமும் வாழ வழியும் கொடுத்தவள் காவேரி. ஆனால் பெருகும் நம் பேராசையால் அவள் அழியும் நிலைக்கு வந்துவிட்டாள். நம் முட்டாள்த்தனமான செயலின் பலன்களைத்தான் இப்போது அனுபவிக்கிறோம்" என்றார்
மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. B.S.எட்டியூரப்பா அவர்கள், கர்நாடக மக்களிடையே காவேரி கூக்குரல் பெருத்த வரவேற்பும் ஆதரவும் பெற்றிருப்பதாகக் கூறினார். "சத்குருவின் மோட்டார் சைக்கிள் ராலி 6 கோடி கன்னட மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனது அரசாங்கம் உங்கள் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளிக்கும். வனங்களின் பரப்பளவை அதிகரித்து, காவேரித்தாயைக் காப்பதே எங்கள் முதன்மையான கடமையாக கருதுகிறோம். அதனால் இந்த இயக்கத்திற்கு எல்லா விதத்திலும் நாங்கள் துணை நிற்போம்" என்றார்.
சத்குரு:
உலகில் உள்ள எல்லா நதிகளில் ஓடும் நீரைவிட 800% அதிகமாக நீர் பிடித்துவைக்கும் திறன் கொண்டது நம் மண். "உண்மையில் மண்தான் தண்ணீரின் சேமிப்பிடம். மண்ணில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கவேண்டும். மண்ணில் நீர்ச்சத்து அதிகம் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மண்ணில் உயிர்மச்சத்து அதிகமாக இருக்கவேண்டும்." இதை அதிகரிக்க ஒரேவழி மரம் மற்றும் விலங்குகளின் கழிவுகள்தான். காவேரி வடிநிலத்தின் தண்ணீர் பிடித்து வைக்கும் ஆற்றலை அதிகரிக்க காவேரி கூக்குரல் இவ்வழியைத்தான் பின்பற்றும்.
ஒவ்வொரு ஆண்டும் 7500 கோடி டன் அளவிர்கு மண்ணரிப்பு ஏற்படுகிறதாம். இந்நிலை நீடித்தால், 60 ஆண்டுகளில் பயிர் விளைவிக்க எங்குமே மண் இல்லாமல் போய்விடும். உலகின் பல இடங்களிலும் இந்நிலை நிலவுகிறது ஆனால் நம் நாட்டில் இது இன்னும் அதிகமாக நடக்கிறது, ஏனெனில் பலவற்றை நாம் கவனத்தில் வைக்கத் தவறிவிட்டோம்.
இன்றோடு கர்நாடகத்தில் இந்தப் பேரணி நிறைவுக்கு வருகிறது. இதற்கு முழு ஆதரவு அளித்த முதல்வர் எட்டியூரப்பா அவர்களுக்கும்; கர்நாடக காவல்துறையின் அற்புதமான ஈடுபாட்டிற்கும்; மக்களுக்கு இதைக் கொண்டுசேர்க்கும் பணியில் அயராது செயல்பட்ட கர்நாடக ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து சத்குரு தன் உரையை முடித்துக் கொண்டார்.
7:45 மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு.எட்டியூரப்பா கொடியசைத்து சத்குருவின் இரண்டாம் கட்ட பயணம் தொடர வாழ்த்துத் தெரிவித்தார். இங்கிருந்து சத்குரு அவர்கள் புதுடில்லி செல்கிறார்.
ஐ.நா.பாலைவனமாக்குதலை தடுக்கும் மாநாடு ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் செல்கிறார். இரண்டு நாளில் தமிழ்நாட்டில் பயணம் தொடரும்.


நாள் 6 நிகழ்வுகளின் தொகுப்பு
மேலும் படிக்க...
விவசாயிகள் சேர்க்கை | தன்னார்வ செயல்கள் | பிரபலங்கள் | ||
|---|---|---|---|---|
சத்குரு வீடியோ | கட்டுரைகள் | நாளிதழ் செய்திகள் | ||
சேனல் செய்திகள் | சிந்தனைக் கருவூலம் | விவசாயி வெற்றிக் கதைகள் |






























