நதிக்கரைகளில் மரப்பயிர் சாகுபடி: உண்மையில் மரங்கள் எப்படி உதவுகிறது?
இந்தியாவின் சில பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், கடும் வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் பகுதிகளும் இருக்கிறது. இந்த இரண்டையுமே நாம் தவிர்க்க முடியும். எப்படி? நம் நதிகளின் கரைகளில் மரங்களின் அடர்த்தியை அதிகரிப்பதே இதற்கு தீர்வு.


பிரவீணா ஸ்ரீதர்:
நதிகளின் நீர் வடிநிலப் பகுதிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலத்தின் மேற்பரப்பிலும் நிலத்தடியிலும் நீரோட்டத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள உதவும். இவ்வாறான நீடித்த நீரோட்டத்தின் மூலம் துளிகளாக சேரகமாகும் நீர் மண்ணுக்குள் ஊடுருவி இறங்குவதை மரங்களின் வேர் மண்டலங்கள் மேம்படுத்துவதால் தண்ணீரை சேமிக்க மரங்கள் மிக எளிமையான, பயனுள்ள தீர்வாகிறது.
இதன் மூலம் நதிகளின் முக்கிய நீராதாரமாக நிலத்தடியில் சேகரமாகும் நீர்மட்டத்தின் அளவு கணிசமாக உயர்கிறது. இப்படி நிலத்தடியில் சேமிக்கப்படும் தண்ணீர், நிலத்தடி நீருக்கும் ஆற்று நீருக்கும் இடையே உள்ள தொடர்பினால், நீண்ட காலத்திற்கு சொட்டு சொட்டாக ஆற்றில் தொடர்ந்து கலந்துகொண்டே இருக்கிறது.
மண்ணுக்குள் தண்ணீர் ஊடுருவும் வேகத்தை மரங்கள் எப்படி அதிகரிக்கின்றன?
உயிருடன் இருக்கும் மற்றும் மக்கிப்போன மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் 'மேக்ரோ-போர்ஸ்' எனப்படும் ஒரு பாதை போன்ற நுண்துளைகளை உருவாக்குகின்றன. சாதாரணமாக மண்ணில் நீர் உறிஞ்சப்படுவதை விட, இந்த வேர் பாதைகள் வழியாக தண்ணீர் பல நூறு மடங்கு வேகமாக மண்ணில் இறங்கும். அதுமட்டுமின்றி, மரத்திலிருந்து விழும் இலைச்சருகுகளும், வேர்களும் மக்கி உருவாகும் இயற்கை கரிமப் பொருள், மண்ணின் தரத்தை உயர்த்தி தண்ணீர் அதிகளவில் மண்ணில் உறிஞ்சப்படுவதற்கு வழிவகுக்கிறது.
சமீபத்தில் மழை பெய்யாத போதும் ஆற்றுக்கு நீர் எங்கிருந்து வருகிறது?
ஒரு ஓடை அல்லது a href="https://isha.sadhguru.org/ta/wisdom/video/tamilnattil-vegamaga-azhinthuvarum-arugalai-eppadi-kappathu">ஆற்றில் ஓடும் தண்ணீரை, அடிப்படை நீர்வரத்து (Baseflow) மற்றும் ஆற்று நீரோட்டம் (Streamflow) என்ற தொழில்நுட்பப் பெயரில் அழைக்கிறோம். ஆற்றங்கரைகள் அல்லது ஆற்றுப் படுகைகளின் வழியே நிலத்தடி நீர் கசிந்து ஆற்றுக்குள் வருவதால் அடிப்படை நீர்வரத்து உருவாகிறது. மழை குறைவாக இருக்கும் வருடத்தின் வறட்சிப் பருவங்களில், ஆற்றில் நீர் தொடர்ந்து ஓடுவதற்கு இந்த அடிப்படை நீர்வரத்து மட்டுமே முதன்மையான அல்லது ஒரே நீராதாரமாக இருக்கிறது.
Subscribe
ஆற்றின் மேற்பரப்பில் ஓடும் நீர் கிட்டத்தட்ட எப்போதுமே நிலத்தடி நீருடன் இணைந்தே இருக்கிறது. இது ஆற்று நீரோட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகவும் உள்ளது. பொதுவாக, ஒரு வருடம் முழுவதும் ஆறு வற்றாமல் ஓடுவதற்கு இந்த அடிப்படை நீர்வரத்தே போதுமானதாக இருக்கும். புயல் வரும் காலங்களை தவிர்த்து, ஆற்றில் தொடர்ந்து நீர் ஓடிக்கொண்டிருப்பதற்கு நிலத்தடி நீரிலிருந்து அடிப்படை நீர்வரத்தாக கிடைக்கும் மீள் நிரப்பலே (recharge) முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
காடுகளை வளர்ப்பதன் மூலம் ஆற்றில் ஓடும் ஒட்டுமொத்த நீரளவும் சீரடைவது மட்டுமின்றி, நீரின் தரமும் கணிசமாக மேம்படும். ஏனென்றால் நம்முடைய ஆறுகள் மாசடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் தான். மரங்களின் பசுமைப் போர்வையை உருவாக்குவதன் மூலம், மரங்களின் வேர் மண்டலம் இந்த விவசாய ரசாயனங்கள் ஆற்றில் கலப்பதற்கு முன்பே, மண்ணிலிருந்தும் வழிந்தோடும் நீரிலிருந்தும் அவற்றை வடிகட்டுவதை உறுதி செய்கிறது.

ஆனால், மரங்கள் வெறுமே நீர் ஆதாரத்தை அதிகரிப்பதில் மட்டும் உதவுவதில்லை — அவை 'ஆவியாதல்' மூலம் மழைப்பொழிவு முறையை சீரமைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த முறையில், நீரானது நிலப்பரப்பிலிருந்து ஆவியாதல் மற்றும் நீராவிப்போக்கு மூலம் வளிமண்டலத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு உருவாகும் நீராவியானது, அப்பகுதியை கடந்து செல்லும் மழை மேகங்களை மேலும் அடர்த்தியாக்கி மரங்கள் நிறைந்த பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மழை பெய்ய செய்கிறது. இதுவும் ஆற்று நீரோட்டம் பெருகுவதற்கு வழிவகுக்கிறது.
பில் மோலிசன் எழுதிய Trees and their Energy Transactions என்ற புத்தகத்தில், ஆற்றங்கரைகளில் உள்ள மரங்களின் தாக்கத்தைப் பின்வரும் அறிவியல் ரீதியான வழியில் விவரிக்கிறார்: "மழை கருவிகளால் அளவிடப்படுவதை விட, ஒட்டுமொத்த மழைப்பொழிவை கணிசமாக அதிகரிப்பதில் மரங்கள் வகிக்கும் பங்கு பெரும்பாலும் கவனிக்கப்படாமலே இருக்கிறது. காடுகளிலும் தனியார் நிலங்களிலும் 40 அடி உயரம் வரை வளரும் மரங்கள் ஆங்காங்கே அடர்த்தியாக இருக்கும்போது, அவற்றின் மீது வீசும் காற்றானது காற்று சுழற்சிகள் என்ற அமைப்பை உருவாக்குகிறது. இது அப்பகுதியில் மீண்டும் மீண்டும் மழை பெய்ய காரணமாக அமைகிறது."
பல தெற்காசிய நாடுகளைப் போலவே, இந்தியாவும் பருவமழை மூலமாக தான் கணிசமான மழையைப் பெறுகிறது. வெப்பச்சலன மழை போல் இல்லாமல், இந்த மழை பருவகால மாற்றத்திற்கு ஏற்ப மாறும் அமைப்பை கொண்டது. பல்வேறு மலைத்தொடர்கள் அமைந்துள்ளதால், சில பகுதிகள் அந்த மலைத்தொடர்களின் காற்று மறைவுப் பகுதியாகவோ அல்லது மழை மறைவுப் பகுதியாகவோ அமைகின்றன.
மழை மறைவுப் பகுதிகளில், அதிலும் குறிப்பாக வறட்சி நிலவும் வருடங்களில், உள்நிலப்பகுதிகளில் நீர் நிறைந்த மேகங்களை ஈர்த்து மழைப்பொழிவை ஏற்படுத்துவதில் காடுகளின் திறன் மிகவும் முக்கியமானதாகிறது. காடுகளிலிருந்து வெளியேறும் நீராவி, மழைப் பொழிவில் ஏற்படுத்தும் தாக்கத்தை செயற்கைக்கோள் வழியே கவனிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது: பெரும்பாலான வெப்பமண்டலப் பகுதிகளில், குறைந்தளவு மரங்கள் இருக்கும் பகுதிகளோடு ஒப்பிடுகையில், அடர்ந்த காடுகளை கடந்து செல்லும் காற்று, பத்து நாட்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கு அதிக மழையை தருகிறது.
அதேபோல, காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போதும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஈரப்பதத்தில் வெறும் 10 சதவீதம் அதிகரித்தால் கூட, மழை பொழியும் அளவு இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கிறது.
நீர்நிறைந்த மேகங்களை ஈர்த்து மழை பெய்ய வைப்பதில் மரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. காடுகள் அழியும்போது, ஆற்றங்கரை சமவெளிகளிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழையின் அளவும் குறைந்துவிடும். மரங்களும் காடுகளும் வெளியிடும் பூஞ்சைக் காளான்களின் வித்திகள், மகரந்த துகள்கள், நுண்ணுயிரிகள் போன்ற உயிரியல் துகள்கள் வளிமண்டலத்தில் கலந்து, மழை மேகங்களை மேலும் அடர்த்தியாக்கி தீவிர மழைப்பொழிவுக்கு உதவுகின்றன.
காற்றில் நீராவி போதுமான அளவு நிரம்பும் போது வளிமண்டல ஈரம் நீராக மாறத் துவங்கும். அதேவேளையில், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் அதற்கான பரப்பை அமைத்துக் கொடுக்கும்போது, இந்த நீர் ஒடுங்கும் நிகழ்வு மிக விரைவாகவும் எளிதாகவும் நடக்கிறது.
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தில் இருந்து மரங்கள் தண்ணீரை அறுவடை செய்யும் நிகழ்வும் நடக்கிறது. மரங்களின் பசுமை போர்வை காற்றில் உள்ள ஈரத்தை நீர்த்துளிகளாக மாற்றிச் சேர்க்கும் இந்த நுட்பம், பெரிதாக பேசப்படாத ஒரு முக்கிய அம்சமாகும். இலைகளின் மூலம் நடக்கும் இந்த நீரோடுதல் நிகழ்வு, சுற்றுச்சூழலில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து அதிக அளவிலான தண்ணீரை சேகரித்து தருகிறது.
பொதுவாக நிலத்தில் பெய்யும் மழையில் குறைந்தபட்சம் 40% மழையளவு, நிலத்திலிருந்தும் தாவரங்களிலிருந்தும் நீர் ஆவியாகி மேலே செல்வதாலேயே உருவாகிறது. ரியோ டி பிளாட்டா நதிப்படுகை போன்ற சில பகுதிகளில் இது இன்னும் அதிகமாக இருக்கிறது; அங்கு பெய்யும் மழையில் 70%-க்கும் அதிகமான மழைக்கு அமேசான் காடுகள் வெளியிடும் நீராவியே முக்கியக் காரணமாகிறது.
சுருக்கமாக சொன்னால், மரங்களும் காடுகளும் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் மழை பெய்யும் காலங்களில் தரைமேல் ஓடும் நீரின் அளவும், நிலத்தடியில் சேகரமாகும் நீரின் அளவும் மேம்படுவதால், மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீரோட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரின் அளவும் அதிகரிக்கிறது.
பிரவீணா ஸ்ரீதர், ஈஷா அறக்கட்டளையின் ‘நதிகள் மீட்போம்’ இயக்கத்தின் முதன்மை கொள்கை வல்லுநராக செயல்பட்டு வருகிறார். இவர் நீர் மற்றும் அது தொடர்பான துறைகளில் பல வருட வளமான, பன்முக அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் யுனிசெஃப் (UNICEF) அமைப்பின் குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் ஆலோசகராகவும், பிற பலதரப்பு ஏஜென்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆசிரியர் குறிப்பு: இக்கட்டுரை முதன்முதலில் 'ஸ்வராஜ்யா' (Swarajya) இதழில் வெளியானது.
Photo Credit: Image from nationalagroforestrycenter @flickr, Evapotranspiration image (content translated to Tamil) from Wikipedia


