ஜென்குரு அற்பமாகப் பேசியதன் உள் அர்த்தம்...
நமக்காக யாரோ சமைக்க முடியும். ஆனால் நமக்காக யாரோ சாப்பிட முடியாது. நமக்காக யாரோ சம்பாதித்துக் கொடுக்க முடியும். ஆனால் நமக்காக யாரும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுக்க முடியாது. நமக்குத் தேவையானதை எல்லாம் யாரோ செய்து கொடுக்க முடியும். ஆனால் நமக்காக யாரோ ஆனந்தப்பட முடியாது.
ஜென்னல் பகுதி 33
புகழ் பெற்ற பல ஜென் கதைகளையும், ஜென் ஹைக்கூ கவிதைகளையும் படித்திருந்த அந்த மாணவனுக்கு ஜென்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல்! தகுந்த குரு ஒருவரைத் தேடி நாடெங்கும் அலைந்து திரிந்தான். இறுதியில் பலரும் உயர்வாகக் கூறிய ஒரு மடாலயத்தை அடைந்தான். அவன் அங்கே சென்று சேர்ந்தபோது மடாலயத்தின் குரு கட்டிலில் ஓய்வாகப் படுத்தபடி, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மரக்கிளை ஒன்றில் பின்னங்கால்களில் அமர்ந்திருந்த அணில் ஒன்று, ஒரு கொட்டையை உடைத்து வெகு சுவாரசியமாக உண்டு கொண்டிருந்ததைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
குருவை நெருங்கிய அந்த மாணவன், "ஐயா.. எனக்கொரு ஐயம். அதைத் தாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்.." என்று பணிவுடன் கூறினான்.
அவனது வருகையால் கவனம் கலைந்த குரு "கேள்" என்று கேட்டார்.
அந்த மாணவனும் மகிழ்ச்சியுடன், "குருவே, ஜென் என்றால் என்ன?" என்று அவரிடம் கேட்டான்.
"சொல்கிறேன். ஆனால் அவசரமாக எனக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த அற்ப வேலையை மட்டும் எனக்காக நீ செய்து விட்டு வந்துவிடேன்..." என்றார் ஜென்குரு.
சத்குருவின் விளக்கம்:
Subscribe
(தமிழில் சுபா)
இன்றைக்கு அவசரயுகம். எல்லாவற்றையும் தனக்காக வேறொருவர் செய்வாரா என்று பார்க்கும் OUTSOURCING கலாச்சாரம் வளர்ந்துவிட்ட நிலை.
அமெரிக்காவில் இருப்பவர்களுக்காக, இந்தியாவில் பணம் வாங்கிக் கொண்டு பிரார்த்தனை செய்யும் அளவுக்கு இது வளர்ந்துவிட்டது. அதற்காக, நாம் சிறுநீர் கழிப்பதற்கு வேறு ஆளைத் தேடினால், நம் துணி ஈரமாகிவிடும்!
வாழ்க்கைக்கு அடிப்படையானது எதுவாக இருந்தாலும், அதை நாமே செய்தால் தான் நமக்குப் பலன் கிடைக்கும்.
நமக்காக இன்னொருவர் சாப்பிட முடியாது. நமக்காக இன்னொருவர் மூச்சுவிட முடியாது. நம் வாழ்க்கையை இன்னொருவரை வாழச் சொல்லி அனுபவிக்க முடியாது. இயற்கையின் அழைப்புக்காகப் போவது என்ற சிறு வேலையைக் கூட வேறொருவர் நமக்காகச் செய்ய முடியாது.
நான் ஆனந்தமாக இருக்கிறேனா, துன்பமாக இருக்கிறேனா, கோபமாக இருக்கிறேனா, அமைதியாக இருக்கிறேனா என்பது எல்லாமே என்னுடைய செயல் தான். இதை வேறு யார் மீதும் தூக்கிப் போட முடியாது.
நாம் செய்தது நமக்கு எப்படியும் திரும்பி வரும் என்ற ஒரு புரிதல் அடிப்படையாகவே நம் நாட்டில் வேரூன்றி விட்டதால் தான், பெரிய நீதி போதனைகள் இல்லாமலேயே, நாம் ஓரளவுக்குக் கட்டுப்பாடான கண்ணியமான நாடாக இருக்கிறோம்.
நம் நாடு இவ்வளவு ஏழ்மையாக இருந்தாலும், பலவிதமான மோசமான சூழ்நிலைகள் இருந்தாலும், நாம் இன்னும் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாப்பிடாமல் இருக்கிறோம்.
நமக்காக யாரோ சமைக்க முடியும். ஆனால் நமக்காக யாரோ சாப்பிட முடியாது. நமக்காக யாரோ சம்பாதித்துக் கொடுக்க முடியும். ஆனால் நமக்காக யாரும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுக்க முடியாது. நமக்குத் தேவையானதை எல்லாம் யாரோ செய்து கொடுக்க முடியும். ஆனால் நமக்காக யாரோ ஆனந்தப்பட முடியாது.
அடிப்படையான பொறுப்பு, கடமை இரண்டும் நம்முடையவை தான். ஆன்மிகம் என்பது உள்ளே நடக்கும் மலர்தல். இதற்கு குரு வழி காட்டலாமே தவிர, இந்த மலர்தலை நம்மைத் தவிர வேறு யாராலும் நமக்குள் நிகழ்த்த முடியாது.
‘ஜென் பற்றி வெளியிலிருந்து விளக்குவதில் என்ன இருக்கிறது? அது உனக்கு உள்ளே நிகழ வேண்டிய புரிதல். அது உனக்கு மட்டுமே சாத்தியம்!’ என்பதைத் தான் ஜென் குரு எளிமையாக அவனுக்குச் சொல்லியிருக்கிறார்.
நல்லது, சிறந்தது என்றெல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பது அல்ல ஜென். 'உள்ளது இதுதான்' என்று உரைப்பதே அது.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418