ஜென்னல் பகுதி 7

‘நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்!’ என்று வாழ்த்துவதுதானே உலக வழக்கம்! அது என்ன ‘நீ இறப்பாய்’ என வாழ்த்துவது?! ஆசீர்வாதம் செய்வதுபோல அல்லாமல் அபசகுனமாக பேசுவதுபோல் உள்ள ஜென்குருவின் ஆசீர்வாதத்தில் மறைந்துள்ள ஆழம்மிக்க பேருண்மை என்ன என்பதை சத்குரு விளக்குகிறார்!

செல்வந்தன் ஒருவன் ஸெங்காய் என்ற ஜென் குருவிடம் தனக்கு ஆசி வழங்கி, சில வார்த்தைகள் சொல்லச் சொன்னான்.

‘’உன் தந்தை இறப்பார்... நீ இறப்பாய்... உன் மகன் இறப்பான்... உன் பேரக் குழந்தை இறக்கும்’’ என்றார் குரு.

செல்வந்தன் மிகுந்த வேதனையுடன் ‘‘நல்ல வார்த்தைகள் சொல்லச் சொன்னால், இப்படி அபசகுனமாகச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்டான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குரு சொன்னார்: ‘‘இதைவிடச் சிறந்த ஆசி என்ன இருக்க முடியும்?’’

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

நம் யோகிகள் பற்றிச் சொல்லப்படும் பழைய கதை ஒன்றின் திரிபுதான், இந்த ஜென் கதை. நம் தேசத்தில் இருந்து இதுபோல் பல நல்ல விஷயங்களை எடுத்து மற்றவர்கள் தங்களுடையது போல் கொண்டாடிக் கொள்வதை உலகின் பல பகுதிகளில் பார்க்க முடிகிறது.

ஜனனம், மரணம் என்பது வாழ்க்கையின் இயல்பான போக்கு. இதை ஏற்காமல், நீங்கள் வாழவே முடியாது. பிறப்பு நேர்ந்துவிட்ட பின், மரணம் என்பது இக்கணத்திலும் நேரலாம். அடுத்த நாளும் வரலாம். பல வருடங்கள் கழித்தும் நேரலாம். ஆனால், அது வரப்போவது என்பது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து, அந்தக் கவனத்துடன் ஒவ்வொரு கணத்தையும் எதிர்கொண்டால் தான், வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும். மரணத்தைத் தவிர்க்க முடியுமா என்ற கவனத்திலேயே வாழ்பவர்கள், உண்மையில் வாழும் கணங்களையே முழுமையாக வாழாமல், வாழ்க்கையையே தவிர்த்தவர்களாகிவிடுகிறார்கள்.

இன்றே இறந்து போக வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், மரணம் என்பது உத்தரவாதமானது என்பதை மறக்காதீர்கள். என்றாவது ஒரு நாள் நானும் முடிந்து போவேன் என்பதே வாழ்க்கையின் பேரம்சம். இதை நினைவில் கொண்டால்தான், ‘எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப் போகிறேன்? இங்கே இருப்பதன் நோக்கம் என்ன? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆவல் பிறக்கும். ஆன்மிகம் பற்றிய சிந்தனை மலரும்.

மரணம் என்பது உத்தரவாதமானது எனும்போது, அது இயற்கை வகுத்த வரிசையில் நேர்வதுதானே நல்லது?

‘’உன் குடும்பத்தில் முதலில் உன் மகன் இறந்து அப்புறம் நீ இறந்தால், அது மகிழ்ச்சி தருமா? இல்லை, பேரக் குழந்தை உன் மகனுக்கு முன்பாக மரணமடைந்தால், சந்தோஷம் வருமா? தலைமுறை தலைமுறையாக இயல்பான வரிசையில் மரணங்கள் நிகழட்டும் என்பதை விட வேறென்ன ஆசி வேண்டும் உனக்கு? என்றுதான் நம் யோகி கேட்டார். அதையேதான் ஜென்குரு இங்கே சொல்கிறார்.


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418