Question: காலையில் சீக்கிரமாக எழுந்து சமைக்கவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்த வேண்டும். அலுவலகம் செல்ல நானும் தயாராக வேண்டும். மாலையில் திரும்பி வந்தவுடன் குழந்தைகளை படிப்பதற்கு தயார்படுத்த வேண்டும். நாள் முழுவதும் இப்படி ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு யோகா எப்படி பொருந்தும்?

சத்குரு:

சாப்பிட... அரட்டை அடிக்க...

உங்களுக்கு சாப்பிட நேரமிருக்கிறது. அரட்டை அடிக்க நேரம் இருக்கிறது. மற்ற வேலைகளை செய்ய நேரமிருக்கிறது. ஆனால் உங்களை கவனித்துக் கொள்ள உங்களுக்கு நேரமில்லை. அதைத்தானே நீங்கள் சொல்கிறீர்கள்? அப்படியானால் நீங்கள் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவரைப் போல நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ‘எனக்காக எந்த நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளவில்லை. நான் முழுமையாக மற்றவர்களுக்காக என்னைக் கொடுத்திருக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

யோகப் பயிற்சியை தினம் 25 நிமிடங்கள் நீங்கள் செய்தால் போதும். ஒருநாளில் பெருமளவு நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்துவீர்கள்.

நீங்கள் எதைக் கொடுத்திருக்கிறீர்கள்? உங்களுடைய கோபத்தை, உங்களுடைய எரிச்சலை, உங்களுடைய பதற்றத்தைத்தானே மற்றவர்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் குழந்தையின் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், ஒரு ஆனந்தமான, அன்பான சூழ்நிலையை உருவாக்குவது அவர்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. பளபளப்பான காலணிகளையோ, வசீகரிக்கும் வண்ண உடைகளையோ அல்லது வீடியோ விளையாட்டுகளையோ அளிப்பது முக்கியமல்ல. ஒருநாளின் ஒவ்வொரு கணமும் அவர்களைச் சுற்றிலும் சந்தோஷமும், அன்பும் பொங்கி வழியுமாறு ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் நீங்கள் அவர்களுக்கு வாங்கித் தருகின்ற பலவிதமான முட்டாள்தனங்களை விட மிகவும் முக்கியமானது, இல்லையா?

அனைத்தையும் செய்தாக வேண்டுமா?

உங்கள் வாழ்க்கையின் நோக்கமென்ன? உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய வேலைகள், இதர வேலைகள் எல்லாவற்றையும் உங்களால் கவனிக்க முடியுமானால் எல்லாவற்றையும் செய்யுங்கள். உங்களால் அப்படி கவனிக்க முடியாவிட்டால் எதை உங்களால் செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். எல்லோராலும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே செய்ய முடியும், இல்லையா? உலகிலுள்ள எல்லாவற்றையும் நீங்களே செய்ய விரும்பினால் நிச்சயமாக பைத்தியமாகி விடுவீர்கள். உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்பதை நீங்கள்தான் நிர்ணயிக்க வேண்டும். ஒரு சிலரால் காலை 6 மணிக்கு எழுந்து எல்லா வேலைகளையும் சந்தோஷமாக செய்து முடிக்க முடியும். ஒரு சிலரால் அது முடியாது. எனவே ஒவ்வொருவரும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்போது இந்த செயல்களில் எல்லாம் நீங்கள் சிக்கியிருப்பது இவற்றை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதால் அல்ல. நீங்கள் வேறு யாரோ ஒருவரைப் போல இருக்க முயற்சி செய்கிறீர்கள். அதுதான் பிரச்சனையே. மற்ற மனிதர்கள் எதை வைத்திருக்கிறார்களோ அதையே நீங்களும் விரும்புகிறீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு இது தேவையா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் செய்த இந்த செயல்களின் காரணமாக நீங்கள் அடைந்தது என்ன? உங்கள் குழந்தைகள், உங்கள் கணவர், அல்லது உங்கள் மனைவி அல்லது எதுவாக இருந்தாலும் நீங்கள் இதை சந்தோஷமாய் அனுபவிக்கவில்லை. பின்னர் எதற்காக இவையெல்லாம் உங்களுக்குத் தேவை?

சந்தோஷமா? துன்பமா?

இவையெல்லாம் சந்தோஷத்திற்கான அடிப்படை என்று நீங்கள் நினைத்ததால்தான் இவற்றையெல்லாம் உருவாக்கினீர்கள், இல்லையா? ஆனால் அவையே இன்று உங்களுடைய துன்பத்திற்கான, பதற்றத்திற்கான காரணங்களாக ஆகிவிட்டன. அப்படியானால் உங்களுடைய வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தேவையிருக்கிறது. நீங்கள் படித்திருக்கிறீர்கள். வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறீர்கள். திருமணமும் ஆகிவிட்டது. குழந்தையும் பெற்றுவிட்டீர்கள். இவையெல்லாம் எதற்காக? இவையெல்லாம் உங்கள் சந்தோஷத்திற்கு, உங்கள் நலவாழ்விற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் அவையே இன்று உங்கள் உயிரை எடுக்கிறது.

தினமும் 25 நிமிட யோகா...

நாம் உடலளவிலும், மனதளவிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மனிதராக இருந்தால் இருபத்திநான்கு மணி நேரத்தில் நிறைய வேலைகளை நம்மால் செய்ய முடியும்.

இவற்றை கையாள்வதற்கான திறமை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்கள் செயல்களை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உங்களுடைய திறமையை அதிகரித்துக் கொள்ள முடியுமானால் அதை நீங்கள் செய்ய வேண்டும். நான் கற்றுத் தரும் யோகப் பயிற்சியை தினம் 25 நிமிடங்கள் நீங்கள் செய்தால் போதும். ஒருநாளில் பெருமளவு நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்துவீர்கள். ஏனென்றால் உங்களுடைய தூங்குகிற நேரம் மிகவும் குறைந்து விடும். உதாரணமாக ஒருநாளைக்கு 8 மணி நேரம் தூங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒருபகுதி நேரத்தை தூங்கியே கழிக்கிறீர்கள், இல்லையா? உங்களுடைய உடலும், மனமும் மிகவும் சக்தி ஓட்டத்துடன் சுறுசுறுப்பாக இயங்குமானால் உங்களுடைய தூங்கும் நேரம் இயல்பாகவே குறைந்துவிடும். அப்படியானால் ஒருநாளில் 3லிருந்து 4 மணி நேரங்களை சேமிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இல்லையா? அது மட்டுமல்ல. உங்களுடைய உடலும், மனமும் மிகவும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த எளிய பயிற்சியை மேற்கொண்ட பலரது அனுபவம் இது. இந்த பயிற்சியை 6லிருந்து 8 வாரங்கள் தொடர்ந்து செய்த ஒருசிலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் அல்லது வேறு பணியில் இருக்கும்போது 8 மணி நேரத்தில் மற்றவர்கள் செய்யக்கூடிய செயலை மிக சாதாரணமாக 3லிருந்து 4 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார்கள்.

ஏனென்றால் ஒரு நாள் முழுவதும் உங்களை கவனித்துப் பார்த்தால், அதாவது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு வீடியோ படமாக எடுத்தால், ஒருநாளில் தேவையில்லாமல் எவ்வளவு அசைவுகளைச் செய்கிறீர்கள், தேவையில்லாமல் எவ்வளவு வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்கிறீர்கள், தேவையில்லாமல் எவ்வளவு செயல்களில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க முடியும். ஒரு நாளைக்கு இப்படி செய்து நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் எவ்வளவு செயல்களைச் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அப்போது கண்டு கொள்வீர்கள். உங்களுடைய மனம் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டதாக ஆகிவிட்டால் தேவையில்லாமல் பேசுகின்ற வார்த்தைகளும், தேவையில்லாத செயல்களும், தேவையில்லாத விஷயங்களும் தானாகவே மறைந்துவிடும். அவை விலகி விட்டாலே உங்களுக்கு பெருமளவு நேரம் மிச்சப்படும்.

உங்களுக்கு ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரங்கள் இருக்கிறது. இந்த இருபத்திநான்கு மணி நேரத்தை இருபத்திஆறு மணிநேரமாக நாம் ஆக்கத் தேவையில்லை. இந்த இருபத்திநான்கு மணி நேரமே போதும். இருபத்திநான்கு மணிநேரத்தில் நிறைய செயல்களைச் செய்ய முடியும். நாம் உடலளவிலும், மனதளவிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மனிதராக இருந்தால் இருபத்திநான்கு மணி நேரத்தில் நிறைய வேலைகளை நம்மால் செய்ய முடியும். ஒருங்கிணைக்கப்படாத, ஒருமுனைப்பு இல்லாத ஒரு மனிதராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நேரம் போதவில்லை என்றுதான் சொல்வீர்கள். உங்களில் பெரும்பான்மையானவர்கள் வேலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை. எண்ணங்களால் தான் பெருமளவில் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறீர்கள். எனவே தயவுசெய்து ஒருநாளில் இருபது நிமிடங்களை உங்களுக்கென ஒதுக்குங்கள். முடிந்தால் காலை 5.30 மணிக்கு எழுந்திருங்கள். சட்டென உங்களுடைய வாழ்க்கையின் தரம் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் காண்பீர்கள். ‘எனக்கு நேரமில்லை’ என்று தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். இது மிகப் பெரிய வித்தியாசத்தை தரும்.

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org