விவசாயம் ஏன் நலிந்திருக்கிறது?

"விவசாயம் நலிவடைந்து விட்டதால் தற்கொலைகள் மலிந்துவிட்டன. நமக்கெல்லாம் உணவு தருகின்ற விவசாயியை கவனிக்கவில்லையென்றால், நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்க முடியாது." என்று விவசாயம் பற்றி தன் பார்வையை இங்கே பகிர்கிறார் சத்குரு...
 

"விவசாயம் நலிவடைந்து விட்டதால் தற்கொலைகள் மலிந்துவிட்டன. நமக்கெல்லாம் உணவு தருகின்ற விவசாயியை கவனிக்கவில்லையென்றால், நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்க முடியாது." என்று விவசாயம் பற்றி தன் பார்வையை இங்கே பகிர்கிறார் சத்குரு...

சத்குரு:

விவசாயம் அனைத்திற்கும் அடிப்படையானது. ஆனால் தற்போது அது நலிவுற்றிருப்பதால் மக்கள் மற்ற தொழில்களில் ஆர்வம் கொண்டுவிட்டனர். இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட ஒரு சிறுவனிடம் சமீபத்தில் பேச நேர்ந்தது. தம் பெற்றோரின் திருமணம், குழந்தைகள் பெறுவது மற்றும் லௌகீக விஷயங்கள் அனைத்தும் தேவையற்றவை என்று அவற்றைத் தரம் தாழ்த்திப் பேசி, ஆன்மீகமே உயர்ந்தது என்று கூறினான். அதற்கு நான், "நீ எவற்றையெல்லாம் கேவலமாகப் பேசுகிறாயோ, அவற்றை அவர்கள் செய்ததால்தானே நீ இப்போது இங்கே இருக்கிறாய். என்னோடு ஆன்மீகம் பேசுகிறாய்?" என்றேன்.

'மற்ற அனைத்தும் தாழ்வானது. ஆகவே ஆன்மீகத்திற்குப் போகிறேன்' என்று ரீதியில் செயல்படக்கூடாது.

தியானலிங்கக் கோவிலை ஏதோ ஒரு காரணத்தினால் மூடி விட்டால், மக்கள் சிறிது கஷ்டப்பட்டாலும், வாழ்ந்து கொள்வார்கள். நாம் சமையல் அறையை மூடி வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டாலும் எப்படியாவது வாழ்ந்து கொள்வார்கள். ஆனால் கழிவறையை மூடி வைத்துவிட்டால், 4, 5 மணி நேரத்திற்குள்ளேயே உயிரை விடுவது போலாகிவிடுவார்கள். எது இல்லையென்றாலும் பரவாயில்லை. இது ஒன்று இருக்கட்டும் என்பீர்கள். உண்மைதானே? 'இப்போது உனக்குக் கோவில் முக்கியமானதா? கழிவறை முக்கியமானதா? என்று சிறுவனிடம் கேட்டேன். 'மற்ற அனைத்தும் தாழ்வானது. ஆகவே ஆன்மீகத்திற்குப் போகிறேன்' என்று ரீதியில் செயல்படக்கூடாது.

வாழ்க்கையில் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று பிரித்துப் பார்ப்பது, முட்டாள்தனமானது. வாழ்வின் அனைத்து அம்சங்களுமே உயரே செல்வதற்கான ஒவ்வொரு படியாக இருக்கின்றன. ஒரு உயர்ந்த கட்டிடத்தின் மேல் ஏறிப் போவதற்கு படிகள் உதவுகின்றன. சற்றே உயர்ந்த இடத்தை அடைந்ததும் கடந்து வந்த படிகளைக் கேவலப்படுத்துவது முட்டாள்தனம். உடல், மனம் இரண்டும் இருப்பதால்தான் ஆன்மீகம் பேசுகிறோம். ஆன்மீகம் என்பது உடல் மற்றும் மனதிற்கு எதிரி இல்லை. உடலையும், மனதையும் முழுமையாக உபயோகப்படுத்தி அதைக் கடந்து செல்வதற்கு ஆர்வம் இருக்கலாம். அதற்காக மற்றவற்றை தீயிட்டுக் கொளுத்த வேண்டியதில்லை.

இன்றைக்கு விவசாயம் நலிவடைந்து விட்டதால் தற்கொலைகள் மலிந்துவிட்டன. நமக்கெல்லாம் உணவு தருகின்ற விவசாயியை கவனிக்க வில்லையென்றால், நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்க முடியாது. கணிணி மற்றும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நாம் இருந்து கொண்டிருந்தாலும் போதிய உணவிருந்தால்தானே, இவற்றையெல்லாம் கவனிக்க முடியும்? ஆனால் இதில் நமது கவனம் சற்று குறைந்துவிட்டது. மேலும் ஒரு அடிப்படையான பிரச்சனை என்னவென்றால் இந்த நாட்டின் 100 சதவிகித மக்களும் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாக அவர்களுடைய உணவை அவர்களே விளைவித்துக் கொண்டிருந்தனர். இப்போது சிலர் மட்டுமே விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர்.

சமூகத்தில், இத்தகைய சூழல் உருவானபிறகு, நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அத்தகைய மாற்றங்கள் இங்கு நடைபெறத் தவறிவிட்டன. தற்போதைய சூழலில் 70 சதவிகித மக்கள் விவசாயம் செய்கிறார்கள் என்றால், அதன் பொருள் 100 பேரின் உணவிற்காக 70 பேர் சமைப்பது போன்றுள்ளது. இந்த விகிதாச்சாரம் ஆரோக்கியமற்றது. 100 பேருக்கு 5 பேர் உணவு தயாரிப்பதென்பது மிகவும் நல்லது. ஆகவே, இதைக் கட்டாயமாக மாற்றிமைக்க வேண்டும்.

அதிக மக்கள் தொகையினர் விவசாயத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. அடுத்த 15 வருடங்களில் 70 சதவிகித விவசாய மக்களை 20 சதவிகிதமாகக் குறைத்தால்தான் நாடு முன்னேற முடியும். அதற்கு விஞ்ஞானபூர்வமாக அனைத்து தேவைகளையும், விவசாயிக்கு உருவாக்கி, உற்பத்தியும் அதிகரித்து, அதில் ஈடுபடும் மக்கள் தொகையினரைச் சுருக்கி, எஞ்சியவர்களுக்கு வேறு விதமான ஒரு சூழ்நிலையை வழங்க வேண்டும்.

வெளிநாட்டில் 1000, 2000 ஏக்கர் நிலத்தில் ஒரே பயிர்தான் வளர்க்கிறார்கள். அதில் ஒரு குடும்பம் மட்டுமே ஈடுபடுகிறது. உழுவதற்கு, விதைப்பதற்கு, களை அகற்ற என அனைத்திற்கும் இயந்திரங்களை உபயோகிப்பதால் 2,3 மடங்கு அதிகமாக விளைவிக்கிறார்கள். மற்றவர்கள் வேறு தொழில் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. நமது தேசமும் வேகமாக முன்னேற வேண்டுமென்றால், இளைஞர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் விவசாயம் பாதிக்கப்படாதவாறு, அதற்குத் தேவையான விஞ்ஞானபூர்வமான கருவிகள் தருவிக்கப்பட வேண்டும். நேரக்கூடிய நெருக்கடிகளை முன்கூட்டியே அறிந்து, செயலில் மாற்றம், முன்னேற்றம் கொண்டு வரத் தவறினால், பெரும் ஜனத்தொகையைக் கொண்ட நம் தேசம் பாதிப்பிற்குள்ளாகிவிடும்.

பல நிலையிலுள்ள மக்களும் இதனை சீரமைக்கும் உணர்வோடு செயல்பட்டிருந்தாலும் தேவையான அளவிற்கு மாற்றம் ஏற்படவில்லை. இந்த மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் விவசாய சங்கங்கள், பெருந்தொழிலதிபர்கள் பலரையும் நாம் ஒருங்கிணைத்து அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க முனைந்துள்ளோம். விவசாயி உள் நாட்டு சந்தையில் வியாபாரம் செய்வதால் ரூ. 4/- மட்டுமே வருமானம் என்றால், அயல்நாட்டுச் சந்தையில் அதே பொருளுக்கு ரூ. 10/- வருமானம் வருகிறது. அதற்கான சூழ்நிலையை உருவாக்கக்கூடிய திறன் கொண்ட ஓரிருவர் கோடிக்கணக்கான முதலீடு செய்து இப்போது உலகளவிலான சந்தையை கட்டமைத்து வருகின்றனர். இதனைப் புரிந்து கொண்டு, விவசாயிகள் எதிர்க்காமல், ஒத்துழைத்தால், அவர்களின் வருங்காலம் பிரகாசிக்கக்கூடும். சந்தை உருவாக்கம் மட்டுமின்றி, போக்குவரத்து, சேமிப்புக்கிடங்கு, நிதி முதலீடு என்று அனைத்து நிலைகளிலும், பல தரப்பட்டவர்கள் இந்த மாற்றத்திற்கு முறைப்படியாக முயற்சிக்க வேண்டும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1