வேப்பிலை தரும் வியக்க வைக்கும் பலன்கள்!

நான் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அதிகாலையில், சாதனா செய்வதற்கு முன்பாக, எங்களுக்கு சாப்பிடுவதற்கு வேப்பிலை உருண்டையும், மஞ்சள் உருண்டையும் அளிக்கப்பட்டது. இதன் முக்கியத்துவம் என்ன?
 

வேப்பமரங்களை அம்மனாக நினைத்து வழிபடும் நம் மக்கள், வேப்பிலைகளை அன்றாடம் உட்பிரயோகமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக வேப்பிலை அடித்து பேய் விரட்டுவது கிராமங்களில் பிரபலம்! ஈஷாவில் தினமும் காலையில் வேப்பிலையும், மஞ்சளும் வழங்கப்படுவது குறித்து சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, அவர் தந்த விஞ்ஞானப் பூர்வமான பல செய்திகள் வேப்பிலையின் மகத்துவத்தை அரிதியிட்டு காட்டுகின்றன.

Question:நான் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அதிகாலையில், சாதனா செய்வதற்கு முன்பாக, எங்களுக்கு சாப்பிடுவதற்கு வேப்பிலை உருண்டையும், மஞ்சள் உருண்டையும் அளிக்கப்பட்டது. இதன் முக்கியத்துவம் என்ன?

சத்குரு:

வேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது. வேப்பங்குச்சி மிகவும் நல்லது, உங்களுக்கு ஒன்று தெரியுமா? அது பலரை பிரமையிலிருந்து தட்டி எழுப்புகிறது! உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கிராமப்புறங்களில் யாராவது வினோதமாகவும், பிசாசு பிடித்தது போலவும் நடந்துகொண்டால், இந்த வேப்பங்குச்சியால் அடித்தே, பிசாசை விரட்டிவிடுவார்கள்!! ஏதாவது தொற்று நோய் ஏற்பட்டால் வேப்பிலைகளைப் பரப்பி அதன்மீது படுக்கவைப்பார்கள். ஏனெனில் வேப்பிலை மிகுந்த சக்தியூட்டக்கூடியது என்பதுடன் அது உடலை சுத்திகரிக்கவும் செய்கிறது. வேப்ப இலை அற்புத மருத்துவ குணங்களையும், பிராண சக்தியின் பலமான அதிர்வுகளையும் கொண்டது. மேலும் உங்களிடமிருக்கும் எந்தப் பிசாசையும் விரட்டி விடும் அளவிற்குப் போதுமான கசப்பையும் கொண்டுள்ளது!

உடலிலுள்ள புற்றுநோய் அணுக்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்துவதால், அவைகள் உடலுக்கெதிராக அணி திரள்வதில்லை. ஆகவே வேப்பிலையை உட்கொள்வது மிகவும் முக்கியம்.

பூமியிலேயே வேறு எந்தத் தாவர இலைக்கும் இல்லாத அளவுக்கு புரிந்துகொள்வதற்குக் கடினமான உட்கூறுகளைக் கொண்டது வேப்பிலை. மேலும் உங்கள் கட்டமைப்பு திறந்து கொள்வதற்கு அது சில உதவிகள் செய்கிறது. மேற்கு நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் இங்கு அதிகம் சந்திக்கும் பிரச்சனை வயிற்றில் ஏற்படும் தொற்றுகள்தான். இந்தியர்கள் பிரமாதம் என்று நினைக்கக்கூடிய எதுவும் இங்கு வரும் மேலை நாட்டினரைக் கழிப்பறையிலேயே குடியிருக்க வைக்கும். உலகமே நுண்கிருமிகளால் (பாக்டீரியா) நிறைந்துள்ளது. உடல் முழுவதும் கூட நுண்கிருமிகள் நிறைந்துள்ளன. சராசரியான எடையுள்ள ஒரு உடலில் 10 ட்ரில்லியன் மனித செல்கள் உள்ளன. ஆனால், அதே உடலில், 100 ட்ரில்லியன் நுண்கிருமிகள் உள்ளன. எனவே நுண்கிருமிகளோடு ஒப்பிடும்போது, நீங்கள் பத்தில் ஒருவராகத்தான் இருக்கிறீர்கள்! உங்களது கற்பனைக்கும் எட்டாத அளவு மற்ற உயிரினங்கள் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நுண்கிருமிகளுள் பெரும்பாலானவை நமக்கு மிகவும் நன்மையளிப்பதாக உள்ளன. அவைகள் இல்லையென்றால், நம்மால் உயிர் வாழமுடியாது. ஆனால் அவற்றுள் சில கிருமிகள் நமக்கு தீமை செய்யக்கூடும். வெறும் வயிற்றில் வேப்பிலையை உட்கொள்வதால், குடற்பகுதியில் உள்ள தீமையளிக்கக்கூடிய கிருமிகளை அது அழித்துவிடுகிறது.

வேப்பிலைக்கென்று அதிசயிக்கத்தக்க பலன்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் மிக முக்கியமானது, புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அது அழிக்கிறது. ஒவ்வொருவர் உடலிலும் ஏற்கனவே புற்றுநோய் அணுக்கள் இருக்கின்றன என்றாலும், அவை உடலெங்கும் சிதறி இருக்கின்றன. ஏதோ ஒரு காரணத்தினால், உடலில் ஒரு குறிப்பிட்ட சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால், அவையனைத்தும் ஓரிடத்தில் கூடிவிடும். சிறிய அளவிலான குற்றத்திலிருந்து, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாகும்போது, அது ஆபத்தான பிரச்சனைதானே? ஒவ்வொரு நகரத்திலும் சிறிய அளவில் குற்றம் செய்பவர்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றனர். இங்கொன்றும், அங்கொன்றுமாக சிறிய அளவில் பிக்-பாக்கெட் செய்வார்கள், அதனால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி செயல்பட்டால், நகரின் ஒட்டு மொத்த சூழலும் மாறிவிடும். இவர்கள் சேர்ந்துவிட்டால், நீங்கள் வீதியில் கால் வைப்பதே ஆபத்தாகிவிடும். உடலிலும் இதுவேதான் நடக்கிறது. புற்றுநோய் அணுக்கள் உடலெங்கும் ஓடியவாறு இருக்கின்றன. அவைகள் தனியாகச் சுற்றிக்கொண்டிருந்தால் பிரச்சனையில்லை. ஓரிடத்தில் அனைத்து அணுக்களும் சேர்ந்து சந்தித்தால், அது பெரிய பிரச்சனையாகிறது. அவைகள் திரண்டு ஒன்று கூடுவதற்குள் அவ்வப்போது அழிக்கவேண்டியுள்ளது. தினமும் வேப்பிலையை சிறிதளவு எடுத்துக்கொள்வது அந்த வேலையைச் செய்கிறது. உடலிலுள்ள புற்றுநோய் அணுக்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்துவதால், அவைகள் உடலுக்கெதிராக அணி திரள்வதில்லை. ஆகவே வேப்பிலையை உட்கொள்வது மிகவும் முக்கியம்.

வெறும் வயிற்றில் வேப்பிலையை உட்கொள்வதால், குடற்பகுதியில் உள்ள தீமையளிக்கக்கூடிய கிருமிகளை அது அழித்துவிடுகிறது.

வேப்பிலையை உட்கொண்டால் கொசுக்கள்கூட உங்களைக் கடிக்காமல் போகலாம். நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன்பு, வேப்பிலையை அரைத்து உடலெங்கும் பூசி, சிறிது நேரம் ஊற வைத்தபிறகு குளிப்பதால் உடல் சுத்தமடைகிறது. தோலின் மீதுள்ள கிருமிகள் இறந்துவிடும். அல்லது சில வேப்பிலைகளை, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரில் குளிப்பதும் நல்லது.

நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமலிருப்பது முக்கியம். இந்தக் கிருமிகளின் செயல்பாடு இல்லையென்றாலும் நீங்கள் உயிர் வாழமுடியாது. ஆனால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், நீங்கள் உங்களுக்குள் சக்தி இழப்பை உணர்வீர்கள். ஏனென்றால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, உடல் தன்னைத் தற்காத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கிறது. அந்தச் செயலில் மிக அதிகமான சக்தி செலவழிகிறது. வேப்பிலையை பல விதங்களிலும் பயன்படுத்துவதால் கிருமிகளின் எண்ணிக்கை நிர்வகிக்கப்படுகிறது. அதனால் உடலின் சக்தி இழப்பு தவிர்க்கப்படுகிறது.

மஞ்சள் உங்களது உடல் நிலையில் மட்டுமின்றி சக்தி நிலையிலும் செயல்படுகின்ற ஒரு பொருளாக இருக்கின்றது. அது, இரத்தம், உடல், சக்திநிலையின் அமைப்பு ஆகிய அனைத்திலுமே ஒரு சுத்தப்படுத்தும் செயல்முறையை உருவாக்குகிறது. இதை உடலின் மீது பூசிக்கொள்வதும் அனேக பலன்களை அளிக்கிறது. ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை வாளித் தண்ணீரில் கரைத்து, உடலின் மீது ஊற்றிக்கொள்வதால், உடல் சுறுசுறுப்பும், பளபளப்பும் பெறுகிறது. தினமும் மஞ்சளை உட்கொள்வதால் இரத்தம் சுத்தமடைவதுடன், இரத்தத்தின் இரசாயனம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் நிச்சயமாக பராமரிக்கப்படுகிறது. இரத்த சுத்திகரிப்போடு மஞ்சள் உங்கள் சக்திநிலைகளையும் ஒளிரச்செய்கிறது.