வாய்விட்டு சிரித்த ஜென்குரு, குழம்பிய சீடன்!
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்..? எங்கே போகப் போகிறீர்கள்..? எதுவும் உங்களுக்குத் தெரியாது. ஆனால், இருக்கும் இருப்பைப் பற்றி நீங்களாகவே கற்பனை செய்து ஏதோ ஒன்றை உருவாக்கிக்கொண்டு சிக்கிப்போகிறீர்கள். இருக்கப்போவது சொற்ப நேரம். அதை எதற்கு முட்டாள்தனமாகச் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும்..?
ஜென்னல் பகுதி 41
ஒரு ஜென் மடம். குருவிடம் கற்க வந்த பல மாணாக்கர்களில் புதிதாகச் சேர்ந்த மாணவன் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பான். வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வான். குரு அழைத்தால், மற்றவர்களை முந்திக்கொண்டு போய் நிற்பான். அவர் இட்ட வேலையை உடனடியாகச் செய்து முடிப்பான். எல்லோரும் உறங்கியபின்தான் உறங்கச் செல்வான். காலையில் முதல் மனிதனாக எழுந்து வேலைகளைத் துவங்குவான்.
அவனை கவனித்துக்கொண்டிருந்த குரு, அருகில் அழைத்தார்.
"இதற்கு முன்னால் நீ எங்கிருந்தாய்..?" என்று கேட்டார்.
"சாலிங் கியூவிடம் பயின்றேன்.." என்றான் அவன்.
"ஓ..! சாலிங் க்யூ..! அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஒரு பாலத்தில் நடக்கும்போது, கால் வழுக்கி தண்ணீரில் விழுந்தாரே, அவர்தானே..?"
"ஆமாம் குரு.."
"அந்த நிமிடமே அவர் ஞானம் வென்றார் என்று உனக்குத் தெரியுமா..?"
"தெரியாது.. ஆனால், அவர் அதைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.."
"அந்தக் கவிதை உனக்கு ஞாபகம் இருக்கிறதா..?"
"இருக்கிறது குரு.."
"எங்கே சொல்..!"
"எனக்கு ஒரு முத்து கிடைத்திருக்கிறது.
வெகு காலமாகக் குப்பையும், அழுக்கும் அதன் பிரகாசத்தை மூடியிருந்தன.
இன்று தூசு பறந்துவிட்டது. குப்பை அகன்றுவிட்டது.
பிரகாசம் பிறந்துவிட்டது.
அந்த ஒளியில் நதிகளும், மலைகளும் வெளிச்சமிடப்பட்டுவிட்டன..!"
கவிதையை அவன் சொல்லி முடித்ததும், குரு வாய்விட்டுப் பெரிதாக சிரித்தார்.
மாணாக்கன் குழம்பினான். இந்தக் கவிதையில் என்ன வேடிக்கை இருக்கிறது..? எதற்காக குரு சிரித்தார்..? என்று யோசித்து, யோசித்துப் பார்த்தான். விடை கிடைக்கவில்லை. அன்றிரவு அவனுக்குத் தூக்கமே கெட்டுப் போயிற்று. மறுநாள் காலையில் எழுந்ததும், குருவை நாடி வந்தான்.
"குருவே, நேற்று நான் அந்தக் கவிதையைச் சொன்னதும், எதற்காக அப்படி பொங்கிச் சிரித்தீர்கள்..?"
"நீ ஒரு கோமாளியைவிட மோசமானவன்.." என்றார் குரு.
Subscribe
"என்ன..?"
"ஆமாம்.. கோமாளிகள் மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள். ஆனால், நீயோ மற்றவர்கள் சிரித்தால், அச்சம் கொள்கிறாய்.." என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவர் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார்.
குருவின் அந்தச் சிரிப்பு அந்த மாணாக்கனுக்கு ஞானம் வழங்கியது.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
ஜென்னுக்கும், சிரிப்புக்கும் ஆழமான தொடர்பு உண்டு.
பெரும்பாலான ஜென் குருமார்கள் வாய்விட்டுச் சிரிப்பவர்கள். ஜென் மட்டும் என்றல்ல. ஒரு குறிப்பிட்ட மேல்நிலையை அடைந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சிரிப்பதற்குக் காரணத்துக்காகக் காத்திருப்பதில்லை. நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ அவர்களால் வாய்விட்டுச் சிரிக்க முடியும்.
என்னுடைய இளமைக் காலத்தில் திடீரென்று எனக்குள் ஞானம் வெடித்து, தன்னிலை உணர்ந்தபோது, சுற்றிலும் உள்ளவர்களைப் பார்ப்பேன்.
'ஒவ்வொரு கணத்திலும் வெகு ஆனந்தமாக இருக்கக்கூடிய இவர்கள், எதற்காகத் தங்கள் வாழ்க்கையை இவ்வளவு குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்..?' என்று எண்ணும்போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
யாரைப் பார்த்தாலும் கண்ணீர் பொழிந்துகொண்டிருந்த அனுபவத்திலிருந்து விரைவிலேயே விடுபட்டேன். அறியாமையைப் பார்க்கும்போது, அழுவதற்கு பதிலாகச் சிரித்தால் இன்னும் ஆனந்தமாக இருந்தது. அழுதுகொண்டே இருப்பதில் அர்த்தமும் இல்லை. அறியாமையுடன் ஆனந்தத்தைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் புத்திசாலித்தனம் வந்துவிட்டால், பிரச்சினையே இல்லை.
இந்த உலகில் வறுமையைவிட, நோயைவிட, மற்ற எந்தக் குறைபாட்டையும்விட அதிகமாகப் பரவியிருப்பது அறியாமைதான். அந்த அறியாமையைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியவில்லை என்றால், சிரிப்பதற்கு வேறு என்ன வாய்ப்பிருக்கிறது..?
ஒருமுறை, அமெரிக்காவில் மலைப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தேன். மழை பொழிந்து கொண்டிருந்தது. பொதுவாகவே நான் வேகமாகக் காரை ஓட்டுவேன். ஈஷாவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் சிலர் என்னுடன் வெவ்வேறு கார்களில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.
எனக்குப் பின்னால் இருந்த காரில் மூன்று அமெரிக்கப் பெண்மணிகளுடன் ஒரு ஈஷா தொண்டரும் இருந்தார். அவர்களும் என் வேகத்திலேயே காரை ஓட்டி வர முனைந்தார்கள்.
"என்னுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம்" என்று எச்சரித்தேன்.
"இல்லை.. இந்தப் பாதை எங்களுக்கும் பழக்கமானது" என்று சொல்லிவிட்டு, அதேவேகத்தில் வந்தார்கள்.
மலைப் பாதை ஓரிடத்தில் வளைந்து திரும்பியது. நான் வந்த அதேவேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டேன். பின்னால் வந்த கார், அந்தத் திருப்பத்தை சமாளிக்க முடியாமல் புரண்டு அங்கிருந்த ஒற்றை மரத்தின் மீது வெகுவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் மரத்தையே சற்று வளைத்து, ஒரு மிருகம் ஏறுவது போல் மரத்தின் மீது பாதி தூரம் ஏறி, அந்தரத்தில் பாதியும், பாதையில் பாதியுமாக கார் நின்றது. சற்று தவறுதலாக மோதியிருந்தாலும், நானூறு அடி பள்ளத்தில் கார் விழுந்திருக்கும்.
கார் மோதிய கணத்திலிருந்து இதையெல்லாம் ரியர்வியூ கண்ணாடியில் பார்த்துவிட்டு, நானும், காரைக் கொஞ்சம் பின்னால் கொண்டு வந்து நிறுத்தி, இறங்கி, அவர்களுடைய நிலையைப் பார்த்தேன்.
உள்ளேயிருந்த பெண்மணிகள் பெருங்கூச்சலிட்டு அலறிக்கொண்டிருந்தார்கள்.
விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்த அந்தக் காரிலிருந்து ஒவ்வொருவராக பத்திரமாக இறங்கினார்கள்.
அப்பேர்ப்பட்ட விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்தே போயிருக்கலாம். ஆனால், மீண்டுவிட்டார்கள். மீண்டுவிட்டாலும், பயத்திலிருந்தும், பரபரப்பிலிருந்தும் அவர்களால் மீள முடியவில்லை. அதனால் அமெரிக்கப் பெண்மணிகள் 'ஊ.. ஊ.’ என்று இன்னும் பயத்தில் அலறி அழ ஆரம்பித்தார்கள்.
ஆனால், ஈஷாவைச் சேர்ந்த பெண்ணோ வெளியில் வந்ததும், மாபெரும் ஒலியுடன் சிரிக்க ஆரம்பித்தாள். அங்கே சென்று சேர்ந்ததும், தாங்க முடியாமல் நானும் சிரிக்க ஆரம்பித்தேன்.
அமெரிக்கப் பெண்மணிகளுக்கோ கோபம் அதிகமானது. 'தவித்துக்கொண்டிருக்கிறோம், எப்படி இவ்வளவு பொறுப்பில்லாமல் இருக்கிறீர்கள்..?’ என்று அவர்கள் மேலும் அலறினார்கள்.
நான் சிரித்துக்கொண்டே, "ஒருவேளை நீங்கள் எல்லோரும் இறந்திருந்தால், இப்படி உடனடியாகச் சிரித்திருக்க மாட்டேன். கொஞ்சம் நேரமாவது இடைவெளிவிட்டு சிரித்திருப்பேன்.." என்றேன்.
வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் வருவதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது நீங்கள் எவ்வளவு அறியாமையில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்..? எங்கே போகப் போகிறீர்கள்..? எதுவும் உங்களுக்குத் தெரியாது. ஆனால், இருக்கும் இருப்பைப் பற்றி நீங்களாகவே கற்பனை செய்து ஏதோ ஒன்றை உருவாக்கிக்கொண்டு சிக்கிப்போகிறீர்கள். இருக்கப்போவது சொற்ப நேரம். அதை எதற்கு முட்டாள்தனமாகச் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும்..?
சிரிப்பைத் தொலைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். அப்பாவைத் தொலைத்தேன்.., அம்மாவைத் தொலைத்தேன்.., மனைவியைத் தொலைத்தேன்.., கணவனைத் தொலைத்தேன்.., குழந்தையைத் தொலைத்தேன்.. என்று என்ன காரணம் சொன்னாலும், சிரிப்பைத் தொலைக்க வேண்டிய அவசியமே இல்லை.
சிரிப்பைத் தொலைத்தார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம், அவர்கள் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதுதான். வாழ்க்கையைப் பற்றிய உண்மையான உணர்வை அவர்கள் தொலைத்துவிட்டார்கள் என்பதுதான் காரணம்.
ஓர் பேரனுபவ நிலையை எட்டிவிட்டால், சிரிப்பு மட்டுமே மிச்சமிருக்கும். ஆலய மணியின் ஓசையைக் கேட்டீர்கள் என்றால், அது உரக்கச் சிரிப்பதற்கு மிக நெருக்கத்தில் இருக்கும் ஓர் ஒலி. சிரிப்பைத் தொலைத்தவன், எல்லாவற்றையும் தொலைத்தவன்.
இதைத்தான் ஜென் குரு தன் மாணாக்கனுக்கு தன் செயல் மூலம் விளக்கினார்.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418