நம் வேலை, குடும்பம், சுற்றம், உற்றார் உறவினர் என்று பலநிலைகளில் பலவிதமான உறவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், அந்த உறவுகள் சிறக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்பதையும், இந்த உறவுகளின் அடிப்படை என்னவென்பதையும் இக்கட்டுரையில் படித்து தெளிவுகொள்வோம்.

சத்குரு:

உங்கள் வாழ்க்கையில் உறவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது, உங்கள் வாழ்க்கைத் தரத்தை உறவுகள்தாம் நிர்ணயிக்கின்றன என்றே நினைக்கத் தோன்றும்.

உங்கள் எல்லா உறவுகளுக்கும் ஒரே அடிப்படைதான். உங்களுக்கு ஏதோ ஒரு தேவை இருக்கிறது, அந்தத் தேவையை நிறைவேற்ற உறவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களில் சிலர், “இல்லையில்லை, நான் என் உறவுகளுக்கு எல்லாநிலைகளிலும் கொடுக்கும் நிலையில்தான் இருக்கிறேனே தவிர, அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை” என்று சொல்வீர்கள். பெற்றுக்கொள்வது என்பது எப்படி தேவையின் அடிப்படையில் நிகழ்கிறதோ, அதேபோல நீங்கள் கொடுப்பதும்கூட தேவையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. யாருக்காவது எதையாவது கொடுத்தாக வேண்டும் என்பது உங்களுக்கு இருக்கும் ஒரு தேவை.

உறவுகளை நேரடியாகவும் நேர்மையாகவும் கையாளுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆண் பெண் உறவுகளில், உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்து போகிறது. எந்த அளவுக்கென்றால், நீங்கள் கடவுளையே கல்யாணம் செய்துகொண்டால்கூட, கொஞ்ச காலத்தில் அவர் உங்களைக் கைவிட்டுவிட்டதாகக் குறைபட்டுக்கொள்வீர்கள்.

எனவே மனிதர்கள் உறவுகளை உருவாக்கிக்கொள்வதன் பின்னணியில் இருப்பது அவர்களுடைய தேவைகள்தான், அவை உடலின் தேவைகள், மனதின் தேவைகள் என்று பலவிதமாக உள்ளன, அதற்கேற்ப உறவுகளும் பலவிதம். ஒரு தேவை கருதி நீங்கள் உருவாக்கிக்கொள்கிற உறவு, அந்தத் தேவை நிறைவேறாதபோது சீர்குலைந்துபோகிறது. அதனால் உறவுகளைப் பொறுத்தவரை மூடிமறைக்காமல் சுற்றிவளைக்காமல் நேரடியாகவும் நேர்மையாகவும் கையாள்வது அவசியம்.

மனிதன் தனக்குள் முழுமையை உணராதபோது அந்தக் குறையை உறவுகள் மூலம் இட்டு நிரப்ப முயற்சிக்கிறான். தனக்குள் இருக்கும் எதிர்பார்ப்புகள் அந்த உறவின் மூலம் நிறைவேறாதபோது ஏமாந்து போனதாய் நினைத்துத் தவிக்கிறான். உண்மையில் உங்கள் வாழ்க்கை தன்னளவிலேயே முழுமையானதுதான். அதனை உணராமல் நீங்கள் உருவாக்கிக்கொள்கிற எதிர்பார்ப்புகள் உங்களை எங்கெங்கோ எதையெதையோ தேடவிட்டு, ஏமாற்றத்தில் வாடவைக்கிறது.

கடவுளையே மணம் முடித்தால் கூட உங்கள் குறை தீராது!

மனிதர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளின் அளவைப் பாருங்கள். அதை நிறைவேற்றுவது இன்னொரு மனிதருக்கு சாத்தியமே இல்லை. அதுவும் ஆண் பெண் உறவுகளில், உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்து போகிறது. எந்த அளவுக்கென்றால், நீங்கள் கடவுளையே கல்யாணம் செய்துகொண்டால்கூட, கொஞ்ச காலத்தில் அவர் உங்களைக் கைவிட்டுவிட்டதாகக் குறைபட்டுக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு நிறைவேற்றவே முடியாத எதிர்பார்ப்புகள் மனிதர்களுக்கு உண்டு. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு எது மூலமாகத் திகழ்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், அற்புதமான உறவை உங்களால் உருவாக்க முடியும். ஓர் உறவைத் தொடங்குகிறபோது எதிர்பார்ப்புகள் பொதுவானவையாக இருக்கும். ஆனால் வாழ்வின் வெவ்வேறு படிநிலைகளில் எதிர்பார்ப்புகள் வேறுபடக்கூடும். இந்த எதிர்பார்ப்புகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுவதால், அவை ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. இரண்டு பேருக்கிடையே உறவு உருவாகிறதென்றால், ஒரு மனிதர் தன் வாழ்வு முழுக்க ஒரே எதிர்பார்ப்பை கொண்டிருக்கக்கூடும். இன்னொருவருக்கோ வாழ்க்கை குறித்த புரிதலும் அனுபவமும் மாறிக்கொண்டே இருப்பதால், எதிர்பார்ப்புகளும் மாறக்கூடும். இத்தகைய உறவுகள் பெரும் மோதலை ஏற்படுத்தும்.

இந்த உலகில் வேறெங்கும் நடக்கிற மோதல்களைவிடவும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடக்கிற மோதல்கள்தான் அதிகம். ஒரே விஷயம் என்னவென்றால், யாரும் வீட்டுக்குள் குண்டுகள் வீசிக்கொள்வதில்லை. அதனால் இம்மோதல்கள் உங்களுக்குப் பெரும்பாலும் தெரியவருவதில்லை. ஆனால் மௌன யுத்தங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்குக் காரணம், இரண்டு மனிதர்களுக்கிடையே எதிர்பார்ப்புகள் மாறும்போது அவை சீரான வேகத்தில் ஒரேவிதமாக மாறுவதில்லை.

உங்கள் மகிழ்ச்சிக்கு இன்னொருவரை பயன்படுத்துகிறீர்கள்!

உறவுகளை எப்படி அதிபுத்திசாலித்தனமாக நிர்வகிப்பது, சமாளிக்க எப்படியெல்லாம் சர்க்கஸ் செய்வது என்றரீதியில் நீங்கள் பார்க்கத் துவங்கினால், அவற்றை 100 சதவிகிதம் அனுமானித்து அழகான ஓர் உறவை மேற்கொள்வது சாத்தியமே இல்லை. மற்றவர்களின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கண்டுபிடித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முயன்றுகொண்டு இருந்தால் உங்கள் வாழ்க்கை தான் சிதறிப்போகும். இது முடிவே இல்லாத சர்க்கஸாகிவிடும். இதனை ஓர் அளவுக்குச் செய்ய வேண்டுமே தவிர, மிகச் சிறந்த உறவுக்கு இதுவே அடிப்படையல்ல.

அடிப்படையில் நீங்கள் ஏன் உறவை நாடுகிறீர்கள்? மகிழ்ச்சியும் ஆனந்தமும் வேண்டும் என்பதற்காகத்தான். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், உங்கள் மகிழ்ச்சிக்காக இன்னொரு மனிதரை பயன்படுத்த முயல்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? வேறு யாராவது உங்கள் மகிழ்ச்சியை kick-start செய்யவேண்டும், உங்கள் மகிழ்ச்சி இன்னும் self-start ஆகவில்லை என்பதுதான் அர்த்தம்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள், பிறரிடம் தேடாதீர்கள்!

மகிழ்ச்சி உங்கள் இயல்பாக இருக்குமானால், அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் உறவுகள் தேவைப்படுமே தவிர, மகிழ்ச்சியை பிறரிடமிருந்து பிழிந்தெடுப்பதற்கல்ல. உறவுகளை உருவாக்கி இன்னொருவரிடமிருந்து மகிழ்ச்சியைப் பிழிந்தெடுக்க முயல்வது சிறிது காலத்திற்குப் பிறகு, வலியை மட்டுமே தரக்கூடிய உறவாக மாறிவிடும். ஆனால் நீங்களே மகிழ்ச்சிமயமானவராக இருந்து அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக உறவுகளை உருவாக்கினால், யாரும் உங்களைப் பற்றி புகார் சொல்லப்போவதில்லை. ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறீர்களே தவிர, இன்னொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முயல்வதில்லை. உங்கள் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியைத் தேடுகிற பயணமாக இல்லாமல், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தால் உங்கள் உறவுகள் அவற்றின் இயல்பிலேயே அற்புதமாக இருக்கும்.

உறவுகள் உடல், மனம், உணர்வு, சக்தி ஆகியவற்றின் நிலைகளில் இருக்கமுடியும். உங்கள் உடல் ஓர் உறவைத் தேடினால், அதனை பாலுணர்வு என்கிறோம். உங்கள் மனது ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை சிந்தனையளவில் பகிர்ந்துகொள்ள ஒரு துணை என்கிறோம். உங்கள் உணர்வுகள் ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை அன்பு என்கிறோம். உங்கள் சக்திநிலை ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை யோகா என்கிறோம்.

இன்னொருவரோடு எப்படி இரண்டறக் கலப்பது?

இந்த முயற்சிகள் எல்லாமே ஏதோ ஒன்றோடு இரண்டறக் கலந்துவிடுவதற்காகத்தான். ஒருவிதத்தில் நீங்கள் தற்போது இருக்கும் நிலை உங்களுக்குப் போதுமானதாக இல்லை. இன்னொருவரோடு எப்படி இரண்டறக் கலப்பது? உடலளவில் முயன்றிருக்கிறீர்கள். அது நிகழ்வது போல் தோன்றுகிறது, ஆனால் பிரிய நேரிடுகிறது. மனதளவில் முயன்றிருக்கிறீர்கள், பலமுறை சிந்தனையில் சேர்ந்துவிட்டதாகவே நினைத்திருக்கிறீர்கள். ஆனால் இரண்டு மனங்கள் ஒருபோதும் ஒன்றாக முடியாது. உணர்வு நிலையில் இரண்டு பேர் அன்பில் ஒன்றாக சங்கமித்துவிட்டதாகப் பலமுறை நினைத்தீர்கள், ஆனால் பிரிவினைக் கோடுகள் மிக எளிதாகத் தோன்றிவிடுகின்றன.

இன்னொருவருடன் ஒன்று சேர்வதனால் அந்த ஏக்கம் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் அந்த ஏக்கம் மென்மேலும் வளரக்கூடிய ஏக்கம். உடல் அளவிலோ, மன அளவிலோ, உணர்வுகளின் அளவிலோ அதை நிறைவேற்ற முடியாது. இவை மூன்றையும் நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். அது ஒரு நெருக்கமான அனுபவத்தை ஏற்படுத்துகிறதே தவிர சங்கமிக்கச் செய்வதில்லை. அந்த ஏக்கம் நீடிக்கிறது. அந்த ஏக்கமே சிலருக்கு இனிக்கிறது. அந்த ஏக்கத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆனாலும் அந்த ஏக்கம் ஏதோ ஒரு நாள் நிறைவேற வேண்டும்.

உங்கள் வாழ்வில் சிலசமயம் இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். மிக ஆனந்தமாகவோ, அன்பாகவோ, பரவசமாகவோ, நீங்கள் உணர்ந்திருந்து உங்கள் சக்திநிலை பொங்கித் ததும்பும்போது உங்கள் தன்மை விரிவடைவதை உணர்வீர்கள். ‘நீங்கள்’ என்று அழைக்கப்படுவது என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

உறவுகள் என்றால் என்ன?

“இது நான். இது நான் இல்லை” என்று நீங்கள் உணர்வதற்கு எது அடிப்படை? உங்கள் உணர்ச்சிதான் அடிப்படை. உங்கள் உணர்ச்சி வளையத்துக்கு உட்பட்டவை அனைத்தையும், நீங்கள் என்று உணர்கிறீர்கள். உங்கள் உணர்ச்சி வளையத்துக்கு வெளியே இருப்பவற்றை வேறு என்று உணர்கிறீர்கள். உங்களிடமிருந்து அன்னியமான ஒன்று என்பது, எப்போதுமே நரகமாகத்தான் இருக்கமுடியும். நரகத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பாத காரணத்தால், மனிதகுலத்தின் சிறு பகுதியையேனும் உங்களில் ஒரு பாகமாக உணர விரும்புகிறீர்கள். இன்னொருவரையோ இன்னொன்றையோ உங்களின் ஒரு பாகமாக உணர விரும்புகிற ஏக்கத்துக்குத்தான் உறவுகள் என்று பெயர். உங்கள் உணர்ச்சி வளையத்திற்குள் இருப்பதையெல்லாம் நீங்கள் என்று கருதுகிறீர்கள். அதிலிருந்து வேறுபட்டதாக நீங்கள் உணர்பவை அனைத்தும் நரகம் என்றால், உங்களில் ஒரு பாகமாக உணர்பவை சொர்க்கமாகத்தான் உங்களுக்கு இருக்கவேண்டும். பிரபஞ்சத்தையே உங்களுக்குள் ஒரு பாகமாக உணர்ந்துவிட்டால் உறவுகள் தேவைப்படுமா? சொர்க்கத்தை உங்களுக்குள் உணர்வதற்கு உறவுகளை வெளியே உருவாக்குவது அவசியமா?

யோகா என்பதே இதுதான். யோகா என்ற சொல்லுக்கு சங்கமம் என்று பொருள். ஓர் உறவின் பின்புலத்தில் எந்தவிதமான ஏக்கம் இருந்தாலும் சரி, நீங்கள் உடலளவில் முயன்றாலும், மன அளவில் முயன்றாலும் ஏக்கம்தான் மிஞ்சும். ஒன்றுபட்ட உணர்வை நீங்கள் அடையவே முடியாது. ஒருமையின் சில விநாடிகளை உணர்வீர்களே தவிர, அது நீடிக்காது. அனைத்தையும் உங்களில் ஒரு பாகமாக உணர்வீர்களேயானால், உங்கள் தன்மையே மிக வித்தியாசமானதாக இருக்கும். இப்போது உறவுகள் எல்லாம் அடுத்தவர்களின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்கான ஒரு வழியாக அமையும். ஏனெனில் உங்களுக்கென்று தனியாக எந்தத் தேவையும் இராது. உங்களுக்கென்று நிர்ப்பந்தங்கள் இல்லாதபோது நீங்கள் எதையுமே விழிப்புணர்வோடுதான் செய்வீர்கள். ஓர் உறவை உருவாக்கிக் கொள்வதற்கான நிர்பந்தம் உங்களிடம் இல்லாதுபோகும்போது விழிப்புணர்வோடுதான் செயல்படுவீர்கள். அப்போது உறவுகள் உண்மையான ஆசிர்வாதங்களாக மாறும். எதிர்பார்ப்புகள் இருக்காது. போராட்டங்கள் இருக்காது. உங்கள் உறவுகளை வரங்களாக மாற்றிக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.