உலகம் பிறந்தது தவளைக்காக...! - ஜென்கதை சொல்லும் நீதி!
உண்பது, நடப்பது, சுவாசிப்பது போன்ற அடிப்படையான அம்சங்கள் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மென்மையான உணர்வுகளைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்றால், வாழ்க்கையின் மிகப் பெரும் அம்சங்களையும் நீங்கள் நிச்சயம் தவறவிடுவீர்கள்.
ஜென்னல் பகுதி 19
வனத்தில் ஒரு தவளைக் குடும்பம் வசித்து வந்தது. அம்மா தவளை சந்தோஷமாகக் குதித்துச் சொன்னது. “இந்த பூமி இருப்பது தவளைகளுக்காக! இந்தக் காற்று இருப்பது தவளைகளுக்காக! நீர்நிலை, தாவரங்கள், புழுக்கள், பூச்சிகள் எல்லாம் இருப்பது தவளைகளுக்காக!”
குட்டித் தவளைகளும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து குதித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு அங்கே ஊர்ந்து வந்தது. ‘லபக் லபக்’ என்று இரண்டு தவளைகளைப் பிடித்துத் தின்றது.
மற்ற தவளைகள் ஓடி ஒளிந்துகொள்ள, பயந்துபோன குட்டித் தவளையிடம் அம்மா சொன்னது: “பாம்புகள் இருப்பதும் தவளைகளுக்காகத்தான்!”
சத்குருவின் விளக்கம்:
Subscribe
(தமிழில் சுபா)
மரணம் என்ற முடிவை ஏற்க முடிந்தவர்களால் தான் வாழ்க்கையை முழுமையாக ரசிக்கமுடியும். எந்த நேரம் வேண்டுமானாலும் நிறுத்தத்துக்கு வரலாம் என்பது தெரிந்திருந்தால் தான், ஒவ்வொரு சுவாசத்தின் மதிப்பையும் உணர்ந்து அனுபவிக்கமுடியும். உண்ணும் ஒவ்வொரு கவளத்தையும் சுவைத்து உண்ண முடியும். அருந்தும் ஒவ்வொரு துளி நீரையும் ரசித்து அருந்த முடியும்.
இப்போது கிடைத்திருப்பது எதுவும் நிலைத்து இருக்காது என்பதை அறிந்திருந்தால் தான் அதை ஆழமாக ரசிக்கமுடியும். முடிவு இல்லாமல் ஒன்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று இருந்தால், அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
நீங்கள் நடக்கும் மண், உங்களைத் தழுவிச் செல்லும் தென்றல், உங்கள் மீது விழும் மழைத் துளி, உங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் சூரியன் எல்லாமே தற்காலிகமானவைதான் என்பதை அறிந்திருந்தால்தான் அவற்றின் மதிப்பை நீங்கள் பூரணமாக உணரமுடியும். ஆனந்தமாக அனுபவிக்கமுடியும்.
எந்தப் பூமி புசிப்பதற்கு உங்களுக்கு உணவு தந்துகொண்டு இருக்கிறதோ, அதே பூமி ஒருநாள் உங்களையே சாய்த்து, உணவாகப் புசிக்கப்போகிறது. இந்தச் சூழல் தவிர்க்கமுடியாதது. வாழ்க்கையை விழிப்பு உணர்வு என்ற ஜன்னல் மூலம் பார்த்து, அதை உணரும் திறன் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் சிக்கியிருக்கும் வரை, எந்த இலக்கையும் எட்ட முடியாமல், ஒரே இடத்தில் வட்டமடித்துக் கொண்டே இருக்க நேரும் என்பதை விளங்கிக்கொண்டால்தான், அதை உடைத்து வெளியேற வேண்டும் என்ற தேடல் பிறக்கும். இயல்பாகவே ஆன்மிகத்துக்கான விழிகள் திறக்கும்.
உண்பது, நடப்பது, சுவாசிப்பது போன்ற அடிப்படையான அம்சங்கள் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மென்மையான உணர்வுகளைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்றால், வாழ்க்கையின் மிகப் பெரும் அம்சங்களையும் நீங்கள் நிச்சயம் தவறவிடுவீர்கள்.
இந்த இரண்டு உண்மைகளையும் தன்னுள் பொதித்திருக்கிறது இந்த ஜென் கதை!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418