தற்கொலைக்கு என்ன காரணம்?
பரிட்சையில் தோல்வியடைந்தால், காதல் கைகூடவில்லை என்றால், தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. சிறுவயதில் தான் மேற்கொண்ட மரணப் பரிசோதனை முயற்சி குறித்தும் தற்கொலை எவ்வளவு முட்டாள்தனமானது என்பது குறித்தும் சத்குரு பேசுகிறார்.
பரிட்சையில் தோல்வியடைந்தால், காதல் கைகூடவில்லை என்றால், தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. சிறுவயதில் தான் மேற்கொண்ட மரணப் பரிசோதனை முயற்சி குறித்தும் தற்கொலை எவ்வளவு முட்டாள்தனமானது என்பது குறித்தும் சத்குரு பேசுகிறார்.
சத்குரு:
நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, என்னையும்விட சிறிய பெண்ணொருத்தி திடீரென இறந்துபோனது என்னை யோசிக்க வைத்தது. மரணம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மரணத்தை எப்படி நிகழ்த்திக் கொள்வது என்று ஆராய்ந்து, தூக்க மாத்திரைகள் சேர்த்தேன். ஓர் இரவு உணவு உண்ணாமல், அத்தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, எதிர்பார்ப்புடன் என் படுக்கையில் படுத்துக் கொண்டேன். மரணம் பற்றி நான் ஏதும் புரிந்து கொண்டு விடவில்லை. எனக்கு நீண்ட தூக்கம் தான் வாய்த்தது. ஆம், மூன்று நாட்கள் கழித்து, ஆழ்ந்த மயக்கத்தில் ஒரு மருத்துவமனையில் கண்விழித்தேன்.
'எதற்காக இந்தத் தற்கொலை முயற்சி?' என்று எல்லோரும் என்னை துளைத்து எடுத்தார்கள். மரணம் என்ற புதிரின் விடையை அறியவே அப்படிச் செய்தேன் என்று நான் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை.
தற்கொலை முயற்சிக்குப் பெரிய அளவில் துணிச்சல் அவசியம் இல்லை. அபரிமிதமான முட்டாள்தனம் இருந்தால்போதும் என்பதை நான் அன்று உணர்ந்தேன்.
இன்னும் சில வருடங்கள் கழித்து, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட ஓர் இளம் பெண் என்னை யோசிக்க வைத்தாள். அடிப்படையில், புழு, பூச்சி முதற்கொண்டு ஒவ்வோர் உயிரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே முயலும். வாழ்க்கையில் எப்படிப்பட்ட பொறுத்துக் கொள்ளவே முடியாத துன்பம் இருந்திருந்தால், வாழும் ஆர்வம் சிறிதும் கூட இல்லாது, தன் உயிரையே மாய்த்துக் கொள்ள அந்தப் பெண் துணிந்திருப்பாள் என்று பலநாள் யோசித்து இருக்கிறேன்.
தற்கொலைகளுக்கு என்ன காரணம்?
அவமானம், துரோகம், பணம், இழப்பு, தாங்வொண்ணா உடல்வலி, தோல்வி என்று எத்தனையோ காரணங்கள்!
Subscribe
உண்மையில், தோல்வி என்று எதையும் நினைக்கத் தேவையில்லை.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பில் ஒளிரும் இழைக்காக இரண்டாயிரம் வெவ்வேறு மூலப்பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்தார். எதுவும் வேலை செய்யவில்லை.
'எல்லாம் வீண்' என்று சலித்துக் கொண்டார் அவருடைய உதவியாளர்.
'இல்லை. மின்சார பல்புக்கு உதவாது என்று இரண்டாயிரம் மூலப்பொருட்களைப் பற்றி நாம் கற்றிருக்கிறோம்' என்றார் எடிசன்.
வாழ்வை எதிர்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும், இப்படிப்பட்ட தெளிவுதான் தேவை!
மனிதர்கள் மட்டுமல்ல. விலங்குகளும், பறவைகளும் கூட தற்கொலை செய்து கொள்கின்றன என்று உங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கலாம். அசாமில், ஜடிங்கா என்ற மலைப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து தற்கொலை செய்து கொள்கின்றன என்று சொல்லப்படுகிறது. உண்மையில், வீசும் காற்றிலும் பனிமூட்டத்திலும் சிக்கி, திசை பற்றிய கவனத்தை அந்தப் பறவைகள் இழக்கின்றன. மரங்களிலும், பாறைகளிலும் மோதிக் கொண்டு இறக்கின்றன. இது விபத்தே தவிர, தற்கொலை அல்ல என்பது என் எண்ணம்.
பறவை இனத்தில் சில, தங்கள் துணையை இழந்தால், உயிரை விடுவது உண்டு. ஆப்பிரிக்காவில் ஒரு வகை மான் இனம் தன் இணையை இழந்ததும், பட்டினி கிடந்து தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறது. இது காதல் உணர்ச்சியால் அல்ல. தங்கள் துணையுடன் வாழ்க்கையைப் பிணைத்தே உயிர் வாழ்ந்து பழகிவிட்டதால், அந்தக் துணையை இழந்ததும், வாழ்வது பற்றிய குழப்பம் வந்துவிடுவதே இந்த மரணங்களுக்குக் காரணம்.
மனிதர்களிலும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த ரகம்தான். வேறு ஒருவருடன் பின்னிப் பிணைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது, அவரின்றி வாழத் துணிவில்லாமல் போவதே, இந்த முடிவுக்கு அவரை தள்ளிச் செல்கிறது.
தற்கொலை செய்து கொண்டவர்களைக் கண்டனம் செய்ய நான் விரும்புவதில்லை. வாழ்க்கை, அவர்களை எப்படிப்பட்ட விளிம்பிற்குத் தள்ளிச் சென்றிருந்தால், விலைமதிப்பில்லாத உயிரையே போக்கிக் கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கும்!
ஆனால், தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக் கொள்வது, ஒரு சிசுவின் உயிரை நீங்கள் பறிப்பதற்கு ஒப்பாகும். ஆம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, எதிர்க்கவோ முடியாத ஒன்றைத் தாக்குவது எப்படித் துணிச்சலாகும்?
'உங்கள் மதத்திற்காக தற்கொலைப் படையில் சேர்ந்தால் சொர்க்கம் நிச்சயம்' என்று பலரை நம்ப வைத்து, அவரவர் உயிரை அவரவரே விட்டுக் கொடுக்கும் அளவிற்கு அவர்களை தயார் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவரவர் உயிரை மாய்த்துக் கொள்வதோடு அல்லாமல், அப்படி மாய்த்துக் கொள்ளும் நேரத்தில், தம்மோடு சேர்த்து, இன்னும் பல உயிர்களையும் அவர்கள் காவு வாங்குகிறார்கள். வெறுப்பு, காழ்ப்பு இவற்றைக் கொண்டு தங்கள் அமைப்பை இயக்குபவர்கள், இறைவன் பெயரைச் சொல்லி மற்றவரை அழிப்பதற்கு, தங்கள் உயிரைவிடவும் தயாராக இருக்கிறார்கள்.
உங்களுடைய உயிராக இருந்தாலும் சரி, அடுத்தவர் உயிராக இருந்தாலும் சரி, அந்த உயிரை நீங்கள் உருவாக்கவில்லை. அது உங்களுக்குச் சொந்தம் இல்லை. உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை அழிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?
ஆன்மீகத்தின் பெயராலும் சில தற்கொலைகள் தூண்டப்படுகின்றன. சொர்க்க வாசலுக்கு அழைத்துச் செல்ல பறக்கும் தட்டுகள் காத்திருப்பதாகச் சொன்ன 'குரு'வை நம்பி, பலர் குழுவாகத் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.
இந்த மாதிரி மூடத்தனமான அபத்தங்களை நம்பும் விபரீதங்கள், மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. உள்நிலை உணராதவர்கள் தங்களைக் குருவாக அறிவித்துக் கொண்டு, சில கவர்ச்சிகரமான சத்தியங்களைச் செய்து கொடுத்து, கூட்டத்தைச் சேர்த்துவிடுகிறார்கள். மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், 'தீர்ப்பு நாள் வந்துவிட்டது. இறைவனைச் சேர்வோம்' என்று சொல்லி மரணத்தையே ஒரு தீர்வாக்கி விடுகிறார்கள்.
உள்நிலையை மேன்மையாக நினைத்து, உள்நிலையில் வளர்ச்சி காணத் தலைப்படும் நம் கலாசாரத்தில், இத்தகைய விபரீதங்கள் நடப்பதில்லை.
இந்த உலகில், தங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற்று நிம்மதியாக வாழ, சாதாரண மண்புழுவில் இருந்து மாபெரும் யானை வரை கடைசிவரை போராடத் தயாராக இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட மிக மிகப் புத்திசாலித்தனமான மனிதன் மட்டும், தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால் உடனே நம்பிக்கை இழக்கிறான். தன்னை மாய்த்தும் கொள்கிறான்.
'உங்கள் உடலையும், மனதையும் மேலும் திறம்படப் பயன்படுத்துவது எப்படி' என்பதை அறிவதற்கான புதிய வாய்ப்பாகவே, உங்கள் தோல்வியை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் தற்கொலை ஆதரிக்கப்படுவதில்லை. இயற்கையின் அமைப்பில், தற்கொலை என்பது மாபெரும் தவறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்கான முதல் படியாக நினைத்து, தாண்டிச் செல்ல வேண்டுமே தவிர, உயிரைப் போக்கிக் கொள்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
சமூகத்தில் உண்மையான ஆன்மீகம் தழைக்கத் துவங்கிவிட்டால், தற்கொலை என்ற சொல் கூட நிலைக்காது.