தள்ளாத வயதில் இளைஞனுக்கு உதவிய ஜென்குருவின் நோக்கம்?
எப்போதெல்லாம் மனிதன் தன்னை முழுமையாக உணர முடியவில்லையோ, அப்போதெல்லாம் அவன் எதன் மீதோ, யார் மீதோ சார்ந்திருக்கத் தவிக்கிறான்.
ஜென்னல் பகுதி 46
ஒருமுறை எக்ஸ் என்பவர், தன்னுடைய பழைய குருவைச் சந்திக்க வந்திருந்தார். குரு இப்போது முதுமை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத வயதிலும் அவர் ஓய்ந்து அமர்ந்திருக்கவில்லை. எக்ஸ் காத்திருக்கும்போது வியர்த்த உடலுடன் களைப்பாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்து சேர்ந்தார். அவர் எங்கு சென்றுவிட்டு வருகிறார் என்பதை எக்ஸ் விசாரித்து அறிந்துகொண்டார்.
குருவைப் பார்த்ததும், "குருவே, எதற்காக இப்படி உங்களையே நீங்கள் வருத்திக்கொள்கிறீர்கள்..?"
குரு மெள்ளத் தன் இருக்கையில் அமர்ந்தார்.
"அவன் பாவம், இளைஞன். அவனுக்கு என் உதவி தேவைப்படுகிறது."
"என்னது, இளைஞனா..? இவ்வளவு முதியவரை அலைக்கழிக்கிறோமே என்று அவனாவது வெட்கப்பட வேண்டும்.. அவனுக்குத்தான் புத்தியில்லை. அவனுடைய தேவைகளை அவனே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா..?"
குரு புன்னகைத்தார். "அவனால் அது முடியாது.." என்றார்.
சத்குருவின் விளக்கம்:
Subscribe
(தமிழில் சுபா)
பற்று என்பது ஒரு மனிதன் அவனே உருவாக்கிக்கொள்ளும் அல்லது அவனே பூட்டிக்கொள்ளும் ஒரு விலங்கு. எப்போதெல்லாம் மனிதன் தன்னை முழுமையாக உணர முடியவில்லையோ, அப்போதெல்லாம் அவன் எதன் மீதோ, யார் மீதோ சார்ந்திருக்கத் தவிக்கிறான். எதனுடனாவதோ அல்லது யாருடனாவதோ தன்னைச் சேர்த்துக்கொள்ளும்போதுதான் அவனுக்கு ஓரளவு சமாதானமாகிறது. ஆனால், இப்படி சார்ந்திருக்கத் துவங்கிவிட்டால், கிட்டியது போதாமல் இன்னும் இன்னும் என்று உள்மனம் கேட்கும். எத்தனை கிடைத்தாலும், அது அவனை அமைதிப்படுத்தாது என்பது அவனுக்குப் புரிவதில்லை.
உண்மையில் உள்ளுணர்வு எல்லையற்ற தன்மையைத் தேடி விழைகிறது. தளைகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத் தவிக்கிறது. இது புரியாமல் அவன் தன்னுடைய ஆசைகளை மட்டும் அதிகப்படுத்திக்கொண்டே போகிறான். 'இது கிடைத்தால், அது.!. அதுவும் கிடைத்தால், அதற்கும் அடுத்தது..!' என்று தன் எல்லைகளை அவன் விரிவுபடுத்திக்கொண்டே போகிறான்.
எல்லை என்பது கட்டுப்பாடுகளுக்குள் அடங்குவது. எல்லைகளிட்டுத்தான் ஓர் உருவத்தைக் காட்ட முடியும். ஆனால் இந்த எல்லைகளுக்குள் இருந்துகொண்டு எல்லையற்றதைத் தேடுவது எப்படி சாத்தியம்..?
தான் பூட்டிக்கொண்ட சிறைக்குள் அவன் உலகையே தேடத் தேட, மேலும் மேலும் அந்த சிறைக்குள்ளேயே அவனுடைய பற்று, சிக்கல்களாக மாறிப்போகிறது. ஒருபோதும் கதவைத் திறந்து வெளியே வர அவனுக்கு வழி தெரியாது. வெளியிலிருந்து கதவைத் திறந்துவிட, ஒருவர் தேவைப்படுகிறார். அந்த வெளியிலிருந்து தரும் உதவியைத் தருவதற்காகத்தான் குரு அங்கே போகிறார்.
சுதந்திரம் என்று நினைத்து ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பயணம் செய்து சிக்கிக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஈஷா ஆசிரமம் வளர்ந்து வந்த நிலையில் தங்கள் வீடு, வேலை பார்க்கும் இடம், உறவுகள் என்ற பல கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு வெளியே வரத் துடித்த சிலர் ஆசிரமத்தில் சேர்ந்தார்கள். ஆனால், உடல்ரீதியாகத்தான் அவர்களால் விடுதலை பெற்று வரமுடிந்ததே தவிர, மனரீதியாக இல்லை. வீட்டில் உறவினர்களிடம் அவர்கள் எதிர்பார்த்ததை எல்லாம் இங்கே மற்றவர்களிடம் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். எதற்காக இந்த எதிர்பார்ப்பு..? அவர்களால் அப்படித்தான் ஒரு உறவைப் பார்க்க முடிகிறது.
இங்கே பெண்கள் வந்தபோது, தாய் வீட்டுக்கு வந்தது போல் நிம்மதியாக உணர்கிறோம் என்றார்கள்.
நான் உடனே, "அம்மா, இது உங்கள் தாய் வீடும் இல்லை. தாத்தா வீடும் இல்லை. கணவன் வீடும் இல்லை. தோழி வீடும் இல்லை. குடியிருப்பே இல்லாமல் ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று புரிந்துகொள்வதற்காகத்தான் இந்த ஆசிரமம் அமைத்திருக்கிறேன். யாரோ ஒருவரைச் சார்ந்து வீட்டில் இருப்பதைப் போல, இங்கே இருக்க வராதீர்கள். அங்கேதான் பாதி உயிராக இருந்தீர்கள். அதே பாதி உயிரோடு இங்கே வளைய வருவதில் அர்த்தம் இல்லை. உங்கள் உயிர் முழுமை பெற வேண்டும். இங்கிருக்கும் சூழ்நிலையில் பொருந்தி நீங்கள் வாழ்ந்தால் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தளையை உடைத்துவிட்டு இன்னொரு தளையில் வந்து சிக்காதீர்கள்.." என்று சொன்னேன்.
இதைப்போல் தளையில் சிக்கிக்கொள்பவர்கள் விடுதலை பெறுவதாக நினைத்து இன்னொரு தளையில் சிக்கிக்கொள்வதை அறியாமல் செய்வார்கள். அந்தத் தளைகளை உடைக்க வேண்டுமானால், வெளியிலிருந்து அவர்களுக்கு உதவி தேவைப்படும்.
அதைத்தான் ஜென் குரு சொல்கிறார்.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418