சிவன் எப்படி குருவானார்?!
சிவனின் தீவிரத்தைக் கண்டு, அவர் உணர்ந்ததை தாங்களும் உணர வேண்டும் என்று, அவர் எத்தனை புறக்கணித்த போதும், அவர் பின்னே சென்று கொண்டிருந்தவர்கள் ஏழ்வர் மட்டுமே. அவர்களை அவ்வளவு எளிதில் சிஷ்யர்களாக ஏற்கவில்லை சிவன். எண்பத்தி நான்கு ஆண்டுகள் காக்க வைத்து, அதன் பின்னேயே அவர்களை மனமுவந்து சிஷ்யர்களாக ஏற்றார்...
சிவன் - என்றுமே நிரந்தர Fashion!
பகுதி 3
சிவனின் தீவிரத்தைக் கண்டு, அவர் உணர்ந்ததை தாங்களும் உணர வேண்டும் என்று, அவர் எத்தனை புறக்கணித்த போதும், அவர் பின்னே சென்று கொண்டிருந்தவர்கள் ஏழ்வர் மட்டுமே. அவர்களை அவ்வளவு எளிதில் சிஷ்யர்களாக ஏற்கவில்லை சிவன். எண்பத்தி நான்கு ஆண்டுகள் காக்க வைத்து, அதன் பின்னேயே அவர்களை மனமுவந்து சிஷ்யர்களாக ஏற்றார்...
சத்குரு:
போன பதிவில், இந்த எழுவர் சிவனிடம் தங்களை சிஷ்யர்களாக ஏற்குமாறு மன்றாட,
சிவன் அவர்களிடம், "முட்டாள்களே! நீங்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதை நீங்கள் அறிய முடியாது. இதை அறிவதற்கு, உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். மிக மிகத் தீவிரமாக உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இது பொழுதுபோக்கல்ல," என்றார்.
இதைக் கேட்டும் அந்த எழுவர் தொய்வடையவில்லை. அவர்களின் விடாமுயற்சி கண்டு மனம் இரங்கிய சிவன், "உங்களுக்கு ஆயத்தநிலை பயிற்சி ஒன்றைத் தருகிறேன். அதை சிறிது காலம் செய்து வாருங்கள். அதன்பின் பார்ப்போம்," என்றார்.
அப்பயிற்சியை இந்த ஏழ்வரும் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தனர். நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாயின, மாதங்கள் வருடங்களாயின. அப்போதும் சிவன் அவர்களை புறக்கணித்தார். இவ்வாறு எண்பத்தி-நான்கு வருடங்கள் சாதனாவில் கழிந்தது.
Subscribe
அதன்பின் ஒருநாள்...
இந்தப் பூமியின் நோக்கில், சூரியன் வடநோக்குப் பயணத்தை முடித்துத் தென்நோக்குப் பயணத்தை ஆரம்பித்தபோது, நம் கலாச்சாரத்தில் சொல்வதுபோல், உத்தராயணத்தில் இருந்து தக்ஷிணாயனத்திற்கு நகர்ந்தபோது - ஆதியோகியின் பார்வை இவர்கள் எழுவர் மீதும் பட்டது.
ஞானம் பெறுவதற்கான முழுத் தகுதியும் அடைந்தவர்களாக இந்த எழுவரும் மின்னித் தகித்தனர். எண்பத்தி நான்கு வருடங்களாக முழு ஈடுபாட்டுடன் செய்து வந்த தீவிர பயிற்சிகளால், அவர்களின் அமைப்புகள் (உடல்-மன-உணர்வு-சக்தி நிலைகள்) எதை செய்வதற்கும் ஏதுவாகவும், சக்தி நிரம்பியதாகவும் மாறிப் போயிருந்தது. ஞானம் பெறுவதற்கு எல்லா விதத்திலும் அவர்கள் பழுத்திருந்தார்கள். அதற்கு மேலும் சிவனால் அவர்களை புறக்கணிக்க இயலவில்லை.
அடுத்த இருபத்தெட்டு நாட்களுக்கு அவர்களை மிக உன்னிப்பாக கவனித்தார். இதைத் தொடர்ந்து வந்த பௌர்ணமி அன்று, குருவாய் உருவெடுக்க முடிவு செய்தார். அது குரு பௌர்ணமி - ஆதியோகி ஆதிகுருவாக பரிணமித்த நாள். முழுமுதற் குரு பிறந்தநாள்.
அன்று அவர், தனது ஏழு சிஷ்யர்களையும் 'காந்த்தி சரோவரு' க்கு அழைத்துச் சென்று, யோகாவை விஞ்ஞானப்பூர்வமாக அவர்களுக்கு விளக்க ஆரம்பித்தார். உயிர்-வாழ்க்கை எவ்வாறு நடக்கிறது, எப்படி நிகழ்கிறது என்பதை எடுத்துரைக்க ஆரம்பித்தார். இதனை அவர் வாய் வார்த்தைகளாய் அறிவுக்குப் புரியும் தத்துவங்களாய் அல்லாமல், அனுபவப்பூர்வமாக வழங்கினார். படைப்பை அக்குவேறு ஆணிவேறாக அவர்களோடு ஆராய்ந்தார்.
யோகாவை ஒரு தொழில்நுட்பமாக, ஒவ்வொரு மனிதனும் தானே தன் உன்னத நிலையை அடையக் கைகொடுக்கும் ஒரு தொழில்நுட்பமாக வழங்கினார். இந்நிலையை அடைய இப்பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வழி இருக்கிறது. இதுதான் மானுட அமைப்பின் விஞ்ஞானம். இதன் உதவியோடு அதை பிரித்தும் பார்க்கலாம், சேர்த்தும் உருவாக்கலாம்.
இந்தப் பரிமாற்றம், பல காலம் நீடித்தது. பல வருடங்கள் கழித்து இந்தப் பரிமாற்றம் நிறைவுற்ற போது, இன்று உலகம் சப்தரிஷிகள் என்று போற்றும் அந்த ஏழு ஞானமடைந்தவர்களும் உருவானார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் யோகத்தின் வெவ்வேறு பரிமாணத்தை உள்நிறுத்தினார் ஆதியோகி. இந்த எழுவகை அம்சங்கள் தான் யோகத்தின் ஏழு வகைகளாக இன்றும் நிலைத்திருக்கிறது.
குறிப்பு:
ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima
சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்