சந்தோஷமாக இருப்பதற்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டுமா?
நாம் சந்தோஷமாக இருக்க பல செயல்கள் செய்தும் நோக்கம் நிறைவேறாமல்தான் உள்ளது. நம் வாழ்க்கை சந்தோஷத்தைத் தேடுவதில் இருக்க வேண்டுமா அல்லது சந்தோஷத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமா? சத்குருவின் பதில் நமக்கு தெளிவைத் தரும்...
நாம் சந்தோஷமாக இருக்க பல செயல்கள் செய்தும் நோக்கம் நிறைவேறாமல்தான் உள்ளது. நம் வாழ்க்கை சந்தோஷத்தைத் தேடுவதில் இருக்க வேண்டுமா அல்லது சந்தோஷத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமா? சத்குருவின் பதில் நமக்கு தெளிவைத் தரும்...
சத்குரு:
Subscribe
மகிழ்ச்சி என்பது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து கடனாக பெறப்படும் ஒரு பொருள் என்பது போல் பேசுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், வெளியில் என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு உங்களுடைய சக்திகள் அனைத்தும் வெளிப்புறச் சூழ்நிலைகளுக்கு ஆழமாக அடிமைப்பட்டுக் கிடப்பதால், அந்த வெளியுலகம்தான் உங்கள் உள்நிலை மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது. இந்த உலகத்தில் போராட்டம் என்பதே ஒருவர் சந்தோஷத்துக்கும் மற்றவர் சந்தோஷத்துக்கும் இடையேதான் நடக்கிறது. என் சந்தோஷம் சிவன், உங்கள் சந்தோஷம் அல்லா. இப்படி இருந்தால் இருவரும் சண்டை போட்டாக வேண்டும்.
நம்முடைய இயல்பிலேயே நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நாம் முடிவு செய்துவிட்டோம். மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாம் எதையாவது செய்தாக வேண்டும். இந்த உலகத்தில் சந்தோஷமாக இருப்பதற்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், பிறகு மற்றவர்களும் தங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேறு ஏதோ ஒன்றைச் செய்வார்கள். நாளையோ, நாளை மறுநாளோ நம்முடைய பாதைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு, நாம் சண்டையில் இறங்குவோம். நாம் அனைவரும் சகோதரர்கள் என்று பாவனை செய்தாலும், நம்முடைய சந்தோஷத்துக்கு ஏதாவது தடை வந்துவிட்டால், அடுத்தவரை அடித்து வீழ்த்தவும் தயங்க மாட்டோம்.
இந்தக் கம்பத்தில் ஏறுவதுதான் உங்களுடைய இப்போதைய சந்தோஷம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது யாரோ ஒருவர் அந்தக் கம்பத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, இது புனிதமான கம்பம், நீங்கள் இதன் மீது ஏறக்கூடாது என்று சொல்கிறார். அவர் அப்படி உங்களை தடுத்து நிறுத்திய கணத்திலேயே, நீங்கள் மகிழ்ச்சியை இழந்து விடுகிறீர்கள். பலவீனமானவராக இருந்தால், அங்கிருந்து போய்விடுவீர்கள்; பலமுள்ளவராக இருந்தால், அவரை கீழே இழுத்துத் தள்ளிவிட்டு, கம்பத்தின் மீது ஏறுவீர்கள். ஏனென்றால், அந்தக் கம்பத்தில் ஏறுவதில்தான் உங்களுடைய சந்தோஷம் இருக்கிறது என்பதால் அதில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஏற்கனவே சந்தோஷமாக இருந்தால், அந்தக் கம்பத்தின் மீது நீங்கள் ஏற விரும்பும்போது, அந்த மனிதர் ‘இந்தக் கம்பத்தின் மீது ஏறாதீர்கள்’ என்று சொன்னால், நீங்கள் சென்று வேறொரு கம்பத்தில் ஏறிக் கொள்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை.
உங்கள் இயல்பில் ஏற்கனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் வாழ்க்கையே உங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தால், பிறகு இந்த உலகத்தில் எந்தவிதமான சச்சரவுகளும் இருக்காது. ஆனால் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதில் செலவழித்தால், இந்த உலகத்தில் எப்போதும் போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். மக்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் கல்வியறிவு புகட்டினாலும், எத்தனை நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
நான் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் என்னுடைய சக்திகளை நான் ஒழுங்கு படுத்திக் கொண்டால், பிறகு என் வாழ்வில் எது நடந்தாலும், என் மகிழ்ச்சி மட்டும் குறையவே குறையாது. அப்போது நான் வாழும் சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன். எதையாவது செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு இருக்காது. எதையுமே செய்யாமல் கூட வெறுமனே அமர்ந்திருக்க முடியும். சூழ்நிலையைப் பொறுத்து நான் செயல்படுவேன். இல்லையென்றால் வெறுமனே அமர்ந்து கொள்வேன்.
ஆனால் தற்போது நிறைய பேர் மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் பயணத்தில், இந்த பூமியையே கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, இந்த உலகத்தில் 50% பேர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உலகில் இருக்கும் 700 கோடி பேரும் கடும் உழைப்பாளிகளாக இருந்தால், இந்த உலகம் இன்னும் 10 வருடங்களுக்குக் கூட நீடிக்காது; அழிந்துவிடும். இந்த உலகம் இன்னும் இருப்பதற்கு உழைப்பாளிகள் காரணமல்ல; சோம்பேறிகள்தான் காரணம். அவர்கள்தான் உண்மையிலேயே இந்த உலகத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.
உழைப்பாளிகள் எனப்படும் பிரிவினர் நல்ல நோக்கங்களுடனும், அதேநேரம் முழு முட்டாள்தனத்துடனும் இந்த பூமியை சிதைக்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதைப் பற்றி அவர்களுக்கு உயர்ந்த நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய நோக்கங்கள் நிறைவேறிவிட்டால், இந்த உலகம் மிஞ்சியிருக்காது. எனவே மகிழ்ச்சியைத் தேடி ஓடாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை எப்படி உலகத்துக்கு வெளிப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், அதில் மகிழ்ச்சியைத் தேடிய கணங்களை விட, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கணங்கள்தான் அழகானவை என்பதைப் பார்ப்பீர்கள்!