சத்குருவை பலர் ஒரு குருவாகவே அறிகிறோம். ஆனால் அவரின் இளமைப் பருவத்தில் அவருக்கு நண்பர்கள் இருந்திருப்பார்களே! அந்த நட்பைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்? அவரின் நட்பைப் பற்றி சில சுவாரஸ்யமான விளக்கங்கள் இங்கே... நம்முடன் பகிர்கிறார் சத்குரு.

சத்குரு:

நட்பை நான் எப்போதும் மேலோட்டமாகப் பார்த்ததில்லை. அதை முழுமையானதாகவும் மிகச் சிறந்ததென்றுமே நான் பாவிக்கிறேன். நான் எப்போதெல்லாம் ஓர் உறவையோ நட்பையோ ஏற்படுத்திக் கொள்கிறேனோ அப்போதெல்லாம் ஒரு குழந்தையின் இயல்போடும், சில சமயங்களில் குழந்தைத்தனமாகவும் அந்த உறவில் ஈடுபடுகிறேன். எல்லா நிலைகளிலும் இது எனக்கு நிகழ்ந்துள்ளது. மூன்றரை, நான்கு வயதில் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கொரு நண்பன் கிடைத்தான். அவனுடன் ஆழமாக நட்பு கொண்டேன். எல்லோரையும் விட முக்கியமாய் அவன் எனக்குப் பட்டான். இன்றும் அவன் பெயர் எனக்கு நினைவிருக்கிறது. அவனுக்கு நினைவிருக்காதென்று நிச்சயமாகத் தெரியும். அந்தப் பள்ளியிலிருந்து போன பிறகு அவனுக்கு என்னுடனான நட்பு ஒரு சிறுகதை போல் முடிந்திருக்கும். என்னைப் பொறுத்த வரை அது தொடர்கதை. இன்றளவும் நிறைவுபெறாத தொடர்கதை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
எப்போதெல்லாம் ஒரு நட்பு உருவாகிறதோ, அதை நல்லதென்றும், நிறைவானதென்றும், நம்பிக்கைக்குரியதென்றும் நினைப்பதே என் வழக்கம்.

உலகின் பல பகுதிகளில் எனக்கு நூற்றுக்கணக்கான நண்பர்கள் இருக்கலாம். அது வேறு விஷயம். நான் சொல்வது முழுமையான, உண்மையான நட்பைப் பற்றி. எப்போதுமே நான் நட்பை அப்படித்தான் பார்க்கிறேன். ஆனால், காலப்போக்கில், வாழ்வனுபவம் எனக்கு உணர்த்தியது என்னவென்றால், மிகச்சிலரே நட்புக்கு அத்தகைய முக்கியத்துவத்தைத் தருகிறார்கள் என்பதுதான். பெரும்பாலானவர்களுக்கு, நட்பு என்பது சூழ்நிலை சம்பந்தப்பட்ட விஷயம். பள்ளியில் படிக்கும்வரை சில வகையான நண்பர்களைக் கொண்டிருப்பது, பள்ளிப் பருவம் முடிந்ததும் அவர்களை அங்கேயே கழற்றி விட்டு விட்டு, கல்லூரி நண்பர்களைப் பெறுவது. கல்லூரி முடிந்த பின் அந்த நண்பர்களை அங்கேயே விட்டுவிட்டு தொழில்சார்ந்த நண்பர்களைப் பெறுவது. இப்படித்தான் பலரும் நட்பைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். என்னால் அப்படி இயலாது. அத்தகைய நண்பர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன் என்றோ, வருத்தமுற்றேன் என்றோ பொருளல்ல. ஆனால் மனித இயல்புகளை உணரும் மிக நல்ல வாய்ப்பாக இருந்தது.

தனிப்பட்ட முறையில், எனக்கு நண்பர்களுக்கான தேவை அதிகமில்லை என்றாலும், எப்போதெல்லாம் ஒரு நட்பு உருவாகிறதோ, அதை நல்லதென்றும், நிறைவானதென்றும், நம்பிக்கைக்குரியதென்றும் நினைப்பதே என் வழக்கம். அங்குமிங்கும் சில அருமையான நண்பர்கள் எனக்குக் கிடைத்ததுண்டு. அவர்களுக்கும் கூட வாழ்க்கைச் சூழல்கள் மாறும்போது நட்பு குறித்த பார்வையும் கவனமும் மாறுகிறது. எனக்கு எப்போதும் அப்படி மாறுவதேயில்லை.

பல பேருக்கும் வாழ்வில் ஆழமான உறவுகளை உருவாக்கிக் கொள்ள முடிவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான். தேவை அடிப்படையிலேயே அவர்களின் உறவுகள் உருவாகின்றன. தேவைகளைக் கடந்து அவர்களால் உறவுகளை உருவாக்க முடிவதில்லை. தேவைப்படும் போது உறவுகளை உருவாக்குவதும் வேண்டாத போது அந்த உறவுகளை உடைத்தெறிவதும் சரியானதல்ல. ஓர் உறவு என்பது உறவுக்காக மட்டுமே. இன்று கூட, என் பள்ளிப் பருவ நண்பர் ஒருவரைச் சந்தித்தால், அவரை முதன்முதலாய் அறிந்தபோது எப்படி அணுகினேனோ அதே மனநிலையில்தான் அணுகுகிறேன். ஆனால் அவர்கள் அந்த நிலையை, நினைவுகளைத் தாண்டி வந்துவிட்டார்கள். அநேகமாக அவர்கள் வாழ்வோடு சேர்ந்து நகர்கிறார்கள். நான் வாழ்விலிருந்து கொஞ்சம் வெளியே நிற்கிறேன். அத்தகைய அணுகுமுறையில் வாழ்வின் அர்த்தம் இருப்பதாய் எனக்குப் பட்டது. எனவே அதே நிலையில் இன்றும் தொடர்கிறேன்.

பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்வுக்கு நான் மிகவும் தேவை. அவர்கள் எனக்குத் தேவையில்லை. அப்படியிருந்தாலும் நான் அவர்களின் உறவுக்குத் தருகிற முக்கியத்துவத்தின் அளவுக்கு என் உறவுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. இதை நான் புகாராகச் சொல்லவில்லை. பிணைப்பில்லாமல் இருப்பதாலேயே பல விஷயங்களை அவர்கள் வாழ்வில் இழந்து விடுகிறார்கள். எதனோடும் பிணைத்திருக்க முடியாததால் வாழ்வின் அழகிய அம்சங்களையே அவர்கள் இழந்து விடுகிறார்கள்.

வாழ்க்கை என்னிடம் பெருந்தன்மையாகவே இருந்து வந்திருக்கிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் அது தன் வாசலைத் திறந்து விடுகிறது. தன் இரகசியங்களை மிக எளிதாக எனக்குத் திறந்து காட்டி விடுகிறது. இதற்குக் காரணம், என்னுடன் தொடர்பில் வருகிற எல்லாவற்றுடனும் எனக்கு ஏற்படுகிற பிணைப்புதான். ஒரு ஜடப்பொருள் என்னால் பயன்படுத்தப்பட்டால் கூட அதனுடன் ஒரு வகை உறவு எனக்கு உருவாகி விடுகிறது.

நட்பு என்பது பரிமாற்றம் நிகழும் பங்கு வர்த்தகம் அல்ல. அது உயிர்களின் சங்கமம்.

என் வளரிளம் பருவத்தின் பெரும்பகுதியை மைசூரில் கழித்ததால் அந்த ஊருடன் எனக்கு ஆழமான பிணைப்பு உண்டாகிவிட்டது. பொதுவாக, சொந்த ஊர் மேல் மனிதர்களுக்கு வருகிற இயல்பான பாசமென்றோ ஊர்ப்பற்று என்றோ அதை வகைப்படுத்திவிட முடியாது. அந்த நிலம், அங்குள்ள மரங்கள், அந்த மலை ஆகியவற்றுடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான பிணைப்பின் நிலையே வேறு. இன்று அங்கு பல இடங்கள் மாறிவிட்டன. ஆனால் நான் நடந்த இடங்கள், ஒவ்வொன்றையும் ஆழமாகவும் உன்னிப்பாகவும் நான் பார்த்த விதங்கள், பல இலட்சம் இடங்களில் எனக்கெழுந்த பல இலட்சம் கேள்விகள், எல்லாம் சேர்ந்துதான் ஆழமான பிணைப்பை எனக்கு மைசூருடன் ஏற்படுத்தியதுடன் நில்லாமல், ஒருவித தேடலையே எனக்குள் ஏற்படுத்தின.

என்னைப் பொறுத்தவரை, மைசூர் என்றால் பல இலட்சம் கேள்விகளும் ஒரு மகத்தான பதிலும். என்னைப் பொறுத்தவரை நட்பும் அத்தகையதுதான். யாருடனாவது நான் சில விநாடிகளைப் பகிர்ந்தாலும், பகிர்தல் என்பது இரண்டு உயிர்களின் சங்கமம். என்னைப் பொறுத்தவரை எந்த உறவையும் வெறும் உணர்ச்சி பூர்வமாய் அணுகியதில்லை. ஆனால் பகிர்தல் என்பதே ஒன்றாகும் தருணங்கள்தான். உறவுகளை நான் ஒருபோதும் கொடுப்பதாகவும் பெறுவதாகவும் உணர்ந்ததே இல்லை. நட்போ உறவோ உதவிக்கு மட்டுமானது என்றோ வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதென்றோ நான் கருதியதேயில்லை.

இன்றும் கூட உலகெல்லாம் பயணம் செய்து, உயர்ந்த நிலையில் இருக்கும் பல பிரமுகர்களை சந்திக்கும் போது கூட, அவர்கள் தொடர்புகளை வலுப்படுத்த நான் முயல்வதில்லை. அவர்களின் தொலைபேசி எண்களைப் பெறவோ தொடர்புகளை வளர்க்கவோ முயல்வதில்லை. ஆனால் அவர்களுடன் செலவிடும் சில விநாடிகளில் ஆழமான ஒன்று அவர்களுக்குடன் பகிரப்படுகிறது. அத்தகைய பகிர்தலை அவர்களில் சிலரும் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அது அப்போதைய நிகழ்வு. எனக்கோ அது நிரந்தரமான செயல்முறை.

நட்பு குறித்த என்னுடைய இந்தக் கோட்பாடு மிகவும் பழமையானதாக இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரை, ஒரு மரமோ, நான் அமர்ந்த இடமோ, நிலமோ, பாறையோ மனிதர்களோ என்னுடன் தொடர்புக்கு வரும் அனைத்தோடும் அனைவரோடும் நான் ஏற்படுத்திக் கொள்ளும் ஆழமான பிணைப்பு, வாழ்வுக்கும் இயற்கைக்குமான பல புதிய பரிமாணங்களைத் திறக்கும் திறவுகோலாகவே இருந்து வந்துள்ளது.

எனவே, என்னைப் பொறுத்தவரை நட்பு என்பது பரிமாற்றம் நிகழும் பங்கு வர்த்தகம் அல்ல. அது உயிர்களின் சங்கமம்.