Question: ராமன், கிருஷ்ணன் போன்ற பல கடவுள்கள் புராண காலத்தில் வாழ்ந்திருக்கிறார்களே, இன்றைக்கு ஏன் அப்படி அவதரிப்பது இல்லை? கடவுள்கள் வாழும் அளவுக்குப் பூமி இன்று புனிதமாக இல்லையா?

சத்குரு:

மகத்தான மனிதர்கள் இன்றைக்கு இல்லை என்று யார் சொன்னது? உலகின் பல புள்ளிகளில் அமைதியாகப் புரட்சி செய்து வருபவர்களைப் பற்றி நீங்கள் அறியவில்லை. அவ்வளவுதான்!

உங்களுக்குக் கதைகளைத்தான் ரசிக்கத் தெரியும். பழையதைத்தான் கொண்டாடத் தெரியும். இன்றைக்கு இருப்பதைப் பற்றிக் குறை சொல்லத்தான் தெரியும்.

ராமன், கிருஷ்ணன் என்று வாழ்ந்து முடித்தவர்களைப் பற்றி சொல்லும்போது, ஒரு வசதி இருக்கிறது. சுவாரஸ்யத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மிகைப்படுத்திச் சொல்லலாம்.

கிருஷ்ணன் மலையைத் தூக்கினான் என்றால், அதை ஏற்கத் தயார். ராமன்விட்ட அம்பு பூமியைத் துளைத்து மறுபக்கம் வந்தது என்றால், கேட்பதற்குத் தயார். இயேசு சொன்னதும், கடலே பிளந்து வழிவிட்டது என்றால், ரசிப்பதற்குத் தயார். ஏனென்றால், பிரமிப்பதற்கு எதுவும் இல்லை என்றால், அதில் உங்களுக்கு ஆர்வம் வருவதில்லை. உங்களில் ஒருவராக இருப்பவரைக் கடவுளாக ஏற்பதில் உங்களுக்கு திருப்தி வருவதில்லை.

பிரபலமான குப்பன்

குப்பனுக்குப் பல பெரிய மனிதர்களைத் தெரியும். ஆனால், அதை அவன் மனைவி நம்பத் தயாராக இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"டெண்டுல்கரைத் தெரியுமா? என்றாள், சவாலாக.

குப்பன் அவளை கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்துப் போனான். விளையாடிக் கொண்டு இருந்த டெண்டுல்கர் மட்டையைப் போட்டுவிட்டு ஓடிவந்து, குப்பனைக் கட்டிக் கொண்டார். "குப்பா, எப்படி இருக்கிறாய்?" என்று விசாரித்தார். மனைவி திகைத்துப் போனாள்.

"இது தற்செயலாக நடந்திருக்க வேண்டும். போகட்டும், உங்களுக்கு அமிதாப்பைத் தெரியுமா?"

மும்பைக்கு மனைவியை அழைத்துப் போனான் குப்பன். அமிதாப் வீட்டு வாசலில் அவரைப் பார்க்க எக்கச்சக்கமான கூட்டம்.

மனைவியை வாசலிலேயே நிறுத்திவிட்டு குப்பன் கூட்டத்தில் வழி பண்ணிக் கொண்டு உள்ளே போனான். சற்று நேரத்தில் பால்கனிக்கு அமிதாப் வந்தார். அவர் தோளில் கைபோட்டபடி குப்பன்!

மனைவி மயக்கமானாள். அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி, "என்ன ஆயிற்று?" என்று குப்பன் கேட்டபோது,

"அதுவா... பால்கனிக்கு நீங்கள் இருவரும் வந்ததும், என் அருகில் இருந்த ஒருவர், "குப்பனைத் தெரிகிறது. ஆனால், பக்கத்தில் அது யார்? என்று கேட்டார். மயக்கம் போடாமல் என்ன செய்வதாம்!" என்றாள்.

ஆவென்று வாயைப் பிளந்து கேட்பதற்கு ஆட்கள் இருக்கும்வரை, இப்படி யாரைப் பற்றி வேண்டுமானாலும் மிகைப்படுத்தி சொல்லலாம்.

யாரை மதிக்கிறோம்?

தங்களை ஆர்ப்பாட்டமாக அறிவித்துக் கொள்பவர்களைதான் நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். யாரையாவது பார்த்து பிரமித்தால்தான், அவர் மீது உங்களுக்கு மரியாதையே வருகிறது.

சாதாரணமாக வாழ்ந்து, சத்தம் இல்லாமல் மாற்றங்களை நிகழ்த்துபவர்களை நீங்கள் மதிப்பதில்லை. ராமன் வந்தபோதும், கிருஷ்ணன் அவதரித்தபோதும், இயேசு வாழ்ந்தபோதும், விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தாம் அவர்களுடைய உண்மையான மதிப்பை அறிந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களை அன்றைக்கு ஏற்கத் தயாராக இல்லை.

ராமனைக் காட்டுக்கு விரட்டியடித்தார்கள். கிருஷ்ணனைப் பெற்ற தாயிடமிருந்து பிரித்து வைத்தார்கள். நபிகள் மீது கல்லெறிந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டவர்கள். அற்புதமானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சில ஆயிரம் வருடங்கள் அல்லவா ஆகிவிட்டன! ஒருவருடைய உண்மையான உள்ளடக்கத்தைத் தெரிந்து கொள்ள நமக்குச் சில நூறு வருடங்களாவது தேவைப்படுகிறது. வெகு கேவலமான நிலை அல்லவா?

உங்களுக்குக் கதைகளைத்தான் ரசிக்கத் தெரியும். பழையதைத்தான் கொண்டாடத் தெரியும். இன்றைக்கு இருப்பதைப் பற்றிக் குறை சொல்லத்தான் தெரியும்.

'உன் அணியைச் சேர்ந்தவன் மலையைத் தூக்கினானா... ஆனால், என் அணியைச் சேர்ந்தவன் கடலைப் பிளந்தான்' என்று போட்டியிட்டுப் பெருமை பீற்றிக் கொள்வதில், கடவுளைவிட தன் அணியை முதன்மைப்படுத்திக் கொள்ளும் அவசரம்தானே தெரிகிறது?

கடவுளைப் புரிந்து கொண்டு யாராவது அப்படி வாழ முயற்சி செய்கிறார்களா? இல்லையே! கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு சண்டை போடுவதன் மூலம்தான் கடவுளின் மதிப்பை நிலைநாட்ட முடியும் என்றல்லவா தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?

உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வதற்காகத்தான் பக்குவமான புத்திசாலித்தனமும், ஆழமான விழிப்பு உணர்வும் தேவைப்படுகிறது.

உடன் இருப்பவர்களின் உண்மையான மதிப்பைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லாமல், அவர்கள் சரித்திரமானதும் போற்றிக் கொண்டாடத் தெரியும் என்றால், இன்றைக்கு உலகில் நடமாடும் மகத்தான சிலரை அடையாளம் கண்டு கொள்ளாமல் தவறவிட்டு விடுவீர்கள்.