பிரபஞ்சத்தை கடுகுக்குள் அடைக்கமுடியுமா? - ஜென்கதையின் விளக்கம்!
நீங்கள் மிகவும் ஆனந்தமாக இருக்கும் சூழலில், 24 மணி நேரங்கள், ஒரு நொடியைப் போல கடந்து போய்விடும். நீங்கள் துன்பத்திலோ, சோகமாகவோ இருக்கும்போது, 24 மணி நேரங்களைக் கடப்பது என்பது 24 மாதங்களைக் கடப்பது போல போராட்டமாக இருக்கும்.
ஜென்னல் பகுதி 37
அன்றைய ஜப்பானில், லிபோ என்று ஒருவன் இருந்தான். வெகு இளமையிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் அவனுக்குப் பேரார்வம். எங்கு சென்றாலும், அவன் தேடிச் செல்வது நூலகத்தைத்தான். இந்த விஷயம்தான் என்று குறுக்கிக் கொள்ளாமல், வெவ்வேறு துறைகளைப் பற்றி கிடைத்த விதம்விதமான புத்தகங்களைத் தேடித் தேடி அவன் படித்தான்.
பத்தாயிரம் நூல் படித்த புத்திசாலி என்று அவனுக்கு ஒரு பட்டம்கூட உண்டு. அதில் அவனுக்குப் பெருமையும் கூட. அப்படிப்பட்ட அவன் ஒரு ஜென் குருவைச் சந்தித்தான்.
"குருவே, எனக்கு ஒரு சந்தேகம். விமல கீர்த்த நிர்த்தேச சூத்திரம் என்பதில் மேரு மலையைக்கூட ஒரு கடுகுக்குள் அடைத்துவிடலாம் என்று போட்டிருக்கிறதே! இது உளறல் இல்லையா..? இது எப்படி சாத்தியம்..?" என்று பணிந்து கேட்டான்.
"நீ இதுவரை எத்தனை புத்தகங்கள் படித்திருப்பாய்?" என்று கேட்டார் ஜென் குரு.
"பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது, குரு.."
"இன்னும் எத்தனை புத்தகங்களை உன்னால் படிக்க முடியும்?"
"உடல் தளர்ந்து படுத்துவிட்டாலும், என் இறுதி மூச்சு வரைக்கும் படுத்தபடியே படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன், குரு.."
Subscribe
"இப்படிப் படிக்கும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை அடைத்து வைக்கும் அளவுக்கு உன் கபாலத்தில் இடம் இருக்கிறதா..?" என்று ஜென் குரு சிரித்தபடியே கேட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தார்.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
நம் யோக சூத்திரங்களில்தான் இப்படி பிரபஞ்சத்தையும், கடுகையும் இணைத்து ஒப்பீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு கடுகுக்குள் அடைத்துவிடமுடியும் என்று யோக சாஸ்திரத்தில் எப்போதோ சொல்லப்பட்டுவிட்டது.
பார்ப்பதற்கு கடுகு மிகவும் சிறுத்து காணப்படும். மிக நுட்பமான சிறிய விஷயங்களைக் குறிப்பிடுவதற்கு கடுகை ஓர் உதாரணமாகவும் நாம் குறிப்பிடுவதுண்டு. எல்லையற்ற ஒரு பிரபஞ்சத்தை எப்படி ஒரு கடுகுக்குள் அடைக்க முடியும்..?
பரவெளி, விண்வெளி இவற்றின் விஸ்தீரணம், காலம் இவையெல்லாமே மனித மனத்தால் உருவாக்கப்பட்டவை. தர்க்கரீதியான வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே இதை அளவிட்டுப் பார்க்க முடியும். இன்றைய நவீன விஞ்ஞானத்தில் இட வெளியையும், காலத்தையும் சுருக்கவோ, நீட்டிக்கவோ முடியும் என்று நிரூபிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
அளவீடுகள் என்பவை பொதுவாகவே மனரீதியானவை.
என்னுடைய வாழ்விலேயே சிலமுறை இது நேர்ந்திருக்கிறது. நான் கண்களை மூடி அமர்ந்திருப்பேன். 5, 10 நிமிடங்களுக்குப் பிறகு, கண்களைத் திறப்பதாக நினைப்பேன். ஆனால், 2, 3 நாட்களே ஓடியிருக்கும். பலமுறை நான் தியானத்தில் ஆழ்ந்து சில நாட்கள் கழித்துக்கூட கண் விழித்திருக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏழெட்டு நாட்களுக்கு எப்படி அசையாமல் ஒரே இடத்தில் இவரால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்று அதிசயமாக இருக்கும். ஆனால், என் அனுபவத்தில் 20, 30 நிமிடங்களே கடந்து போனதாக நான் நினைப்பேன்.
இது உங்கள் வாழ்க்கையிலும் நேர்வதுதான். நீங்கள் மிகவும் ஆனந்தமாக இருக்கும் சூழலில், 24 மணி நேரங்கள், ஒரு நொடியைப் போல கடந்து போய்விடும். நீங்கள் துன்பத்திலோ, சோகமாகவோ இருக்கும்போது, 24 மணி நேரங்களைக் கடப்பது என்பது 24 மாதங்களைக் கடப்பது போல போராட்டமாக இருக்கும்.
இட வெளியும் அப்படித்தான். நாம் ஓய்ந்திருக்கும்போது சிறு தொலைவுகூட நடப்பதற்கு மிகக் கடினமாக இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, பெரும் தூரங்களைக்கூட வெகு சுலபமாகக் கடக்க முடியும்.
எனவே காலம் என்பதும், தூரம் என்பதும் நம் மனதோடு தொடர்புள்ள அனுபவங்கள்தாம். தியானத்தின் தீவிரத்தை உணர்ந்து, அதில் முழுமையாக ஈடுபடக்கூடியவர்களுக்கு, காலம், நேரம், இட வெளி எல்லாவற்றையுமே சுருக்கவும், நீட்டவும் முடியும் என்பதைத்தான் ஜென் குரு அவனுக்கு எளிதாக விளக்கியிருக்கிறார்.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418