பணம் சம்பாதிப்பது தவறா?
நம் தினசரி வாழ்வாதாரத்திற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. ஆனால் பணம் சம்பாதிப்பதில் கவனமாக இருந்தாலோ, 'இவனுக்கு பணத்தாசை' என்று சாடுகிறார்கள். பணம் சம்பாதிப்பது குற்றமா?
சத்குரு:
Subscribe
வாழ்வாதாரத்திற்கு பணம் வேண்டும் என்பதாக இல்லாமல், தங்களுக்கென்று இவ்வுலகில் ஒர் அந்தஸ்தை உருவாக்கித் தரும் வஸ்துவாகவே பணத்தை பலரும் நினைக்கின்றனர். இதை நோக்கித்தான் அவர்களின் 'பணம் சம்பாதிக்கும்' முயற்சிகள் இருக்கின்றன. பணம் இருந்தால் மட்டுமே 'நான்' இருக்கிறேன், 'நான்' இருக்க முடியும் என்கிற அளவிற்கு பணத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது.
நீங்கள் 'உங்களை' சம்பாதிப்பதற்கான முயற்சிதான் இது. ஆம், உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில், நீங்கள் இப்போது இருக்கும் விதத்தில் ஒரு பற்றாக்குறையை உணர்கிறீர்கள் - மனதளவில், உணர்ச்சியளவில், உடலளவில். அதனால், எவ்வாறோ பலவற்றை சேகரித்து, அந்தப் பற்றாக்குறையை நிரப்பிட பல நிலைகளில் முயற்சிக்கிறீர்கள், ஆனால் அந்த நிறைவுதான் ஏற்பட்ட பாடில்லை. நீங்கள் மிகச் சிறிய மனித உயிராக இருந்தாலும் எவ்வாறோ நிறைய பொருள் சேர்த்துவிட்டால், வலிமையாக இருப்போம் என்ற நம்பிக்கையில் பலவற்றை சேகரிக்கிறீர்கள். ஆனால் எத்தனை சேர்த்தாலும் உங்களுக்குள் நிறைவு மட்டும் ஏற்பட மாட்டேன் என்கிறது, இல்லையா?
'பணம்' என்பது நமக்கு வேண்டியவற்றை பெறுவதற்கான ஒரு சாதனம் மட்டுமே, அதற்கென்று தனி அர்த்தம் கிடையாது. நமக்கு வேண்டியவற்றை பெற அது ஒரு சாதனம் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பணத்திற்கு தனியாகவே மதிப்பு இருந்தால், நீங்கள் பிரத்யேகமாக உங்களுக்கென்று அதை அச்சடித்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது வெற்றுக் காகிதமாக மட்டுமே இருக்க முடியும் அல்லவா? நமக்கு வேண்டியதை பணத்தால் சாதித்துக் கொள்ள முடியும் என்பதாலேயே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது. பணம் ஒரு வழிவகை, ஒரு கருவி. உலகில் நமக்கு வேண்டியவற்றை அடைய, பணம் ஒரு வழி மட்டுமே.
பக்குவமற்று, மிக மேம்போக்கான புரிதல் உடையவர்களே பணத்தை வழிபடுவர். பணக் குவியல்களை மக்கள் 'லட்சுமி' என்று வணங்குகின்றனர். வழிபாடுகளிலேயே கடைத்தரமான வழிபாடு, 'பண வழிபாடு' தான். காரணம், பணத்திற்கென்று தனியாக மதிப்போ சக்தியோ ஏதும் இல்லை, அது நமக்கு வேண்டியவற்றை அடைய ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இன்று உலகில் இருக்கும் சமூகங்கள் தங்கள் வாழ்க்கையைப் பொருளாதார வளத்தைச் சுற்றி அமைத்திருப்பது அவர்கள் செய்துள்ள மிகப் பெரிய தவறு. அன்பு, ஆனந்தம், மனிதநேயம், கலை, இசை என எதற்கும் அவர்கள் வாழ்வில் முக்கிய இடம் இல்லை. பொருளாதாரம், பொருளாதாரம் மட்டுமே எங்கெங்கிலும் மேலோங்கி இருக்கிறது. உணர்வளவில் மேன்மையான விஷயங்களில் அக்கறை கொள்ளாமல், பொருளாதாரத்தை வாழ்வில் முக்கியமானதாக வைத்துக் கொண்டால், உங்கள் வாழ்வும் இயல்பாகவே மேம்போக்காக, இயந்திரத்தனமாகத்தான் அமையுமே தவிர, அழகும் நயமும் ரசனையும் நிறைந்த அனுபவமாய் மிளிராது. மென்மையான, மேன்மையான விஷயங்கள் உங்களுக்குள் நுழையாது, நுழையவே முடியாது. அதே நேரத்தில், பொருளாதார வளமின்றி, இந்தக் கலை நயங்களை நாம் அடையவும் முடியாது. அவற்றை அடைய, அவற்றில் லயிக்க நமக்கு பொருளாதார வளமைத் தேவைப்படுகிறது.
மிக ஏழ்மையான நிலையில் சமூகங்கள் இருந்தால், அவர்களால் மேன்மையானவற்றைச் சிந்திக்க முடியாது. தினசரி வாழ்க்கை, உணவு, உடற்தேவை என அவர்கள் வாழ்க்கை 'உடலளவில்' நடைபெறும் செயல்களிலேயே காணாமல் போய்விடும். இதுவே ஒரு சமூகத்தில் செல்வம் வளம் கொழித்தால், பணம் மட்டுமே பிரதானமாய் மாறிப் போனால், அவர்கள் வாழ்க்கை மிகவும் கீழ்த்தரமாக, குரூரமாகவே இருக்கும். போதிய அளவிற்கு செல்வம் இருந்து, அதே நேரத்தில் அது தேவைக்கு மிக அதிகமாக இல்லாமல் இருந்தால் மட்டுமே, பிற விஷயங்களும் தழைத்து வளர முடியும். நாம் அந்தச் சமநிலையை அடைய முயற்சிக்க வேண்டும். பொருளாதார வளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நான் இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் அதே நேரத்தில், வாழ்வின் மற்ற அம்சங்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.