ஒரு ஞானிக்கு பொருளாதார மாநாட்டில் என்ன வேலை?

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார உச்சி மாநாட்டுக்கு சென்று வந்தீர்கள். யோக குருவாக இருக்கும் உங்களுக்கும் பொருளாதார மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
 

Question:டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார உச்சி மாநாட்டுக்கு சென்று வந்தீர்கள். யோக குருவாக இருக்கும் உங்களுக்கும் பொருளாதார மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

சத்குரு:

நான் பார்ப்பது என்னவென்றால், தற்போது உலகம் உள்ள நிலையில் இன்னும் 10-15 வருடங்களுக்குள் அரசியல் மற்றும் ராணுவத் தலைமையை விட பொருளாதாரத் தலைமைதான் இந்த உலகில் பெரும் பங்கை வகிக்கப் போகிறது என்பதைத்தான். எனவே எப்படிப்பட்ட மனிதர்கள் தலைவராகப் போகிறார்கள், அவர்களின் மனப்பான்மை எப்படிப்பட்டது என்பதுதான், உலகம் எப்படி நடக்கப் போகிறது என்பதை நிர்ணயிக்கும். பலவிதங்களில் மனிதகுலத்தின் தரத்தை அவர்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்கள். பொருளாதாரச் சக்திக்கு வெளியே வெகுசிலர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

குறுகிய அடித்தளத்தின் மீதுள்ள பொருளாதாரச் செறிவு என்பது ஒரு முட்டாள்களின் சொர்க்கம் தான்.

எனவே, என்னுடைய அக்கறை வாழ்க்கை மீதுதான், வர்த்தகத்தின் மீது அல்ல. ஆனால் பொருளாதார வர்த்தகங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியாக ஆகிவிட்டன. அதை நீங்கள் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. எனவே, நான் செல்லும்போது மக்கள் இந்தக் கேள்வியை ஓயாமல் கேட்கிறார்கள். ஒரு ஞானிக்கு இங்கே என்ன வேலை?
அங்கே வந்த தொழில் தலைவர்களெல்லாம் என்னைப் போன்ற ஒருவரை எதிர்பார்க்கவில்லை. அவர்களெல்லாம் மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் பயின்று வந்தவர்கள். அதனால் இந்தக் கேள்வி அவர்களின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால்.. 'தெரிந்ததைப் பிதற்றிக் கொண்டிருப்பதைவிட அவர்கள் வேறு எதையும் புரிந்து கொள்ளப் போவதில்லை' என்று எனக்குத் தெரியும். தற்போது உலகில் 50% மக்கள் இன்னமும் பட்டினி கிடக்கிறார்கள். சரியாக உண்பதில்லை. சரியாகக் கூட சாப்பிட வழியில்லாமல் பட்டினியாக இருப்பவர்களிடம் ஆன்மீகம் பற்றிப் பேசமுடியாது, தியானம் பற்றிப் பேச முடியாது, அவர்களின் முன்னால் ஞானோதயம் என்ற சொல்லை உச்சரிக்கக்கூட முடியாது. ஒரு மனிதன் சரியாகக் கூட சாப்பிட வழியில்லாமல் இருக்கும்போது, வாழவின் வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசுவது அசிங்கம் என்றே நான் நினைக்கிறேன்.

நான் அங்கே ‘அனைவரையும் சேர்த்துக் கொள்ளும் பொருளாதாரம்' பற்றிப் பேசினேன். உலகில் பாதி மக்களை தத்தளிக்க விட்டுவிட்டு நீங்கள் உங்கள் வியாபாரத்தைத் தொடர்கிறீர்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களுக்கு உங்கள் தயவு தேவையில்லை. தற்போது அவர்கள் ‘தொழில் அமைப்புகளின் சமூகப் பொறுப்பு’ என்ற ஒன்றைப் பற்றிப் பேசுகிறார்கள். அது தயவு என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்தான். தயவு ஒருபோதும் நீடித்திருப்பது இல்லை.

ஆனால் நாம் பொருளாதாரச் செயல்முறையில் எல்லா மக்களையும் ஈடுபடுத்தக் கூடிய வழிமுறைகளையும், அமைப்புகளையும் பற்றிப் பார்க்கிறோம். உதாரணமாக இந்தியாவில் முழுப் பொருளாதாரச் செழுமைக்கு 20, 25 இலட்சம் பேர் மட்டுமே காரணம். குறுகிய அடித்தளத்தின் மீதுள்ள பொருளாதாரச் செறிவு என்பது ஒரு முட்டாள்களின் சொர்க்கம் தான். இது மிக எளிதாக சிதறிப்போகும். எனவே, நான் விரும்புவது அனைவரையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதுதான். அப்படிச் செய்யும் போது எல்லோரும் நன்றாகச் சாப்பிட்டால் என்னுடைய சந்தையும் விரிவடையும்.

Question:உங்கள் விளக்கம் அவர்களுக்குப் புரிந்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே நீங்கள் அவர்கள் மனதை ஆழமாகத் தொட்டீர்களா அல்லது ஒரு அலங்கார மனிதராகத்தான் அங்கே இருந்தீர்களா?

சத்குரு:

இல்லை. யாராக இருந்தாலும் ஒருவர் அவருக்குள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது அவரை அணுகினால், அவர் மிகவும் அற்புதமான மனிதர். யாராக இருந்தாலும் அப்படித்தான். அதே மனிதரை அவர் மகிழ்ச்சியாக இல்லாதபோது, அமைதியாக இல்லாதபோது அணுகினால் அவர் மிக அசிங்கமான மனிதர். இல்லையா? இது ஒவ்வொருவருக்கும் உண்மைதான் இல்லையா?

அன்பு, கருணை மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகும்போது, அவை எல்லா எல்லைகளையும் துடைத்தழித்துவிடும்.

நாங்கள் தென்னிந்தியாவிலும், அமெரிக்காவின் சில சிறைச்சாலைகளிலும் யோக வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். கொலையாளிகள், கற்பழித்தவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் என எல்லாக் குற்றங்களையும் புரிந்தவர்கள் அவர்கள். எங்கள் நேரத்தில் 20 சதவீதத்தையும் வளங்களையும், சக்திகளையும் சிறை வகுப்புகளுக்கென செலவிடுகிறோம். இவர்களது கதையைக் கேட்டால், ஒவ்வொருவரின் பின்னாலும் மிகப்பெரும் குற்றங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் என்னோடு இருக்கும்போது மிக அற்புதமான மனிதர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவன் உலகிலேயே மிகப் பெரும் குற்றவாளியாக இருந்தால் கூட அற்புதமான மனிதன் தான். அவன் மகிழ்ச்சியாக இல்லாதபோது மிகவும் அபாயகரமானவனாக இருக்க முடியும். இது ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

எனவே, நாட்டின், உலகின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் நேரத்தில் குறிப்பிட்ட அளவை தங்கள் உள்நிலை நலவாழ்விற்கென செலவிட்டு அமைதியான, மகிழ்ச்சியான மனிதராக ஆகாவிட்டால், தங்களிடம் உள்ள அதிகாரத்தின் காரணமாக அவர்கள் உலகின் மிக அபாயகரமானவர்களாக ஆகக்கூடும். எனவே, நான் அந்தச் சூழ்நிலை மங்கிப் போகச் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்.

மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் மனிதர்கள் - மற்றவர்களுக்கு அது தெரியாவிட்டாலும் கூட - முடிவெடுக்கும் போது அவர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களுக்கானது மட்டுமல்ல. தொழில்துறை சமூகம் தங்கள் வாழ்வில் குறுகிய குறிக்கோளில் இருந்து பிரம்மாண்டமான பார்வையுடன் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். அதுதான் இப்போது தேவைப்படுகிறது. மக்கள் ஒரு சிறிய இலட்சியத்திலிருந்து அடுத்த குறுகிய இலட்சியம் நோக்கித்தான் செயல்படுகிறார்கள். அதற்குப் பதிலாக, மொத்த மனித குலத்திற்குமான விசாலமான பார்வையுடன் தலைமை செயல்பட்டால், அது அனைவரது நலவாழ்விற்கும் வழிவகுக்கும். இது சாத்தியமில்லாத ஒன்றல்ல, சாத்தியமானதுதான். ஏனென்றால் தொழிலில் ஊறித்திளைத்த மனிதர்களுடன் நான் இருந்திருக்கிறேன். இந்தமுறை டாவோஸில் கடைசியாக நடந்த அமர்வில் நான் பேசினேன். அந்த அமர்வு எப்படிச் சென்றது என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பலரது கண்களிலும் கண்ணீர். ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டார்கள். உலகப் பொருளாதார உச்சிமாநாடு ஒருபோதும் இப்படி நிறைவானதில்லை. அது அவ்வளவு அற்புதமாய் இருந்தது. எல்லோரும் அங்கே அப்போது இல்லை. சில நூறுபேர் மட்டுமே இருந்தனர். அவர்களில் பலரது கண்களிலும் கண்ணீர். இந்தக் கண்ணீர் ஏழை, பணக்காரனுக்கு இடையில் உள்ள பாகுபாட்டைத் துடைத்தெறியும்போது, நமக்கிடையே நாமே வரைந்துள்ள எல்லைகளை துடைத்தொழிக்க முடியாதா? அன்பு, கருணை மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகும்போது, அவை எல்லா எல்லைகளையும் துடைத்தழித்துவிடும். அவர்கள் எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்தால், உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 2000 தலைவர்களுக்கும் அந்த நிலையை உணரச் செய்ய முடியும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1