நரகத்திற்குப் போக விரும்பும் ஜென் குரு!
![நரகத்திற்குப் போக விரும்பும் ஜென் குரு!, naragathirku poga virumbum zen guru](https://static.sadhguru.org/d/46272/1633379153-1633379152094.jpg)
ஜென்னல் பகுதி 6
பொதுவாக ஜென் குருமார்கள் சொல்வது இயல்பை மீறிய விஷயம்போல் தோன்றினாலும், அவர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் ஆழம் மிக்கதாய் இருக்கும். அந்த வகையில், இந்த ஜென்குரு தான் நரகத்தில் கழுதையாக இருக்கப்போவதாகச் சொல்வது ஏன் என அறிய தொடர்ந்து படியுங்கள்! குருவின் வார்த்தைகளில் உள்ள ஆழத்தை சத்குரு விவரிக்கிறார்!
ஜென் குருவிடம் ஒருவன் கேட்டான்: ‘‘100 வருடங்கள் கழித்து நீங்கள் எங்கே இருப்பீர்கள்?’’
குரு சொன்னார்: ‘‘குதிரையாகவோ, கழுதையாகவோ நரகத்தில் இருப்பேன்.’’
‘‘இவ்வளவு ஞானியாக இருக்கும் நீங்கள் எதற்காக நரகத்துக்குப் போக வேண்டும்?’’
Subscribe
‘‘வேறு யார் அங்கே உனக்குக் கற்றுத் தருவார்?’’
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
கௌதம புத்தர்கூட, நரகத்துக்குத்தான் போக விரும்புவதாகச் சொன்னார், ‘’சொர்க்கத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்றால், அங்கே எனக்கு என்ன வேலை இருக்க முடியும்? நரகத்தில் இருப்பவர்கள்தாம் துன்பத்தில் உழல்வதாகச் சொல்கிறார்கள். அங்கே போனாலாவது என்னால் ஏதாவது செய்ய முடியும்!’’
ஜென் குருவும் அதையேதான் சொல்கிறார். கூடுதலாகக் கொஞ்சம் நாடகத்தனம் சேர்த்து, அங்கே ஒரு கழுதையாகப் போக விரும்புவதாகச் சொல்கிறார்.
கழுதை என்பது முட்டாள் மிருகமாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், ஜென் குரு கழுதையாகப் போக விரும்புகிறார். ஏன்?
‘என்னுடன் இவ்வளவு காலம் இருந்தும் உன்னால் மேன்மை நிலையை எட்ட முடியவில்லை. உன்னைப்போல் ஒரு கழுதையை, இன்னொரு கழுதையைத் தவிர நரகத்தில் யார் மதிப்பார்கள்? வேறு யார் சீடராக ஏற்றுக்கொள்வார்?’ என்று தன்னிடம் கேள்வி கேட்பவரிடம், ஜென் குரு கேட்கிறார். அந்த அளவுக்கு மூடராக இருப்பவர்கள் மீதும் அபரிமிதமான கருணையுடன் உள்ளவரே உண்மையான குரு!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418