பொறுப்பு மற்றும் கடமை ஆகிய இரண்டு தன்மைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை பெரும்பாலானோர் அறிவதில்லை! உண்மையில் பொறுப்பேற்பது என்றால் என்ன என்பதையும், ‘நான் பொறுப்பு’ என்ற உணர்வுடன் இருக்கும்போது உள்நிலையில் நிகழக்கூடிய அற்புதம் என்ன என்பதையும் சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார்!

சத்குரு:

பொதுவாகவே, பொறுப்பு என்றால், சுமைகளைச் சுமப்பது என்று அர்த்தமாக்கிக் கொள்பவர்கள்தான் அதிகம்.

கடமையைச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும், உங்களுக்குக் களைப்புதான் மிச்சமாகும். ரத்த அழுத்தம் ஏறும்.

பொறுப்பு என்பதைக் கடமை என்று தவறாக நினைப்பதால்தான் இப்படி சுமையாகத் தோன்றுகிறது. சின்ன வயதிலிருந்தே, உங்களுக்குள் ஒரு கடமை உணர்வை வளர்த்திருப்பார்கள். மகனைப் படிக்க வைப்பது தந்தையின் கடமை, வயதான தந்தையைக் கவனித்துக்கொள்வது மகனின் கடமை, மாணவனைத் தயார் செய்வது ஆசிரியரின் கடமை, சட்டத்தை மதித்து நடந்துகொள்வது குடிமகனின் கடமை, எல்லையில் நாட்டைக் காப்பது ராணுவத்தின் கடமை என்றெல்லாம் சொல்லிச் சொல்லி கடமை என்ற வார்த்தையை உங்களுக்குள் ஆழமாக விதைத்திருப்பார்கள்.

கடமையைச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும், உங்களுக்குக் களைப்புதான் மிச்சமாகும். ரத்த அழுத்தம் ஏறும்.

தன்னுடைய செருப்புத் தொழிற்சாலைக்கு அந்த முதலாளி வந்திருந்தார். அங்கே, ஒரு பகுதியில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது.

ஒரு தொழிலாளி அட்டைப் பெட்டியை எடுத்து அதன் மீது லேபிள் ஒட்டினார். அடுத்தவருக்குத் தள்ளினார். அவர் அந்தப் பெட்டியில் ஒற்றைச் செருப்பைப் போட்டார். அவரை அடுத்திருந்தவர் அந்தப் பெட்டியை மூடி ஒட்டினார். அந்தப் பெட்டி விற்பனை செக்ஷனுக்குச் செல்லும் வண்டியில் ஏற்றப்பட்டது.

“என்ன நடக்கிறது இங்கே? செருப்புகளை ஜோடியாகத்தானே தயாரிக்கிறோம்? ஏன் ஒற்றைச் செருப்புகளாக பாக் செய்கிறீர்கள்?” என்று முதலாளி பதறினார்.

“ஐயா, இங்கே எந்தத் தொழிலாளரும் வாங்கிய சம்பளத்துக்குத் தங்கள் கடமையைச் செய்யத் தவறுவதில்லை. பிரச்சனை என்னவென்றால், இடது கால் செருப்பை எடுத்து பெட்டியில் போட வேண்டியவர் மட்டும் இன்றைக்கு லீவு” என்று மேலாளரிடமிருந்து பதில் வந்தது.

தங்கள் கடமையிலிருந்து தவறாத தொழிலாளர்கள் இருந்தாலும், அந்த முதலாளியின் வியாபாரம் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

முழுமையாகப் பொறுப்பேற்காமல், கடமையைச் செய்வதாக மட்டுமே நினைத்து செயல்பட்டால், அது உங்கள் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. விரைவிலேயே சலிப்பும், வெறுப்பும், விரக்தியும்கொண்ட இயந்திரமாக மாறிப் போவீர்கள். யார் சொல்லியோ செய்யாமல், அதை நீங்களாக பொறுப்புடன் விரும்பிச் செய்தால் மட்டுமே இந்த வேதனை இருக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

முதலில் பொறுப்பு என்பதைச் செயலாக மட்டுமே நினைப்பதை விடுங்கள். பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள்.

எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுபூர்வமாக, முழுமையாக பொறுப்பேற்கும்போது, “இது என்னுடையது” என்ற உணர்வு ஏற்படுகிறது. எப்போது அதை உங்களுடையதாகவே உணர்ந்துவிடுகிறீர்களோ, அது எப்போதுமே சுமையாக இருப்பதில்லை.

இதற்கு நான் பொறுப்பு என்று உணரும்போது, இது என் கணவன், என் வீடு, என் வண்டி என்று உணர்கிறீர்கள். இது என்னுடையது எனும்போது முழுமையான ஈடுபாடு வருகிறது. அப்போது அது மிகவும் எளிமையானது ஆகிறது, எந்தபாரமும் இல்லை.

ஹுய்தி என்றொரு ஜென் குரு இருந்தார். அவர் தன் தோளில் எப்போதும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து செல்வார். அதில் என்னென்னவோ விஷயங்கள் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும், குழந்தைகளைப் பார்த்தால், அதிலிருந்து இனிப்புகளை எடுத்து வழங்குவார்.

ஒருமுறை இன்னொரு ஜென் குரு எதிர்ப்பட்டார்.

“ஜென் என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். ஹுய்தி உடனே தன் மூட்டையைக் கீழே போட்டுவிட்டு நிமிர்ந்து நின்றார்.

“ஜென்னின் நோக்கம் என்ன?” என்று அடுத்த கேள்விவந்தது. ஹுய்தி கீழே போட்ட மூட்டையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தார்.

எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுபூர்வமாக, முழுமையாக பொறுப்பேற்கும்போது, “இது என்னுடையது” என்ற உணர்வு ஏற்படுகிறது. எப்போது அதை உங்களுடையதாகவே உணர்ந்துவிடுகிறீர்களோ, அது எப்போதுமே சுமையாக இருப்பதில்லை.

மூட்டையை அவருடையது என்று நினைக்காமல் கீழே போடவும் முடியும், சந்தோஷமாக சுமக்கவும் முடியும் என்பதையே அவர் குறிப்பால் உணர்த்தினார்.

இந்த பூமியையே உங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டீர்கள் என்றாலும், அது என்னுடையது என்று உணரும்போது அதில் பாரம் எதுவுமே தோன்றுவதில்லை. ஆனால் “நான் பொறுப்பில்லை” என்ற உணர்வோடு ஒரு குண்டூசியை எடுத்தால்கூட அது டன் கணக்கில் பாரமாகிப் போய்விடுகிறது. இது நீங்கள் தினமும் அனுபவிக்கக்கூடிய உண்மையல்லவா?

அடிப்படையில் “நான் பொறுப்பு” என்று உணரும்போது உங்கள் வாழ்விற்கு விருப்பத்தோடு பதிலளிக்கிறீர்கள். “நான் பொறுப்பில்லை” என்று நினைத்தால் எதிர்ப்பும், விருப்பமின்மையும்தான் உருவாகும்.

வாழ்விற்கு நீங்கள் விருப்பத்துடன் பதிலளிக்கும்போது, அந்த இனிமையைத்தான் சொர்க்கம் என்கிறார்கள். விருப்பமின்றி, எதிர்ப்புணர்வுடன் பதிலளிக்கும்போது அதையே நரகம் என்கிறார்கள்.

எனவே சொர்க்கம், நரகம் என்பது மரணத்திற்குப் பிறகு போகும் இடங்கள் அல்ல.

இங்கேயே, இப்போதே நீங்கள் உருவாக்கிக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள்தான் அவை. உங்கள் ஆபீஸாக இருந்தாலும், வீடாக இருந்தாலும், கடைத் தெருவானாலும், பள்ளிக்கூடமானாலும், விளையாட்டு மைதானமானாலும், எங்கேயிருந்தாலும் சரி, உங்கள் சூழல் எதுவாக இருந்தாலும் விருப்பத்தோடு முழுமையாக பதிலளிக்கக் கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்றால், இந்த வாழ்க்கை எப்போதுமே உங்களுக்கு சொர்க்கமாக மட்டுமே இருக்கும்.