மூங்கில் மரத்தின் மூலம் வழங்கப்பட்ட ஞானம்!
வாழ்க்கையை, உயிரை, அதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இது உயர்வு, இது தாழ்வு, இது உயரம், இது குள்ளம், இது அழகு, இது குரூரம், என்று ஒப்பிட்டு, தீர்மானங்களுக்கு வருவதை விட்டொழிக்க வேண்டும்.
ஜென்னல் பகுதி 39
புத்தரின் வாழ்க்கையைப் பற்றி மற்றவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட ஒருவனுக்கு அவரைப் போன்ற உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற பேரவா தோன்றியது.
எத்தனையோ குருமார்களைச் சந்தித்து, இது பற்றி விசாரித்தான். அவர்கள் கொடுத்த விளக்கங்கள் அவனுக்குப் போதுமானதாக இல்லை.
அவனுடைய தவிப்பைப் பார்த்து, "அந்த மலை உச்சியில் புத்தரைப் பற்றி முழுமையாக உணர்ந்த ஒரு குரு வாழ்கிறார். அவரிடம் சென்று உன் சந்தேகத்தைக் கேள்.." என்று யாரோ சொன்னார்கள்.
கடினமான மலைப்பாதையில் பயணம் செய்து, இறுதியில் உச்சியில் இருந்த குருவின் குடிலுக்குச் சென்றான். அங்கு ஏற்கெனவே, பல சீடர்கள் இருப்பதைக் கவனித்தான். அவர்களுடன் குரு பேசிக்கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும், அருகில் அழைத்தார்.
"என்ன வேண்டும்..?"
"புத்தரின் போதனைகளைப் புரிந்துகொள்ள அலைந்து கொண்டிருக்கிறேன். எத்தனையோ ஆசான்களைச் சந்தித்தேன். யாரும் முழுமையாக என் சந்தேகத்தைத் தீர்க்கவில்லை. அவர்களைவிட நீங்கள் சிறப்பாக சொல்வீர்கள் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன்.
"அப்படியா..? உட்கார்.. இவர்களெல்லாம் போன பிறகு சொல்கிறேன்.." என்றார் ஜென் குரு.
வந்தவனுக்கு மனம் நிறைந்துபோனது. இத்தனை சீடர்கள் இவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் என்றாலே மற்ற குருமார்களைவிட இவர் சிறப்பானவர் என்றுதானே அர்த்தம்..?
ஒவ்வொரு சீடரிடமும் ஏதோ பேசி அனுப்பிவிட்டு குரு இறுதியில் இவனிடம் வந்தார். "என்னுடன் வா..!" என்றார். மலைச்சரிவில் அவனைச் சற்று தூரம் அழைத்துச் சென்றார். குறிப்பிட்ட இடம் வந்ததும், எதிரில் வளர்ந்திருந்த தாவரத்தைக் காட்டினார். "இது என்ன..?" என்றார்.
Subscribe
"மூங்கில் மரம்.."
அருகருகே இருந்த மூங்கில்களைக் காட்டினார். "இதைப் பார்த்ததும், உனக்கு என்ன தோன்றுகிறது..?" என்றார். "இந்த மூங்கில் உயரமாய் இருக்கிறது. அந்த மூங்கில் இன்னும் வளராமல் குட்டையாக இருக்கிறது.." என்றான் அவன்.
"இவை மூங்கில்கள்.." என்று சொல்லிவிட்டு, குரு திரும்பி நடந்தார்.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
நீங்கள் ஆறடி உயரம் என்று வைத்துக்கொள்வோம். ஐந்தரை அடிக்குமேல் உயராதவர்கள் மத்தியில் இருக்கும்போது, உயரமானவர் என்ற எண்ணம் உங்களுக்குள் எழும். உயரமானவர் போலவே நடப்பீர்கள். உயரமானவர் போலவே உட்காருவீர்கள். உயரமானவர் போலவே ஓடுவீர்கள்.
திடீரென்று உங்களை நாடு கடத்திப் போய் வேறொரு சமூகத்தில் விடலாம். அங்கே, குறைந்தபட்ச உயரமே எட்டடியாக இருந்தால், அந்தச் சமூகத்தில் திடீரென்று நீங்கள் குள்ளமானவராக உணர்வீர்கள். குள்ளமானவர் போலவே நடப்பீர்கள். குள்ளமானவராக உணர்ந்தே அமர்வீர்கள்.
புலன் உணர்வு மூலம் மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் தீர்மானங்கள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்தே அமைகின்றன. உண்மையில் அது உண்மையை அப்படியே ஏற்காமல் உங்கள் தீர்மானத்தை அதன் மீது திணிப்பதாக இருக்கிறது. அன்றாட வாழ்வை நடத்துவதற்கு மட்டுமே ஒப்பிட்டுப் பார்ப்பது தேவைப்படுகிறது. ஆறடியாக இருந்தாலும், எட்டடியாக இருந்தாலும் நீங்கள், நீங்கள்தானே..?
ஒன்றைத் தொட்டுப் பார்த்து, அது குளுமையாக இருக்கிறது என்றால், அதைத் தொட்டுப் பார்ப்பவரின் உடல் அதைவிட அதிக உஷ்ணத்துடன் இருக்கிறது என்பதுதானே உண்மை..?
இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது உண்மையாக உணர்வது ஆகாது. வாழ்க்கையை, உயிரை, அதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இது உயர்வு, இது தாழ்வு, இது உயரம், இது குள்ளம், இது அழகு, இது குரூரம், என்று ஒப்பிட்டு, தீர்மானங்களுக்கு வருவதை விட்டொழிக்க வேண்டும்.
புத்தரின் போதனைகளாக இருந்தாலும், யோகாவின் அடிப்படைகளாக இருந்தாலும், வாழ்க்கையை அது எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே உணர்வதுதான். மற்றதுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அல்ல.
இது நடக்க வேண்டுமானால், புலன்களால் உணர்ந்து பதிந்துகொள்வதைத் தாண்டி நீங்கள் பயணம் செய்ய வேண்டும். ஏனென்றால், மனிதனின் புலன்கள் ஒப்பிட்டுப் பார்த்து உணரும் அளவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் ஒரு யானையாக இருக்கும்போது, சிங்கம், சிறு மிருகமாகத் தெரியும். நீங்கள் எலியாக இருக்கும்போது, அதே சிங்கம் பெரிய மிருகமாகத் தோன்றும். எறும்புக்கு அந்த எலியே பெரிய மிருகமாகத் தோன்றும்.
நீங்கள் யார் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் அவசியமற்றது. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்ப்பது சாத்தியமான போதுதான், ஒரு சித்தார்த்தன் புத்தனாக மாறினான். ஏனென்றால், எதனுடனும் ஒப்பிட்டுப் பார்த்து உணர்ந்துகொள்வதல்ல உண்மை.
இதைத்தான் ஜென் குரு அவனிடம் குறிப்பிடுகிறார்.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418