மாட்டிக்கொண்ட திருடனை மன்னித்த ஜென்குரு!
எந்தச் சீடனும் என்னவாக மாறக்கூடிய உள்ளாற்றல் கொண்டவன் என்பதைக் கவனித்து, அதை வெளிக்கொணர குரு வேலை செய்வாரேயன்றி, இன்றைக்குப் போதிய திறன் அவனிடம் இல்லையே என்று உதாசீனம் செய்யமாட்டார்.
ஜென்னல் பகுதி 26
சீடர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
“இவன் மறுபடியும் எங்களிடம் திருடிவிட்டான்” என்று குருவிடம் ஒருவனைத் தள்ளினார்கள், சீடர்கள்.
“அவனை மன்னியுங்கள்” என்றார் குரு.
“வாய்ப்பே இல்லை. உங்களுக்காகப் பலமுறை மன்னித்தோம். இம்முறை அவனை நீங்கள் துரத்த மறுத்தால், நாங்கள் அனைவரும் வெளியேறிவிடுவோம்” என்றனர் சீடர்கள்.
“நீங்கள் அனைவரும் வெளியேறினாலும், அவனை வெளியேற்றும் எண்ணம் எனக்கு இல்லை” என்றார் குரு.
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
மனிதன் எப்பேர்ப்பட்ட தண்டனையையும் துணிச்சலுடன் பொறுத்துக்கொள்வான். நீங்கள் மேலும் மேலும் கடுமையானவராகச் செயல்படுகையில், தண்டனைகளை எதிர்கொள்பவன், அவற்றைக் கையாள மேலும் மேலும் அதற்கான திறமையை வளர்த்துக் கொள்வான்.
ஆனால், காரணங்களுக்கு அப்பாற்பட்ட அதீத கருணை அவனைத் தோற்கடித்துவிடும், நொறுக்கி உடைத்துவிடும், கரைத்துவிடும். மேலும், குருவாக இருப்பவர் இன்றைய சூழலை மட்டும் வைத்து யாரையும் எடை போடுவதில்லை. தென்னை மரத்தை நட்டு வளர்ப்பவர், நான்காவது வாரமே காய்க்கவில்லை என்று மரத்தை வெட்டிப்போட மாட்டார். எந்தச் சீடனும் என்னவாக மாறக்கூடிய உள்ளாற்றல் கொண்டவன் என்பதைக் கவனித்து, அதை வெளிக்கொணர குரு வேலை செய்வாரேயன்றி, இன்றைக்குப் போதிய திறன் அவனிடம் இல்லையே என்று உதாசீனம் செய்யமாட்டார்.
சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தங்கள் மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அதை விடுத்து, இப்படிச் செய், அப்படிச் செய் என்று குருவுக்கு நிபந்தனைகள் போடுபவர்களாக இருந்தால், அவர்களுக்கு அதிகாரத்தைச் செலுத்துவதில்தான் ஆர்வம் இருக்கிறது.
தங்கள் மாற்றத்தில் உண்மையான ஆர்வம் இல்லை என்றாகிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களுடன் நேரத்தை வீணடித்துக் கொண்டு இருப்பதைவிட, அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிப்பதே புத்திசாலித்தனம்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418