ஜென்னல் பகுதி 25

ஜென் குருவிடம் ஒருவர் வந்தார்.

“ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர் நான். போர்க்களத்துக்குச் சென்று, காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது என் வேலை. உயிருக்குப் போராடிய பல வீரர்களை என் மருத்துவம் காப்பாற்றி உள்ளது. ஆனால், அந்த வீரர்கள் மறுபடியும் போருக்குப் போவதும் அங்கே உயிரைவிடுவதும் என்னை மிகவும் துக்கம்கொள்ள வைக்கிறது. சாகத்தான் போகிறார்கள் என்றால், அவர்களை எதற்குப் போராடிக் காப்பாற்ற வேண்டும்?”

ஜென்குரு புன்னகைத்தபடிச் சொன்னார், “நீ செய்ய வேண்டியதை நீ செய். அவர்கள் செய்ய வேண்டியதை அவர்கள் செய்யட்டும்!”

சத்குருவின் விளக்கம்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

(தமிழில் சுபா)

உங்கள் வாகனத்தைப் பழுதுபார்ப்பவர், “இந்த வாகனத்தை நீ மறுபடியும் தெருவில்தான் ஓட்டப் போகிறாய். தேய்மானம் அடைந்து, பழுது பார்க்க மறுபடியும் என்னிடம் வரத்தான் போகிறாய். எதற்காக நான் இப்போது இதைப் பழுது பார்க்கவேண்டும்?” என்று கேட்பதுபோல் தான் இருக்கிறது, அந்த மருத்துவரின் கேள்வி.

என்னிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைத்தவர்களைச் சரி செய்துகொண்டுதான் இருக்கிறேன். அப்படி ஒப்படைத்தவர்களுடைய பிரச்சனைகளையும் பழுது பார்த்து அனுப்புவேன். மீண்டும் காயம்பட்டுத் திரும்பி வருவார்கள். மீண்டும் பழுது பார்த்து அனுப்புவேன்.

உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அது வளர்ந்து பெரிதாகி, என்றோ ஒருநாள் செத்துப் போகுமே என்பதற்காகக் குழந்தை பெற்றுக் கொள்ளாமலே இருக்கமுடியுமா? பெற்றதை வளர்க்காமல்தான் இருக்கமுடியுமா?

நீராகப் பொழிந்தாலும், மறுபடியும் எப்படியும் ஆவியாகத்தானே மாற வேண்டும் என்று மேகங்கள் நினைத்துவிட்டால், மழை ஏது?

கொல்லப்படுவதற்காக யாரும் போருக்குப் போவது இல்லை. எதிர் அணியினைக் கொல்வதற்காகத்தான் போகிறார்கள். ஆனால், கொல்லப்படவும் தயாராக இருப்பவர்கள்தான் போருக்குப்போக முடியும்.

மருத்துவரின் வேலை என்ன? உயிர்களைக் காப்பாற்றுவது. வீரர்களின் வேலை என்ன? போருக்குப் போவது. இந்தத் தெளிவுடன் வாழ்க்கையை அணுகினால், மன வருத்தங்கள் இருக்காது.

இது என் வாழ்விலும் அடிக்கடி நடக்கிறது. ஒரு பிரச்சனையைக் கொண்டு வருவார்கள். அவர்களுக்குத் தீர்வு சொல்வேன். மறுபடியும் அதே பிரச்சனையோடு வருவார்கள். “இப்படிப்பட்டவர்களை உதாசீனம் செய்யலாமே?” என்று உடன் இருப்பவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால், நான் கைவிடுவது இல்லை. என்னிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைத்தவர்களைச் சரி செய்துகொண்டுதான் இருக்கிறேன். அப்படி ஒப்படைத்தவர்களுடைய பிரச்சனைகளையும் பழுது பார்த்து அனுப்புவேன். மீண்டும் காயம்பட்டுத் திரும்பி வருவார்கள். மீண்டும் பழுது பார்த்து அனுப்புவேன்.

வீரனுக்குச் சிகிச்சை அளிப்பது, அவனை மறுபடி போருக்குத் தயார் செய்வதற்காகத்தான்! எதிரியைக் கொல்ல அனுப்பப்படுபவன், எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம். அது மருத்துவரின் பிரச்சனை அல்ல!


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418