மனதின் சர்க்கஸ்!
உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக அற்புதமான கருவியாகவும் மிக அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கிற மனமே, உங்களுக்கான துயரங்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும் மாறிப்போனது எப்படி?
சர்க்கஸ் தெரியும், அதென்ன மனதின் சர்க்கஸ்?
முதலில் சர்க்கஸ் என்பது என்ன?
மிக நேர்த்தியாய் ஒழுங்குபடுத்தப்பட்ட, அதேநேரம் பெரும் குழப்பம் நேர்வதைப்போல் தோன்றக் கூடிய செயல்களின் ஒருங்கிணைப்பு. ஒரு விதத்தில் பெருங்குழப்பம், இன்னொரு விதத்தில் வெகு நேர்த்தி!
மனித மனதிலும் மூளையிலும் அதேதான் நிகழ்கிறது. மூளையில் நியூரான்களின் நடனத்தைப் பார்த்தால், அசாத்தியமான ஒழுங்கும் திட்டமிடலும் அதில் உள்ளன. அவையே உடலசைவாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் ஒருங்கிணைக்கும் அற்புத நாடகத்தின் விளைவாக, மனித உடலுக்குள் கோடிக்கணக்கான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்களின் அனுபவத்தில், மனம் என்பது குழப்பங்களின் குவியலாகத் தோன்றுகிறது.
சர்க்கஸில் பாருங்கள், அங்கிருக்கும் கோமாளிகூட வித்தைகளில் தேர்ந்தவர்தான். ஆனால் ஒரு கோமாளி போல் நடந்துகொள்கிறார். வெளித் தோற்றத்தில் ஒரு கோமாளி போலவும் வித்தையில் திறமையும் சமநிலையும் கொண்டவராக இருக்கிறார். மனதுக்குள் ஏற்படும் செயல்களின் அடிப்படையில் பல பேருடைய அனுபவமும் அப்படித்தான் இருக்கிறது.
மனம் நடத்தும் வித்தைகளில் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன? அவை உங்களை உயர்ந்த சிகரங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். அல்லது உங்களுக்குள்ளேயே ஆழ்ந்த நரகங்களை உருவாக்கலாம். உங்கள் ஒவ்வொருவருக்குமே இந்த இரண்டு வாய்ப்புகளும் உள்ளன. எனவே, இந்த வித்தையை எப்படி நடத்தப் போகிறீர்கள், அதற்கு எப்படிப் பொறுப்பேற்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே எல்லாம் இருக்கிறது. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக அற்புதமான கருவியாகவும் மிக அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கிற மனமே, உங்களுக்கான துயரங்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும் மாறிப்போனது எப்படி?
மனிதர்களின் அத்தனை துயரங்களும் மனதிலேயே உருவாகின்றன. ஒருவருக்கு மனம் ஓர் இனிய அனுபவமாய் இருக்கிறது. இன்னொருவருக்கோ, அது தாங்க முடியாத துயரமாய் இருக்கிறது. அந்தத் துயரத்தைத் தாள முடியாமல் அதிலிருந்து தப்பிக்க, சில மன வக்கிரங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். அவை தற்காலிக நிம்மதி தந்துவிடும். பிறகு துயரத்தை இரண்டு மடங்கு பெருகச் செய்யும்.
உங்கள் தர்க்க அறிவு எல்லாவற்றையும் இரண்டாகப் பகுத்துக்காட்டுகிற தன்மை கொண்டது. தர்க்க அறிவு இப்படி தனித்தனியாகப் பகுத்துத் தருவதே, உங்களுக்குள் ஒருவிதமான புரிதலை ஏற்படுத்தத்தான். ஒரு கத்தி எதையும் இரண்டாக வெட்ட வேண்டுமென்றால், வெட்டப்பட்டது கத்தியில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். நீங்கள் வெங்காயத்தை வெட்டுகிறீர்கள். பிறகு அதே கத்தியால் ஆப்பிள்களையும் மாம்பழங்களையும் நறுக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கத்தியில் வெங்காயச் சாறு ஒட்டியிருந்தால், ஆப்பிளும் மாம்பழமும் வெங்காயத்தின் சுவையோடிருக்கும். ஏதேனும் ஒன்றின் சாறு கத்தியில் ஒட்டிக்கொண்டால், அதன் பிறகு கத்தி உங்களுக்கு உதவியாக இருக்காது. உபத்திரவமாகத்தான் இருக்கும். அதுபோல உங்கள் தர்க்க அறிவு தன்னை எதனோடாவது அடையாளப்படுத்திக் கொண்டால், பிறகு அந்த அடையாளங்களோடு பிணைக்கப்பட்டுவிடும். மனதின் அனுபவம் முழுவதுமாகச் சிதைந்துவிடும்.
Subscribe
புனிதத்தைச் சென்றடையும் ஏணியாய் இருக்க வேண்டிய உங்கள் மனம், பல்வேறு விஷயங்களுடன் தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட காரணத்தாலேயே நரகத்துக்கான படிக்கட்டுகளாய் மாறிவிட்டது.
பலரும் என்னிடம் “சத்குரு! வாழ்வின் மகத்தான ஒரு விஷயம் நீங்கள் கேளாமலேயே உங்களுக்கு இயல்பாக நேர்ந்துவிட்டது. நீங்கள் அதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள். எங்களுக்கு அது எப்போது நேரும்?” என்று கேட்பார்கள்.
இது தேர்ந்தெடுப்பதால் நிகழ்வதில்லை. அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பதால் நிகழ்கிறது. உங்கள் உடலோடு, ஆண் பெண் என்னும் பாலின பேதத்தோடு, உங்கள் குடும்பத்தோடு, உங்கள் தகுதிகளோடு, உங்கள் சமூகத்தோடு, உங்கள் ஜாதி, இனம், மொழி, தேசம் என்ற விதவிதமான அடையாளங்களோடு உங்கள் தர்க்க அறிவு தன்னை இனம் காணும்போது, எந்தவொரு மனிதரும் தன் இயல்பான தன்மையின் உச்சத்தைத் தொட முடியாது.
ஈஷா பள்ளியை நாம் துவங்கியபோது “இது ஆன்மீகப் பள்ளியா? மாணவர்களுக்கு ஆன்மீகம் போதிப்பீர்களா?” என்பதுதான் முதல் கேள்வியாகக் கேட்கப்பட்டது. அதை நாங்கள் செய்யவே மாட்டோம் என்று பதில் சொன்னேன். இந்த உலகில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஆனால் பெரும் சேதங்களையும் சீரழிவையும் ஏற்படுத்துவது மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த முறைகேடுகள்தான். ஏனெனில் அவற்றோடு மிக உறுதியாக உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதைத்தாண்டி உங்களால் பார்க்க முடிவதில்லை. எனவே, இத்தகைய அடையாளங்களைத் தாண்டி குழந்தைகள் வளர்க்கப்படும்போது, தன்னை உணர்தலை நோக்கி அவர்கள் இயல்பாக வழிநடத்தப்படுவார்கள். எனவே மனம் என்னும் சர்க்கஸை குழப்பமானதாய் உணராமல் ஓர் அற்புதமாக நீங்கள் உணர வேண்டுமானால், உங்கள் அறிவு தன்னை எதனோடும் அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடாது. அத்தகைய அடையாளங்கள் வாழ்க்கை பற்றிய உங்கள் புரிதலை உருக்குலைத்துவிடும்.
அக்பர் - பீர்பால் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அக்பர் குழந்தையாக இருந்தபோது வேறொரு பெண்ணிடம் பாலருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு. அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்த அன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்து எல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார். ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘சக்ரவரத்திக்கு என் அன்னைதான் பால் கொடுத்தார். அவர் எனக்குக் கடமைப்பட்டவர். ஒருவகையில் அவர் எனக்கு சகோதரர் முறை. ஏதாவது கேட்டால் அவரால் மறுக்க முடியாது’. இந்த எண்ணம் தோன்றியதால் அவர் அக்பரைக் காண வந்தார். அக்பரும் அவரை வரவேற்று மரியாதை செய்து, அனைவருக்கும் தன் சகோதரர் என்று அறிமுகப்படுத்தி அரண்மனையில் தங்கவைத்தார். அவரும் அரச உடைகள் அணிந்து பல கூட்டங்களில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு எதுவுமே புரியவில்லை.
சில வாரங்கள் போயின. அவருக்கு இன்னொன்றும் தோன்றியது. என்னைச் சுற்றி நல்லவர்கள் யாரும் இல்லாததால்தான் எனக்கு சிரமங்கள் வந்தன. அக்பரைச் சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் மேலாக பீர்பால் இருக்கிறார். அக்பர் சிறந்து விளங்க இதுதான் காரணம். பீர்பால் போல் ஒருவர் உடனிருந்தால் நானும் சிறந்து விளங்குவேன் என்று நினைத்தார். அக்பரிடம் சென்று, ‘உங்களுடன் பீர்பால் இருப்பதால் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள். உங்களுடன் பலர் இருக்கிறார்கள். எனவே என்னுடன் பீர்பாலை அனுப்பிவையுங்கள்’ என்று கேட்டார். அவரைத் தனது மூத்த சகோதரராக அக்பர் கருதியதால் எதுவும் மறுத்துச் சொல்ல இயலவில்லை. எனவே அக்பர், ‘நீங்கள் பீர்பாலை அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னதோடு மாலையில் அவையிலும் அதனை அறிவித்தார். ஒரு முட்டாளோடு போக நேர்வதை உணர்ந்த பீர்பால், “உங்கள் அண்ணனுக்கு அறிவார்ந்த துணை அவசியம்தான். எனக்கு ஒரு யோசனை. அவரோடு என் அண்ணனை அனுப்பி வைக்கிறேன் என்றார்”. பீர்பால் இவ்வளவு அற்புதமான மனிதராக இருந்தால், அவரது சகோதரன் இன்னும் அற்புதமானவராக அல்லவா இருப்பார் என்று கருதிய அக்பரின் அண்ணன் அதற்குச் சம்மதித்தார். அக்பருக்கும் மகிழ்ச்சி.
மறுநாள் வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடானது. பீர்பால், ஒரு காளை மாட்டுடன் வந்தார். ஆச்சரியமடைந்த அக்பரிடம் சொன்னார். ‘இதுதான் என் அண்ணன், நாங்கள் இருவரும் ஒரே தாயிடம்தான் பாலருந்தினோம்’ என்று.
பெரிதாகவும் சிறிதாகவும் சில அடையாளங்களை மனித மனம் பற்றிக்கொள்வதால் வருகிற குழப்பங்கள் இவை. உங்கள் அடையாளங்கள் பல அடுக்குகளில் இருப்பதால், உங்கள் குழப்பங்களும் பல அடுக்குகளில் இருக்கின்றன. அப்படியிருந்தால் உங்கள் மனம் எந்த உயரத்தையும் நோக்கி எழாது.
நீங்கள் பிறந்த நாளிலிருந்தே குடும்பத்தோடு உங்கள் அடையாளத்தைத் தீவிரப்படுத்த, உங்கள் பெற்றோர் கடும்முயற்சி மேற்கொள்கின்றனர். உங்கள் சமூகத்துக்கும், ஜாதிக்கும், மதத்துக்குமான உங்கள் விசுவாசத்தை அதிகரிக்க இன்னும் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். தேசத்துக்காக நீங்கள் உயிரையே தரவேண்டுமென்றும் பிரசாரங்கள் நிகழ்வதுண்டு. வெவ்வேறு நிலைகளால் வெவ்வேறு தன்மைகளுடன் உங்கள் அடையாளம் உறுதிப்பட வேண்டி எத்தனையோ பிரசாரங்கள் நிகழ்கின்றன. நீங்கள் சுதந்திரமான மனிதராக இருப்பதை யாரும் விரும்புவதில்லை. சுதந்திரம் கிடைத்தால் நீங்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையில், ஒருவருக்கு மனதளவில் சுதந்திரம் இல்லாதபோதுதான், ஏதேனும் ஒன்றோடு ஆழமாக அடையாளப்படுத்திக் கொள்கிறபோதுதான், அவரால் இன்னொருவருக்குத் தீமை செய்ய முடியும். உங்களுடனே உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளாதபோது யாருக்கும் நீங்கள் தீமை விளைவிக்க முடியாது.
இந்தப் பிரசாரங்களோடு உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்வதால், உங்கள் தன்மையே சிதைகிறது. உங்களை நம்பச் செய்வதற்காக எந்தப் பிரசாரத்தையும் செய்யத் தயாராகிறீர்கள். ஒன்றை நீங்கள் வணங்கவும் மற்றொன்றை வெறுக்கவும் என உங்களைத் தக்க வைத்துக்கொள்ள எந்த அளவுக்கும் போகத் துணிகிறீர்கள். அப்படியிருந்தால் மனம் ஒழுங்குப்பட்ட வித்தைக் கூடமாய் இராது. குழப்பமாகத்தான் இருக்கும்.
இப்போது ஈஷா யோகாவில் உள்நிலை பொறியியல் என்று நாங்கள் வழங்குவது, ஒரு போதனையோ, தத்துவமோ, கொள்கையோ, நம்பிக்கையோ, மதமோ அல்ல. அடிப்படையில் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும், உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் நடுவில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கம். இந்த இடைவெளி ஏற்பட்டுவிட்டால் உங்கள் மனதில் குழப்பம் இருப்பதில்லை. மகத்தான ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.
இந்த இடைவெளியை துறவுநிலை என்று பலரும் தவறாகக் கருதுவது துரதிர்ஷ்டவசமானது. அனுபவ நிலையில் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடைவெளி ஏற்படுமே தவிர, உங்கள் குடும்பத்திலிருந்தோ, உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்தோ நீங்கள் விலக மாட்டீர்கள். உடல் என்று நீங்கள் அழைப்பதிலிருந்தும், மனம் என்று நீங்கள் அழைப்பதிலிருந்தும் உங்கள் பிணைப்பை விடுவிக்கிறீர்கள். ஏனெனில் இவையிரண்டுமே வெளியிலிருந்து நீங்கள் சேகரித்தவை.
காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளும் திரும்பத் திரும்பச் சாப்பிட்டதால் உங்களுக்குக் கிடைத்தது இந்த உடம்பு. ஐம்புலன்கள் மூலமாக நீங்கள் சேகரித்த அவ்விஷயங்கள்தான் உங்கள் உணர்வுகள். ஆனால் நான் என்று எதனை அழைக்கிறீர்களோ, அது நீங்கள் சேகரித்த விஷயங்களைக் கடந்ததாக இருக்க வேண்டும். இந்த வித்தியாசம் உங்களுக்குள் எழுந்தால்தான், உங்கள் மனதை அதன் அடையாளங்களிலிருந்து அகற்றினால்தான், மனம் ஓர் அற்புதம் என்பது விளங்கும்.
ஏனெனில் மனம் என்பது குழப்பங்களின் கூடாரம் இல்லை... அது ஒழுங்குபடுத்தப்பட்ட வித்தைக் கூடம்!