மனச்சோர்வு ஏன் வருகிறது? எப்படி மீள்வது?
இன்று வெளிச்சூழல் பலவிதங்களில் சௌகரியமாகிவிட்ட நிலையிலும்கூட, மனித மனங்களில் மனச்சோர்வு குறைந்தபாடில்லை! மனச்சோர்வு மனிதனை தாக்க காரணம் மற்றும் தீர்வு குறித்து சத்குருவின் ஆழமான கருத்துக்கள் இங்கே!
கேள்வி: நாங்கள் பெரியவர்களாக வளர வளர, எங்கள் அனைவருக்குள்ளேயும் மனச்சோர்வு ஒரு இயற்கையான நிகழ்வாகி மிகவும் பாதிப்பதாக உள்ளது. இந்த பாதிப்பான சூழ்நிலையோடு நாங்கள் எப்படி பொருந்திச் செல்வது?
சத்குரு:
உங்களுக்குள் இருக்கும் உயிரின் அளப்பரிய தன்மையை உங்களால் நிர்வகித்துக்கொள்ள இயலாமல் போவதே மனச்சோர்வு எனப்படுகிறது. நீங்கள் மனச்சோர்வு கொண்டால், உடலும் கூட சோர்ந்து போகிறது. உங்களுக்குள் இருக்கும் உயிர்த் தன்மையானது உற்சாகத்தில் இல்லை. நீங்கள் அதற்கான சரியான செயல் செய்யாத காரணத்தால், அது தீவிரம் குறைந்து, அதன் உற்சாகத்தை இழந்துவிட்டது. மிக அதிகமான வெளிப்புற முட்டாள்தனங்களை நீங்கள் உங்களுக்குள் திணிக்கிறீர்கள். ஆனால் உங்களது உயிர் சக்திகளை உச்சநிலையில் வைத்திருப்பதற்கு நீங்கள் எதையும் செய்திருக்கவில்லை.
Subscribe
இந்த வாழ்க்கைக்கு எவ்வளவு அதிகமாக உங்களை உட்படுத்திக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் துயரப்படுவீர்கள். அதற்காக நீங்கள் ஒரு அறைக்குள் சென்று உங்களையே ஒளித்துக் கொண்டால், கரப்பான் பூச்சிகள் ஒத்துழைக்கும் வரை நீங்கள் நலமாக இருக்கலாம். ஆனால், அவைகள் எண்ணிக்கையில் பெருகிவிட்டால், மறுபடியும் நீங்கள் துன்பம் கொள்வது நடக்கிறது. வெளிச்சூழல்களில் வாழ்க்கையைக் கையாளும் திறன் மக்களுக்கு இல்லாதபோதெல்லாம், அவர்கள் தங்களது வாழ்வை முறித்துக்கொண்டு, பின்வாங்கிவிட முயற்சிக்கின்றனர். ஆனால் அப்படி பின்வாங்குவதும் கூட அவர்கள் விருப்பத்தின்படி அல்லாமல் அவர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்துவிடுகிறது, இல்லையா? உங்களில் ஒரு பகுதி எப்போதும் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறது. உங்களது செயல்பாட்டின் எல்லைகளையும், தளங்களையும் எப்போதும் அதிகரிக்க நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களில் உள்ள இன்னொரு பகுதி, நீங்கள் நினைக்கின்ற விதத்தில் ஏதோ ஒன்று நிகழாதபோதெல்லாம் மனச்சோர்வு அடைகின்றது. உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போதெல்லாம் மனச்சோர்வு உண்டாகிறது.
மக்கள் தங்களது மனநிலையில் மனச்சோர்வை பல வழிகளில் உருவாக்கிக்கொள்ள முடியும். மதிப்புமிக்கதாக அவர்கள் நினைக்கும் ஒன்றை, அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டால், பிறகு மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலானவர்களிடம் வருத்தத்திற்குரியது என்னவென்றால், குறிப்பாக செல்வ வளமுள்ள சமூகங்களில், அவர்களிடம் எல்லாம் இருக்கிறது, இருப்பினும் ஏதுமற்றவர்களாக உள்ளனர்.
ஒரு ஏழை, “நாளைக்கு எனக்கு ஒரு புது ஜோடி செருப்பு கிடைத்தால், எல்லாம் சரியாகிவிடும்“ என்று மிகச் சாதாரணமாக நினைக்கலாம். ஒரு புதிய ஜோடி காலணி அவனுக்கு கிடைத்துவிட்டால், அவன் முகத்தில் மகத்தான ஆனந்தத்துடன், ஒரு மகாராஜாவைப் போல் நடப்பான். ஏனென்றால் அவனுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. வாழ்வின் வெளிப்புற வசதிகள் அவனுக்கு இன்னமும் பூர்த்தியாகவில்லை. ஆனால் செல்வச்செழிப்புள்ள சமூகத்தில் வெளிப்புறம் பூர்த்தியாகிவிட்டது, ஆனால் உள்நிலையில் முழுமையடையவில்லை. ஆகவே நம்பிக்கையின்மையும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. எனவே சமூகம் என்று பார்க்கும்போது, முதலில் நாம் உள்நிலையை நிர்ணயிக்க வேண்டும். அதற்குப் பிறகு வெளிப்புற நலனுக்கு செயல்பட வேண்டும். அப்போது உலகம் அழகாக இருக்கும்.
ஆன்மீக வழிமுறை என்று நாம் கூறுவது இதுதான். உங்கள் வாழ்வின் பொருளியல் அம்சங்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதல்ல, நீங்கள் யார் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்வதில் கவனம் செலுத்துவது. அதில் கவனம் செலுத்தவில்லை என்றால், உங்களிடம் அனைத்தும் இருக்கும், ஆனால் உங்களிடம் எதுவும் இருக்காது.