இந்த குடியரசு தினத்தில் நம் பாரத தேசம் பற்றி நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்ன என்பதை விளக்குகிறார் சத்குரு...

சத்குரு:

நம் பாரம்பரியத்தில் ஒரு மனிதர் 60 வயதை அடையும்போது, வாழ்வின் ஒரு பகுதி நிறைவுற்று புதிய தொடக்கத்துக்குள் அடியெடுத்து வைப்பதாகக் கருதுகிறோம். ஒரு தேசமாக, குடியரசு இந்தியா இன்று 66 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பலருக்கு இந்தியாவில் வாழ விருப்பம் இல்லை. ஆனால் திரும்ப இங்கே வந்து இறந்து போக விருப்பம்.

இந்த 66 ஆண்டுகளில் தியாகம், ஊழல், மிகப்பெரும் சாதனைகள், பறிகொடுத்த வாய்ப்புகள், 4 போர்கள், தலையெடுக்கும் தீவிரவாதம் எனப் பலவற்றைக் கடந்து தேசம் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது. தடைகள் பல இருந்தாலும், முற்றிலும் புதிய சாத்தியங்களை எட்டக்கூடிய கட்டத்தினை நோக்கிச் செல்ல முயன்று கொண்டிருக்கிறோம்.

ஒரு தேசம் என்பது நம் மனதில் இருக்கும் ஒரு கருத்து மட்டும் தானே தவிர, அது ஒரு உண்மை நிலை இல்லை. ஜாதி, மதம், இனம், நிறம் இந்த அடிப்படையில் பிரிக்காமல், நாடு என்ற அடிப்படையில் மக்களை அது பிரித்து வைக்கிறது. தெளிவாக எல்லைகள் வகுக்கப்பட்ட தேசங்கள் கடந்த 100 வருடங்களாக மட்டுமே அமலில் இருக்கின்றன. அதற்கு முன்பு தேசம் என்பது வலுவான ஒரு கருத்தாக இருந்ததில்லை. எந்த தேசத்தையும் சாராத பலர் இந்த பூமியில் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுதோ அப்படி இல்லை. நீங்கள் ஏதோ ஒரு தேசத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு வேற்று கிரகவாசியாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு பூமியில், எந்த தேசத்தையும் சாராமல் ஒருவர் இருப்பது சாத்தியமே இல்லை. கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவையெல்லாம் உங்களுக்குத் தேவை. அடையாளம் இல்லாமல் இருப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை. ஏதோ ஒன்றாக, எதையோ சார்ந்து நீங்கள் இருந்தே ஆக வேண்டும். இது ஒரு தலைசிறந்த யோசனை இல்லைதான். ஆனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பெருந்திரளான மக்களை ஏதோ ஒரு வகையில் முன்னேற்றி செல்ல "தேசம்" என்ற கருத்து முக்கியமானது. இது இல்லையென்றால் பலர் எல்லாவற்றில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள். இதன் அடிப்படையில் இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள், இந்த தேசத்தின் வாழ்வில், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்வில் முக்கியமான ஒரு நாளாகும்.

பலருக்கு இந்தியாவில் வாழ விருப்பம் இல்லை. ஆனால் திரும்ப இங்கே வந்து இறந்து போக விருப்பம். இங்கே உள்ள புனிதமான பல தலங்களில் இறப்பது முக்திக்கு இட்டு செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை. தற்பொழுது இது ஒரு கபட நாடகம் போல் ஆகிவிட்டாலும் இதற்கு ஒரு விதமான உண்மை அடிப்படை உள்ளது. ஒரு குறிப்பிட்ட தேசம் இன்னொன்றை விட மேலான சாத்தியம் என்று ஏன் நினைக்கிறார்கள்? நீங்கள் கல்வி கற்க வேண்டுமென்றால் அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ, லண்டனோ செல்கிறீர்கள் இல்லையா?

சில இடங்கள், சில வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்டவை. கல்வி என்றால் ஒரு இடம் செல்ல வேண்டும், சாஸ்த்ரிய சங்கீதம் கற்க வேண்டுமென்றால் சென்னை செல்ல வேண்டும் இப்படி... இது போல முக்தி என்றால், நம் பாரத தேசம் நோக்கியே பல ஆயிரம் வருடங்களாக மக்கள் வந்திருக்கின்றனர். ஏனென்றால் உள்நிலை வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் இங்கேதான் பெரிதளவில் ஆய்வு செய்யப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது, தியானலிங்கம் போன்ற கருவிகளும் உருவாக்கப்பட்டன. இது ஒரு ஒளி கோபுரம். ஏதோ ஒன்றை நீங்களாகவே அடைய முடிந்தால் அது அற்புதம்தான், ஆனால் ஒரு கருவியின் துணை இல்லாமல், வெளியில் இருந்து உதவி இல்லாமல் எத்தனை பேருக்கு இது சாத்தியம்?

எனவே சரியான விஷயங்களுக்கு, சரியான இடங்களுக்கு செல்வதென்பது ஒரு பொருத்தமான செயல்முறை. இந்தியா ஆன்மிகத்தின் நுழைவாயில். இந்த வகையில் நம் தேசத்தின் அடிப்படை பண்பை பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு தேசமாக நாம் உலகின் மற்ற பகுதிகளுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறோம். இந்த தேசத்தில் உள்ள ஞானத்தை உயிர்ப்பித்தால், தேசத்தை திறம்பட நடத்தலாம். ஏனென்றால் மனித இனத்தின் உள் இயல்பு குறித்த அடிப்படை கூறுகள் குறித்தே உலகின் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கோ இது குறித்த ஆய்வுகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய ஆராய்ச்சியும் வளர்ச்சியும் என்பது மனிதர்கள் மீதான குறிப்பிடத்தக்க முதலீடு. தலைமுறை தலைமுறையாக இந்த ஒன்றின் இயல்பு பற்றி புரிந்து கொள்ள பலர் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார்கள். இதை நாம் திரும்ப கொண்டு வந்தால் உலகம் முழுவதும் உள்நிலை நலனுக்கு இந்தியா நோக்கி வர விரும்பும்.

வரக்கூடிய ஆண்டுகள், பெரும்பாலான மக்களின் வறுமையைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றும். மிகப் பெரும் மக்கள் திறனைக்கொண்டு, வாழ்க்கையை இப்போதிருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு முதன்முதலாக நம் கைக்கு வந்துள்ளது. ஒரு தேசமாக நாம் ஒற்றுமையோடும், விழிப்போடும், கவனத்தோடும் செயல்பட்டால் இது உண்மையாகவே நடந்தேறும். இதற்கு முன் இல்லாத சாத்தியங்களை உணர்கிற அதிர்ஷ்டத்தைப் பெறுகிற இந்தியத் தலைமுறையாக நாம் இருப்போம்.

புதிய சாத்தியங்களை நோக்கி நம் தேசம் செல்லட்டும்!