காவி நிறம் இந்து மதத்தை சார்ந்த நிறம் என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால், காவி என்பது இந்த மண் சார்ந்தது என்பதை சத்குருவின் இந்த பதில் உணர்த்துகிறது. காவி நிறத்திற்கு இந்தக் கலாச்சாரத்தில் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானப் பூர்வமான காரணம் என்ன என்பதைத் தொடர்ந்து படித்தறியுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: பல கோவில்களில் சுவற்றுக்கு காவி நிறத்தில் வர்ணம் பூசுகின்றனர். பல முனிவர்கள் காவி நிறத்தில் தான் உடை அணிந்து இருந்தனர். இந்து சமய முறைப்படி காவி நிறத்திற்கு ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா?

சத்குரு:

காவி நிறம் இந்து சம்பிரதாயத்தை சேர்ந்தது அல்ல. இந்த மண்ணே அந்த நிறத்தில்தான் உள்ளது. ஒரு துறவி எந்தவித சாயமும் பயன்படுத்தவில்லை. அவர் தன் உடைகளை மண்ணில் தோய்த்து உடுத்திக் கொள்கிறார். எனவேதான் அவர் உடை காவி நிறத்தில் இருக்கிறது.

இந்த உடலே மண்தான். எனவே உடல்நிலையில், மன நிலையில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இந்த மண்ணுடன் நாம் தொடர்பில் இருக்க வேண்டும். இந்தத் தொடர்பை உறுதி செய்துக் கொள்வதற்காக நாம் பலவிதமான கருவிகளை உருவாக்கி இருக்கிறோம்.

அதேபோன்று காலங்காலமாக, இங்குள்ள கோவில்களுக்கும் வர்ணங்கள் ஏதும் பூசப்படுவதில்லை. வெறும் செம்மண்னை குழைத்துப் பூசி வந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில், கோவில்களுக்கு எந்த வர்ணங்களையும் பயன்படுத்தவில்லை, செம்மண்ணையே பயன்படுத்தினர். ஆனால் தற்போதோ, வாஸ்து பெயிண்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி அசிங்கம் செய்துவிட்டார்கள். இங்கு ஈஷா யோகா மையத்தில் கூட நாம் வர்ணத்திற்கு செம்மண்ணையே பயன்படுத்துகிறோம். இங்குள்ள அத்தனை கட்டிடங்களும் செம்மண்ணால் வர்ணம் தீட்டப்பட்டுள்ளன. இந்த மண்ணிற்கு சில குறிப்பிட்ட குணங்கள் இருப்பதால்தான் அதனை வர்ணமாகவும் சாயமாகவும் பயன்படுத்துகிறோம்.

குறிப்பாக சொல்லப் போனால் இந்த உடலே மண்தான். எனவே உடல்நிலையில், மன நிலையில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இந்த மண்ணுடன் நாம் தொடர்பில் இருக்க வேண்டும். இந்தத் தொடர்பை உறுதி செய்துக் கொள்வதற்காக நாம் பலவிதமான கருவிகளை உருவாக்கி இருக்கிறோம். அதில் குறிப்பாக நம் கலாச்சாரத்தை பின்னோக்கிப் பார்த்தால், நிலத்தில் அமர்ந்து உணவருந்துவது, நிலத்தில் உறங்குவது போன்றவை எல்லாம் உருவாக்கி வைத்தார்கள். இதன் மூலம் நிலத்துடன் உள்ள நம் தொடர்பை நம்மால் ஆழப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தத் தொடர்பை ஆழப்படுத்திக் கொள்வதற்காகத்தான் மண்ணில் தோய்த்த ஆடைகளை அணிந்தார்கள். இதனால் நம் உடலில் எப்போதும் மண் ஒட்டிக் கொண்டே இருக்கும், மண்ணுடன் எப்போதும் தொடர்பில் இருப்போம். இந்த பூமித்தாயின் கருவில் இருக்கக் கூடிய உணர்வு ஏற்படும்.

அத்தகைய உணர்வுடன் இருக்கும்போது, இவ்வுடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கருவில் இருந்தால் புத்துணர்ச்சி தானே? ஏதோ இரு செல் உயிராய் இருந்த நாம் இன்று இவ்வளவு பெரிய உயிராய் வளர்ந்ததற்குக் காரணமே அந்தக் கருவறைதானே? எனவே அப்படியொரு புத்துணர்ச்சி நமக்குள் எப்போதுமே ஏற்பட வேண்டுமென்றால், நாம் தொடர்ந்து இந்த பூமித்தாயின் கருவறையில் இருக்க வேண்டும்.

மண்ணைத்தான் நாம் உணவாய் உண்கிறோம், மண்ணையே நம் ஆடையில் பூசிக் கொள்கிறோம், அதனையே நம் சுவர்களிலும் வர்ணமாய் அடிக்கிறோம். இப்படி செய்து நாம் இந்த மண்ணுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதால், நம் உடலும் மனமும் உறுதியான நிலையை அடைகிறது. இந்தப் புரிதலில்தான், இப்பழக்கத்தை உருவாக்கினார்கள். காவி இந்து சம்பிரதாயத்தின் நிறம் என்று சொல்வதைவிட இம்மண்ணின் நிறம் என்று நாம் சொல்லலாம். என்ன செய்வது, உண்மை அதுதானே?