ஞானமடைந்த துறவியை ஜென்குரு ஏன் தலையில் அடித்தார்?
ஜென்னல் பகுதி 12
ஒரு துறவி இருந்தார். தன் பயணத்தின்போது, ஒரு ஜென் குருவை அவர் சந்தித்தார். ‘’எனக்கு ஞானோதயம் கிடைத்த தருணத்திலேயே என் மனம், என் புத்தி எல்லாமே வெறுமையாகி விட்டது. என் மனதில் இப்போது புத்தரோ, வேறு துறவியோ, உழைப்போ, பரிசோ, ஏன் ஞானோதயமோகூட இல்லை. ஒன்றுமற்ற தன்மைதான் எல்லாவற்றின் அடிப்படைத்தன்மை’’ என்று துறவி பெருமையாகச் சொன்னார்.
ஜென் குரு பொளேர் என்று அவரைத் தலையில் அடித்தார். துறவி அதிர்ந்து, ‘’எதற்காக என்னை அடித்தீர்கள்?’’ என்று கோபமானார். ‘’எல்லாம் ஒன்றுமில்லாதது ஆகிவிட்டது என்றால், இது எங்கேயிருந்து வந்தது?’’ என்று ஜென் குரு சிரித்துக்கொண்டே கேட்டார்.
சத்குருவின் விளக்கம்:
Subscribe
(தமிழில் சுபா)
ஞானோதயம் என்பது போராடிக் கைப்பற்ற வேண்டிய ஒரு நிலை அல்ல. பெருமைக்குரிய சாதனையாக அதை நினைப்பது எப்படி இருக்கிறது தெரியுமா? ‘இன்று ஒரு வாழைப்பழம் சாப்பிட்டேன்’ என்பதையே பெருமையாக கொண்டாடிக்கொள்வதுபோல் இருக்கிறது. ஞானோதயம் என்பது இங்கிருந்து வேறு எங்கோ குடிபெயர்வது அல்ல. ஞானோதயம் என்பது கூடு திரும்புவது போல் ஓர் அடிப்படைத்தன்மை. கூட்டைவிட்டுப் பல பறவைகள் பறந்து போய்விட்டதால், கூட்டுக்குத் திரும்புவதே அவற்றுக்குப் பெருமையாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
வெறுமை என்றால், எதற்கும் உபயோகம் இல்லாமல் புத்தியற்றவராக ஆகும் தன்மை அல்ல. வெறுமை என்றால், நீங்கள் சேகரித்த தன்மைகளை வைத்து உங்களை நிரப்பிக்கொள்ளாமல் இருப்பது. வெறுமை நிலையை அடைந்துவிட்டால், ஒரு கட்டத்தில், உங்களுடையது என்று சொல்லிக்கொள்ள எதுவும் இருக்காது. உங்களுடையது அல்ல என்று சொல்லிக்கொள்ளவும் எதுவும் இருக்காது. எதையும் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். ஆனால், மனதின் கட்டாயங்கள் காரணமாக எந்தச் செயலும் நிகழாது.
ஞானோதயம் என்றால் வெறுமை என்று எங்கோ கேள்விப்பட்டதை வைத்து அந்தத் துறவி பெருமை அடித்துக் கொள்கிறார் என்று கண்டுபிடித்துவிட்ட ஜென் குரு அவரை அடித்தார். அதற்கு உடனடி எதிர்ச் செயலாகத் துறவிக்குக் கோபம் வந்துவிட்டது. வெறுமையான நிலையில் இருந்தால், கோபம் கொள்வதும், அமைதியாக இருப்பதும் உங்கள் விருப்பப்படி நடக்கும். வெளியில் இருந்து வேறு யாராலும் அதைத் தூண்டிவிட முடியாது.
ஞானோதயம் அடைந்தவர்கள் அந்த நிலைபற்றி அதிகம் சொல்லாமல் இருப்பதே நல்லது. இல்லாவிட்டால், ஏதோ சில முட்டாள்கள் அந்த வார்த்தைகளை மட்டும் பொறுக்கி எடுத்துக்கொண்டு, மற்றவரை ஏமாற்றப் பார்ப்பார்கள். அதைவிட மோசம், ஞானோதயம் கிடைத்துவிட்டதாக அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்வதுதான்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418