ஈடுபாட்டிற்கும் பிணைப்பிற்கும் என்ன வித்யாசம்?
ஈடுபாட்டுடன் செயல்படுகிறோமா, அல்லது பிணைப்பில் சிக்கி, வழியில்லாமல் செயல்படுகிறோமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு நம் மனநிலை தான் காரணமா?
சத்குரு:
பிணைப்பு என்பது எதைப் பற்றி?
இப்போது வீட்டுக் கடன் பெற்று, அதில் சிக்கிக் கொண்டு தவிக்கிறீர்கள். இதற்கு உங்கள் மனநிலை தான் காரணமா? இல்லையே!
பிணைப்பு என்றால் பலவாறாக முடிச்சுக்கள் விழுந்துவிட்டன. அதற்கு உள்நிலை காரணமோ அல்லது வெளிசூழ்நிலை காரணமோ, காரணம் எதுவாகினும், நீங்கள் நினைத்ததை செய்யமுடியாமற் போகும் நிலை தான் 'பிணைக்கப்பட்ட நிலை'. இப்போது உங்கள் கால்களை கட்டிவிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் பிணைப்பு தான். உங்கள் கால்கள் கட்டப்பட்டிருப்பதை மறந்து நீங்கள் நடக்க முயன்றால், தடுமாறி கீழே விழுந்திடுவீர்கள். இப்படி சிக்கலில் இருக்கும்போது, உங்களுக்கு வேண்டியதைச் செய்ய நீங்கள் எவ்வளவு கடினமாக முயல்கிறீர்களோ, அந்த அளவிற்கு சூழ்நிலையும் மோசமாகும். ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை உங்களை பிணைத்துவிட்டதாக நீங்கள் எண்ணினால், அது நீங்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நேரம். வேகத்தைக் குறைத்து, கவனத்தை அதிகரித்து, சிற்சிறு அடிகளாய் எடுத்து வைக்கவேண்டிய நேரம். அந்நேரத்தில் பெரும் படிகளை எடுக்க முயன்றால், அடிபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிலும் அடி பலமாகப் பட்டுவிட்டால், பின் அதை சரிசெய்வது முடியாத காரியம்.
Subscribe
எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பிணைப்பு மிக அதிகமாக உங்களைக் கட்டுப்படுத்தும் போதுதான் அதை நீங்கள் உணர்கிறீர்கள். இல்லையெனில், அதுவும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதுபோல் தான் நடக்கிறீர்கள். உண்மைதானே? பலரும் தங்கள் பிணைப்புகளை தங்களின் குணாதிசயம் என்றும் தங்கள் இயல்பு என்றுமே எண்ணுகிறார்கள். அதைப் பற்றி பெருமை வேறு பட்டுக் கொள்கிறார்கள்... 'நான் இப்படித்தான் என்று தெரியாதா?'. இவ்வாறு இருந்தால், அந்தப் பிணைப்பில் இருந்து வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை.
வாழ்வை உணர என்ன முக்கியம்?
வாழ்வை உணரவேண்டும் என்றால், அதற்கு ஈடுபாடுதான் ஒரே வழி. உணவை ருசிக்கவும், சமூகத்தில் சந்தோஷமாக வாழவும், இயற்கையை ரசிக்கவும், ஆனந்தமாக வேலை செய்யவும் என் எல்லாவற்றிற்கும் ஈடுபாடு அவசியம். அது இல்லாமல் வாழ்வில் எதையுமே உணர முடியாது. மனதின் பைத்தியக்காரத்தனம் மட்டும் தான் உங்களிடம் இருக்குமே தவிர்த்து, உங்களில் உயிர்ப்பு, உயிரோட்டம் என்பதே இருக்காது.
'பிணைப்பு' என்பது தவறாகிப் போன ஈடுபாடு. இதனோடு ஈடுபாடு கொள்ளலாம், அதனோடு கூடாது என்ற உங்கள் விருப்பு, வெறுப்பு, அதைச் செலுத்துகிறது. 'இது எனக்குப் பிடிக்கும் - அது எனக்குப் பிடிக்காது, இதை நான் நேசிக்கிறேன் - அதை நான் வெறுக்கிறேன். இது என்னை ஒத்தது - அது எனக்கு சேராது'. இப்படி பிரித்துப் பார்த்து ஈடுபடும்போது, ஈடுபாடு பிணைப்பிற்கு வழிவகுத்திடும்.
ஈஷா யோகா வகுப்பின் முதல் நாளில் இருந்தே, உங்கள் ஈடுபாட்டை, பாரபட்சமின்றி செயல்படுத்தவே நாங்கள் முயற்சிக்கிறோம். ஈடுபாடு கொள்வதில் மட்டும் தான் உங்கள் விருப்பத்திற்கு இடமில்லை. செயல் உங்கள் கையில் தான் இருக்கிறது. இப்போது என்னையே எடுத்துக் கொண்டால், நான் எல்லோருடனும் ஈடுபாட்டுடன் தான் இருக்கிறேன். இருப்பினும் வெகு சிலரோடு தான் நான் பேசுகிறேன், பழகுகிறேன். இந்த செயலின் தீர்மானம் என் கையில். என்றாலும், ஈடுபாட்டைப் பொருத்தவரை, என் வாழ்வின் எந்தத் தருணத்திலும் நான் ஒருவரோடு அதிக ஈடுபாட்டுடனும், மற்றவருடன் குறைந்த ஈடுபாட்டுடனும் இருந்ததில்லை... அது யாராக இருந்தாலும் சரி.
மனதில் எவ்விதமான விருப்பு-வெறுப்பும் செயற்படாமல் இருக்கும்போது, மேற்போக்காக இல்லாமல் எல்லாவற்றையும் ஒரேவிதமான ஈடுபாட்டோடு நோக்கும்போது, வாழ்க்கை முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்தில் நிகழ ஆரம்பித்திடும். அங்கு பிணைக்கப்பட வழியில்லை. ஆனால் பிரித்தறியும் ஈடுபாடோ, பாரபட்சம் கொண்டுவிடுகிறது. இந்த பாரபட்சம் தான் நீங்கள் உணரும் 'பிணைப்பின்' ஆரம்பம். ஈடுபாடு என்பது செயல் அல்ல. அது செயல் பற்றியும் அல்ல. செயல் என்பது நாம் தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். ஆனால் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கும் போதும், எல்லாவற்றிலும் ஈடுபாட்டோடு இருக்கமுடியும்.
யோகா என்பது...
"யோகா" என்ற சொல்லிற்கும் கூட இதுதான் அர்த்தம். யோகா என்றால் சங்கமம். சங்கமம் என்றால் 'பிடிக்கும்-பிடிக்காது' என்பதைத் தாண்டிய ஈடுபாட்டோடு, எல்லாவற்றுடனும் ஒன்றாக உணர்தல். அப்படியெனில், கடவுளுக்கும் அரக்கனுக்கும் கூட உங்கள் கண்ணோட்டத்தில் வித்தியாசமில்லை.
பிணைப்பு என்பது தேர்ந்தெடுத்து ஈடுபடுவதால் உண்டாகிறது. எல்லாவற்றிலும் ஒரேவிதமான ஈடுபாடு கொண்டால், அங்கு பிணைப்பிற்கு இடமில்லை. எல்லாவற்றிலும் முழுமையாய் ஈடுபடலாம். அது முடிவுற்றவுடன், அடுத்தநொடியே அதை விட்டு விலகியும் விடலாம். இப்படி இல்லையென்றால், தொட்டதெல்லாம் உங்களோடு ஒட்டிக்கொண்டு விடும். இது மிகத் திறம்வாய்ந்த பசையை உங்கள் மீது பூசிக்கொண்டுவிட்டது போல. கை குழுக்கி 'ஹலோ' சொன்னால் - அய்யோ ஒட்டிவிட்டது. 'இது மிக நன்றாய் இருக்கிறதே' - அய்யோ ஒட்டிவிட்டது. இப்படி பல பிறவிகளாய் நீங்கள் ஒட்டிக்கொண்டு சேர்த்துவிட்ட பெரும் குவியலாய் நீங்கள் இருக்கிறீர்கள். இவற்றை எல்லாம் சுமந்து கொண்டு வாழ்வது மிகமிகக் கடினமான, வேதனையான ஒன்று. ஆனால் இப்படி வாழ்வதற்கு நீங்கள் பழகிக் கொண்டுவிட்டதால், உங்களுக்கு அது தெரிவதில்லை.
பிணைப்புகள் அலங்காரமா?
பலரும் தங்கள் சுமைகளை அலங்காரமாகக் கொண்டு, சந்தோஷமாகவே வலம் வருகின்றனர். தங்கள் பிணைப்புகளை அலங்கரித்துக் கொண்டு, அவற்றை நகைகளாகப் பாவிக்கின்றனர். இன்று பலரும் சங்கிலிகள் அணியத் துவங்கிவிட்டனர். முடிந்தவர்கள் தங்கத்தில் அணிகிறார்கள், முடியாதவர்கள் இரும்போ அல்லது வேறு ஏதெனும் பளபளக்கும் உலோகத்திலோ அணிகிறார்கள். அச்சங்கிலியை அணிந்திருப்பவனுக்கு, அவன் பிணைக்கப் பட்டுள்ளது புரியவில்லை. சங்கிலியைப் பார்ப்பவர்கள் அதன் மதிப்பில் அயர்வதால், இவருக்கும் அது உயர்வானதாகத் தோன்றுகிறது.
சமுதாயத்தின் ஆதரவு மட்டும் இருந்துவிட்டால், மனிதர்கள் எதனோடும் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்வர். அளவுகடந்த சொத்தை தங்கள் முதுகில் சுமந்து கொண்டு பெருமிதம் கொள்வர். அதன் பாரத்தில் குறைவேதுமில்லை... அது அதே அளவு கனமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை கவனிக்காது மறந்திடவும், அது கனமே இல்லை என்று தங்களை ஏமாற்றிக் கொள்ளவும் அவர்கள் தயாராக உள்ளனர். அது பாரம் இல்லை என்று நீங்கள் வேண்டுமானால் உங்களை ஏமாற்றிக் கொள்ளலாம். இவ்வுலகையும் ஏமாற்றலாம்... ஆனால் உயிரை ஏமாற்ற முடியாது.