சைக்கிளில் மைசூரைச் சுற்றி...
மைசூர் நகர வீதிகளில் சைக்கிளில் சுற்றிய அந்த நபருக்கு, வாழ்க்கை அனுபவப் பாடமாய் என்னவெல்லாம் திறந்து காட்டியது என்று இந்தப் பதிவு நமக்கு அழகாய் எடுத்துக் காட்டுகிறது. சிந்தனையில் தேங்கிவிட்ட மனிதர்களுக்கு பயணங்கள் மருந்தாய் இருந்து உயிரூட்டுவதையும் நயமாய் நம்முடன் அவர் இங்கு பகிர்ந்து கொள்கிறார்...
 
 

மைசூர் நகர வீதிகளில் சைக்கிளில் சுற்றிய அந்த நபருக்கு, வாழ்க்கை அனுபவப் பாடமாய் என்னவெல்லாம் திறந்து காட்டியது என்று இந்தப் பதிவு நமக்கு அழகாய் எடுத்துக் காட்டுகிறது. சிந்தனையில் தேங்கிவிட்ட மனிதர்களுக்கு பயணங்கள் மருந்தாய் இருந்து உயிரூட்டுவதையும் நயமாய் நம்முடன் அவர் இங்கு பகிர்ந்து கொள்கிறார்...

சத்குரு:

என் அப்பா ரயில்வே மருத்துவராக இருந்ததால், எங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரயில்வே பாஸ் கிடைத்துவிடும். அதனால் சிறு வயதிலிருந்தே நிறையப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லாப் பயணங்களும் என்னை வெகுவாக வசீகரித்திருக்கின்றன. சண்டை போட்டு ஜன்னலோரம் அமர்வேன். மரங்கள், மலைகள், நீர்நிலைகள், வயல்கள், வனங்கள், மனிதர்கள் என எல்லாவற்றையும் ஆசையுடன் கவனிப்பேன். இரவில் ஜன்னலை மூடமாட்டேன். எல்லோரும் உறங்கிய பிறகும், வெளியே வேடிக்கை பார்த்தபடி விழித்திருப்பேன்.

எங்கோ தூரத்தில் ஒரு நெருப்பு தெரியும். மரங்கள், மேடுகள், மலைச்சரிவுகள் எல்லாம் நிழல் உருவமாகப் புலப்படும். என்னையறியாமல் உறங்கிச் சாயும்வரை இது தொடரும்.

இந்த தேசத்தின் மனிதர்கள் என்ன பேசுவார்கள், எதை உண்பார்கள். எப்படிச் சிந்திப்பார்கள் என்றெல்லாம் பயணங்கள் மூலமே உணர்ந்தேன்.

சற்று வயது கூடியதும், ரயில் கதவைத் திறந்து வைத்து கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்து பயணம் செய்வது எனக்குப் பெருமகிழ்ச்சி தந்தது. பெரியவர்கள் வேறு வழியில்லாமல், என் பத்திரத்துக்காக, கதவின் இருபுறமும் உள்ள கம்பிக் கைப்பிடிகளில் ஒரு பெல்ட்டையோ, துணியையோ கட்டி தடுப்பு ஏற்படுத்துவார்கள்.

பொதுவாகவே, எந்தக் குறிப்பிட்ட இலக்கும் இல்லாமல் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணம் செய்வதே எனக்குப் பிடித்தமானது. சைக்கிள் கிடைத்த பிறகு, அது அடிக்கடி சாத்தியமாயிற்று. கிராமத்து மண் பாதைகளில், மலைச்சரிவுகளில், நதிக்கரைகளில் என மைசூரின் சகல பகுதிகளிலும் சைக்கிளில் பவனி வந்திருக்கிறேன்.

இந்தப் பூமியின் அமைப்பு எப்போதும் என்னை வசீகரித்திருக்கிறது. அதன் மேடு பள்ளங்கள் உயர ஆழங்கள் இவற்றை அறிய முனைந்தே பலமுறை சைக்கிளில் பயணங்கள் மேற்கொள்வேன்.

பயணப் பாதையில் கவனிப்பதை எல்லாம் என் மூளை கிடுகிடுவெனப் படம் எடுத்துப் பதிவு செய்து கொண்டே இருக்கும். பயணம் முடிந்த பின், கண்களை மூடி அமர்வேன். எங்கே புல் இருந்தது. எங்கே பூ இருந்தது. பாதை எங்கே விம்மியிருந்தது. எங்கே தாழ்ந்து திரும்பியது என்று ஒன்று விடாமல், என் மனத்திரையில் பயணம் மறுபடி நிகழும்.

14 வயதில், என் நண்பர்களுடன் மாஸ்கோ வரை சைக்கிளில் பயணம் செய்ய வாய்ப்பு வந்தது. என் அப்பா அனுமதி தர மறுத்துவிட்டார். மோட்டார் சைக்கிள் சொந்தமானதும், நம் தேசத்தின் எல்லைக் கோடுகள்தான் என்னைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றன.

பயணம் செல்கையில், எப்போதும் வசதிகளை எதிர்பார்க்கக்கூடாது. வனங்களில், அறியாதவர் வீட்டுத் திண்ணைகளில், பேருந்து நிலையங்களில், ரயில்வே பிளாட்ஃபாரங்களில், சில சமயம் தெருவோரங்களில்கூடப் படுத்து உறங்கியிருக்கிறேன். பல இரவுகளில் என் மோட்டார் சைக்கிளின் மீது படுத்து உறங்கியதும் உண்டு. சில சமயம் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி, பசியோடு அலைய நேர்ந்திருக்கிறது.

அயர்லாந்துக்கு ஒருவர் சுற்றுலா சென்றிருந்தார். மிகவும் தாகமெடுத்தது. ஒரு வீட்டில் அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டார் அந்த நபர். அந்த வீட்டுப் பெண்மணி அவருடைய நிலை பார்த்து ஒரு கோப்பையில் சூடான சூப் கொடுத்தார்.

வீட்டு நாய்க்குட்டி விருந்தாளியிடம் ஒடி வருவதும், அவருடைய கால்களுக்கு இடையில் புகுந்து செல்வதும், செல்லமாகக் குரைத்து அவர் கவனத்தைக் கவர்வதுமாக இருந்தது.

"நாயைக்கூட நட்புடன் இருக்கப் பழக்கி இருக்கிறீர்கள்" என்றார், வந்தவர் பாராட்டும்விதமாக.

"அப்படியில்லை. நீங்கள் பயன்படுத்திக் கொண்டு இருப்பது அவனுடைய உணவுக் கோப்பை. அதனால் உங்களைவிட்டு நகரமாட்டேன் என்கிறது" என்றாள் அந்தப் பெண்மணி.

நானும் பயண நேரங்களில் மிக மோசமான இடங்களில் தங்கியிருக்கிறேன். மோசமான உணவை உட்கொண்டு இருக்கிறேன். பூமியில் இதைவிட மோசமான இடம் இருக்க முடியாது என்ற நிலையில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். எதையும் பொருட்படுத்தியதில்லை. காரணம், நான் உட்கொள்ள நினைத்ததெல்லாம் பூமியின் விஸ்தீரணத்தில் இன்னும் ஒரு பகுதியைத்தான்.

இமயத்துக்குச் சென்றபோது, பேருந்தின் தலைக்கு மேலே ஏறி அமர்ந்து பயணம் செய்தேன். காலை நான்கரை மணிக்கு குளிர் எலும்பைத் துளைக்கும். ஒரு சமயம் மழை வேறு. டிரைவர் என்னிடம் உள்ளே வந்துவிடு என்றார். நான் அடுத்த சாலை வளைவைத் தவறவிடத் தயாராக இல்லை. அங்கேயே இருப்பதாகச் சொல்லிவிட்டேன்.

தலைக்கு மிக அருகே கடந்து செல்லும் மின் வயர்கள். சடாரென்று வளைந்து குறுக்கிடும் பாறைத் துருத்தல்கள். இவற்றைத் தவிர்க்க அதீத கவனம் தேவை. அந்த வகையில் பயணங்கள் என்னை ஆபத்துக்கு வெகு அருகே பலமுறை அழைத்துப் போயிருக்கின்றன. ஆனாலும், பயணங்கள் எப்போதுமே என்னை வசீகரித்திருக்கின்றன.

இந்த தேசத்தின் மனிதர்கள் என்ன பேசுவார்கள், எதை உண்பார்கள். எப்படிச் சிந்திப்பார்கள் என்றெல்லாம் பயணங்கள் மூலமே உணர்ந்தேன்.

பயணங்கள் எனக்குப் போதை மட்டும் தரவில்லை, புத்துணர்ச்சியும் ஊட்டின. என் வாழ்க்கை, பாதிக்கு மேல் பயணங்களில்தான் கழிந்திருக்கிறது. பயணத்தில் ஏதாவது வித்தியாசமாக நடந்தால்தான் அதை நினைவில் கொள்ள முடியும் என்று நினைத்ததில்லை. எதையும் எதிர்பார்த்தும் பயணம் செய்ததில்லை.

இன்றைக்கு காட்டுக்குப் போகாமலேயே தனியார் தொலைக்காட்சியின் மூலம் புலியின் வாய்க்குள் கூட எட்டிப் பார்க்கும் வசதி வந்துவிட்டது. நிஜமாகவே புலியின் திறந்த வாயைப் பார்ப்பதற்கும், தொலைக்காட்சியில் அதைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

பல்வேறு கலாச்சாரங்களை அறியவும், பலவித மனிதர்களைச் சந்திக்கவும், பயணங்களில்தான் வாய்ப்பு கிடைக்கிறது. சிந்தனை தேங்கிவிட்டவர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டால், அது புத்தம் புதுப் பரிமாணங்களைத் திறந்துவிடும்.

 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

intha migavum payanulathaga