ஜென்னல் பகுதி 44

ஜப்பானில் படித்தவன் ஒருவன் இருந்தான். புத்தம் என்பது என்ன..? என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு வந்தது. ஓர் ஆசானைத் தேடிப் போனான்.

வார்த்தைகள் தர்க்கரீதியாக உங்கள் புத்திக்கு உணர்த்துபவை. அன்றாட இருப்புக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் அவை தேவைப்படலாம். ஆனால், உண்மையை உணர்ந்துகொள்ள ஒருபோதும் வார்த்தைகள் உதவாது.

"மதிப்பிற்குரிய குருவே, புத்தம் என்றால் என்ன..?" என்று கேட்டான்.

அந்த ஆசான், அங்கிருந்த சணல் கயிறை எடுத்து அவனிடம் போட்டார். "சணல் கயிறுதான் புத்தம்.." என்றார்.

அவன் குழப்பத்துடன் வேறொரு ஆசானைத் தேடிப் போனான். அவரிடம் கேட்டால், அரளி விதைதான் புத்தம் என்றார்.

என்ன அர்த்தம் என்று புரியாமல் அவன் மூன்றாவதாக ஒரு ஆசானைத் தேடிப் போனான்.

"ஒ, புத்தத்தைப் பற்றி அறிய வந்திருக்கிறாயா..? இதோ, நான் அணிந்திருக்கிறேனே அங்கி, இதில், பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பார்த்தாயா..? இந்தப் பட்டு நூலில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுதான் புத்தம்.." என்றார்.

தேடி வந்தவனுக்குக் குழப்பம் அதிகரித்தது. 'யாராலும் இதற்குச் சரியான விடை சொல்ல முடியவில்லையே..!' என்ற மனத்தாங்கலுடன் பலரிடம் விசாரித்தான். தகுதி வாய்ந்த ஜென் குரு என்று ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை நாடிச் சென்றான்.

"ஐயா, புத்தம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.."

ஜென் குரு அவனைப் பார்த்தார்.

"இந்தக் கேள்விக்கான விடை உனக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டதே..!" என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவன் ஆச்சரியமானான்.

"இல்லை ஐயா.. நான் பல ஆசான்களிடம் சென்று, இது பற்றிக் கேட்டதுண்டு. ஒருவர் சணல் கயிறுதான் புத்தம் என்கிறார். இன்னொருவர் அரளி விதைகள்தான் புத்தம் என்கிறார்.

இன்னொருவரோ தன்னுடைய அங்கியில் இருக்கும் பூ வேலைப்பாடுதான் புத்தம் என்கிறார். மேலும் கேட்க கேட்க, என்னுடைய புரிந்துகொள்ளும் தன்மை குறைந்துகொண்டே வருகிறது.."

ஜென் குரு சிரித்தார்.

"வார்த்தைகளில் ஏது புத்தம்?" என்றார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

மனித மனம் வார்த்தைகளால் ததும்பி வழிகிறது. எண்ணம் என்பது என்ன..? அது சொற்களை அடுக்கிப் பார்க்கும் ஓர் அமைப்புதானே..? சொற்கள் எங்கேயிருந்து வந்தன..? எல்லாமே இறந்த காலத்தில் உங்களுக்கு அறிமுகமான சொற்கள். அவைதான் உங்கள் மனதை முழுமையாக ஆள்கின்றன.

நீங்கள் என்ன நினைத்தாலும், என்ன பேச முற்பட்டாலும், எதை செவிமடுத்தாலும் எல்லாமே இறந்துபோன ஒரு காலத்தின் எதிரொலியாகத்தான் இருக்க முடியும்.

பேச்சும் அப்படித்தான். இந்தத் தருணத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி யாராலும் பேச முடியாது. ஏற்கெனவே நிகழ்ந்ததைப் பற்றித்தான் சொல்ல முடியும். இறந்துபோனது என்பது என்றைக்கும் உண்மையான ஒன்று அல்ல. அது ஒரு நிழல் போல்தான். நிழலைத் துரத்தினால் என்றைக்கு அந்த ஓட்டம் முடிவுக்கு வரும்..?

எனவே, வார்த்தைகளை அர்த்தம் பண்ணிக்கொண்டு அதன் மூலம் புத்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அது ஒருபோதும் நடக்காது. வார்த்தைகளை வைத்து புத்திபூர்வமாக ஒன்றைப் புரிந்துகொள்ள முனைந்தால் என்ன நடக்கும்..? புத்தி எப்போதுமே எதையும் அறுத்துப் பார்த்து அதன் உள் அர்த்தத்தைத் தேடும்.

'அம்மா என்றால் என்ன..?’ என்று புத்தியிடம் கேட்டால், அது அம்மாவையே அறுத்துப் பார்க்கும். ஆனால், அதன் மூலம் ஒரு தாய்மையை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா..? முடியாது. எப்போது அதை ஏற்றுத் தழுவுகிறீர்களோ, அப்போதுதான் உங்களுக்குப் புரியும்.

வாழ்க்கையை இயைந்து, வரவேற்று ஏற்றுக்கொண்டால்தான் அதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.

வார்த்தைகள் தர்க்கரீதியாக உங்கள் புத்திக்கு உணர்த்துபவை. அன்றாட இருப்புக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் அவை தேவைப்படலாம். ஆனால், உண்மையை உணர்ந்துகொள்ள ஒருபோதும் வார்த்தைகள் உதவாது.

உண்மை என்பது ஏற்று, இயைந்து, தழுவிக்கொள்ள வேண்டியது. இறுக்கமாக இல்லாமல் நீங்கள் வளைந்து கொடுக்கத் தயாராக இருந்தால் மட்டுமே உண்மையை உங்களால் தழுவ முடியும். ஒருபோதும் உண்மையைத் தேடிப்பிடித்து வெற்றிகொள்வது என்பது நடக்காது.

உண்மையைச் சென்று அடைவதும் இயலாத ஒன்று. உங்களுடைய இறுக்கத்தையும், விறைப்புத்தன்மையையும் விட்டுவிட்டு நீங்கள் வாழ்க்கையுடன் இயைந்து இயங்கினால், நீங்களே உண்மையாக மாறிப்போவீர்கள். அதுவரை உண்மை உங்களைவிட்டுத் தனியாகத்தான் தள்ளி நிற்கும். அது உங்களுடைய புத்திபூர்வமான எட்டுதல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

எனவே, புத்தம் என்பதை வார்த்தைகளில் தேடினால், இப்படித்தான் சுழலில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதையே குரு அவனுக்கு உணர்த்தினார்.


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418