அதிகமாக உழைப்பதால், ஒரு கலையை சீக்கிரம் கற்கமுடியுமா?
வாழ்க்கைக்கு மட்டுமல்ல, கலையின் எந்த வடிவத்துக்கும் இது பொருந்தும். உங்களை வருத்திக்கொள்ள வருத்திக்கொள்ள, நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலம் ஆகும்.
ஜென்னல் பகுதி 32
ஒரு ஜென் குரு மிகச் சிறந்த வாள் வீரராக விளங்கினார்.
அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். “இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக வேண்டும் என்று விரும்பி உங்களிடம் வந்திருக்கிறேன்” என்றான்.
“அதற்கென்ன, 10 வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து விடுகிறேன்!” என்றார் குரு.
“என்னது, 10 வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும். மற்றவர்களைவிட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்!”
“அப்படியானால் 20 வருடங்கள் ஆகும்!”
Subscribe
சீடன் திகைத்தான்: “போதாது என்றால், நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்!” என்றான்.
“அப்படிச் செய்தால் 60 வருடங்கள் ஆகுமே!” என்றார் ஜென்குரு.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
வாழ்க்கை என்பது குறிப்பிட்ட நேரம் கிடைத்தால், கடுமையாகப் போராடிப் புரிந்துகொள்ள முடியும் என்பதல்ல. எந்த அளவு சுலபமாக வாழ்க்கையில் நீங்கள் நழுவி உங்களைப் பொருத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
வாழ்க்கைக்கு மட்டுமல்ல, கலையின் எந்த வடிவத்துக்கும் இது பொருந்தும். உங்களை வருத்திக்கொள்ள வருத்திக்கொள்ள, நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலம் ஆகும். கடுமையாக உழைப்பவர்கள் அதற்கான ஊதியம் பெறக்கூடும். ஆனால், சந்தோஷத்தை அனுபவித்திருக்க முடியாது. முழுமையாக உணர்ந்திருக்க இயலாது.
போராடுவதால் சிறந்த பாடகராகவோ, ஓவியராகவோ, நாட்டிய நிபுணராகவோ மாறிவிட முடியாது. உழைப்பு அவசியம்தான். ஆனால், கடுமையாக உழைப்பதால் மட்டும் எதிலும் சிறந்து விளங்கிவிட முடியாது. அது சாத்தியம் என்றால், இந்நேரம் உழைப்புக்கு அஞ்சாத கழுதைகள் மிகச் சிறந்த கலைஞர்களாக்கி இருந்திருக்குமே!
திறன் என்பது கலையை நீங்கள் எப்படிப் பற்றிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அதைவிட அந்தக் கலை உங்களைப் பற்றிக்கொண்டு, நீங்கள் அதில் கரைந்து போக முடிந்தால்... நீங்கள் மிக மிகச் சிறந்த கலைஞராக விளங்குவீர்கள்.
வாழ்க்கையும் அப்படித்தான். அதைப் பற்றிக் கொள்ள விழைவதைவிட, வாழ்க்கை உங்களைப் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள். அற்புதங்கள் நிகழும்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418