ஜென்னல் பகுதி 48

நகரச் சந்தடிகளில் சிக்கிப்போயிருந்த ஓர் அரசு அலுவலர், அமைதியை விரும்பினார். குறிப்பிட்ட ஜென் குருவிடம் சென்றால் அவர் வழிகாட்டுவார் என்று நண்பர்கள் சொன்னார்கள். அந்த அதிகாரி, ஜென் மடத்தைத் தேடிச் சென்றார்.

ஜென் குரு அப்போது தோட்டத்தில் சில விதைகளைத் தூவிக்கொண்டிருந்தார். அரசு அதிகாரி அவரிடம் சென்று, "அமைதி அடைய நான் என்ன செய்ய வேண்டும்..?" என்று கேட்டார்.

"இந்தா, இதைச் சாப்பிடு.." என்று குரு தன்னிடம் கையிலிருந்த விதைகளை அதிகாரியிடம் கொடுத்தார். அதிகாரி அவற்றை வாயில் போட்டுக்கொண்டு, "வாழ்வின் அர்த்தத்தையும், அமைதியையும் நாடி வந்தேன். இதைத் தின்னச் சொல்கிறீர்களே..!" என்றார்.

ஜென் குருவோ, "அதுதான் இது..!" என்றார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மிகச் சாதனை என்பது, இந்த வாழ்வைப் பற்றியது. இந்த உயிரைப் பற்றியது. உங்களது சமூகச் சாதனைகளை, ஆன்மிகச் சாதனைகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்த உயிர், இந்த வாழ்வு என்று குறிப்பிடும்போது, இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையோ, அல்லது பேசிக்கொண்டிருக்கும் பேச்சோ, அல்லது உங்கள் குடும்பமோ என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது.

மனதின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து பெரும்பாலான நேரங்களில் நீங்கள் மனரீதியாகவே வாழ்கிறீர்கள். உயிர்ரீதியாக வாழ்வதில்லை. உங்களை உயிர்ரீதியாக வாழ வைப்பதே ஆன்மிகச் சாதனை.

உங்களுடைய இருப்பு என்பதே இங்கு நேர்ந்திருக்கும் ஓர் அபூர்வ நிகழ்வு. அதைப் பயன்படுத்தி, சில நேரங்களில் கேள்விகளைக் கேட்கிறீர்கள். சில நேரங்களில் பாடுகிறீர்கள். சில நேரங்களில் பதில் சொல்கிறீர்கள். உட்கார்ந்தாலோ, நின்றாலோ, நடந்தாலோ, சாப்பிட்டாலோ, ஏன், படுத்துக்கொண்டால்கூட இந்த உயிர், உயிராகவே தொடர்கிறது. ஆனால், அதைக் கவனிக்கத் தவறுகிறீர்கள்.

மூளையின் ஆதிக்கத்தால் உங்கள் மனம் என்னென்னவோ சிந்தனைகளில் உங்களைக் கொண்டு சென்று தள்ளுகிறது. மனதின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து பெரும்பாலான நேரங்களில் நீங்கள் மனரீதியாகவே வாழ்கிறீர்கள். உயிர்ரீதியாக வாழ்வதில்லை. உங்களை உயிர்ரீதியாக வாழ வைப்பதே ஆன்மிகச் சாதனை.

'இந்தப் பாதை எங்கே போகிறது..?' என்று கேட்டால், 'அது எங்கேயும் போகவில்லை. இங்கேயேதான் விழுந்து கிடக்கிறது..' என்று கிராமத்தில் சிலர் சொல்வார்கள்.

ஆமாம். பாதை அங்கேயேதான் இருக்கிறது. பயணம் செல்பவர்கள் நீங்கள்தான். நீங்கள்தான் எங்கெங்கேயோ போகிறீர்கள். அதேபோல, ஆன்மிகப் பாதை இதோ இந்தத் தருணத்தில் இங்கேயே இருக்கிறது. ஆனால், அதில் பயணம் செய்யாமல் உங்கள் மனம்தான் எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கிறது. இதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சங்கரன் பிள்ளை ஒருமுறை குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அவரிடம் விசாரித்தபோது, இந்தக் குற்றத்தை நான் செய்யவேயில்லை..! என்று சங்கரன் பிள்ளை பிடிவாதமாகச் சொன்னார். விசாரணை சில நாட்களுக்குத் தொடர்ந்தது. ஒரு வாரம் கழித்து, திடீரென்று சங்கரன் பிள்ளை நீதிபதியிடம், "ஐயா, என் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்..!" என்றார்.

நீதிபதி திகைத்தார். "என்ன ஆயிற்று..? சில நாட்களுக்கு முன்பு குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தீர்களே, திடீரென்று குற்றத்தை ஏற்கிறீர்களே, ஏன்..?" என்று கேட்டார்.

சங்கரன் பிள்ளை அமைதியாகச் சொன்னார்: "எனக்கு எதிரான ஆதாரங்களை அப்போது நான் கேட்டிருக்கவில்லை..!"

இதைப்போலத்தான் இருப்பதைக் கவனிக்காமல் விடுவதால் பல நேரம் வாழ்க்கையைத் தவறவிடுகிறீர்கள். இதைப் புரியவைப்பதற்காகத்தான் கைகளில் இருந்த விதையை ஜென் குரு அதிகாரியிடம் நீட்டினார். வாழ்க்கை ஒவ்வொரு தருணத்திலும் அங்கேயே, அப்படியேதான் நடந்துகொண்டிருக்கிறது. அதைத் தேடி எங்கேயும் செல்ல வேண்டாம் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418