சிறு வயது முதலே நாம் ஒருவர் மீது அன்பாக இருந்தால், அவரும் நம்மீது அன்பாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அதோடு, அவர் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும், நாம் கேட்பதை செய்ய வேண்டும். நமக்கு ஒருவரை பிடிக்கவில்லையா, இவரும் அவரோடு சேரக் கூடாது. இப்படி பல கண்டிஷன்கள். இதில் எது நடக்காவிட்டாலும், மனதின் நிம்மதி அதோகதி. இப்படி நம்மை வாட்டும் அன்பு நமக்குத் தேவைதானா? சத்குருவின் பதில் இதோ...

Question: பிறரிடம் அன்பாய் இருப்பதால் காலப்போக்கில் ஏமாற்றமும், விரக்தியும் தான் வருகிறது. எனவே அன்பு அனாவசியம்தானே?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

அன்பு என்பது மற்றொருவர் சார்ந்த விஷயமல்ல. மற்றவர் மீது நாம் வைக்கும் உணர்வல்ல. நம் உணர்வுகளை இனிமையான நிலையில் நாம் வைத்திருந்தால், அது தான் அன்பு. இதை உணர்வதற்கு அடுத்தவரின் உதவி நமக்குத் தேவையில்லை. ஆனால் இன்று, அன்பென்ற ஒன்றை நாம் உணரவேண்டுமெனில், நமக்குப் பிடித்தமான ஒருவர் நமக்குத் தேவைப்படுகிறார். அவர் இருந்தால் மட்டுமே அன்பை உணர முடியும் என்ற தவறான கருத்து நம் மனதில் வந்துவிட்டது.

நீங்கள் ஒருவர் மீது அன்பாக இருந்தால், அவர் நீங்கள் விரும்பும் விதமாக மட்டுமே இருக்க வேண்டும், நீங்கள் விரும்பும் வகையில் மட்டுமே நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிட்டது.

தற்போது உங்களருகே நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மீதான அன்பை நீங்கள் உங்களுக்குள் உணர்கிறீர்கள். சற்று நேரத்தில் அவர் எழுந்து சிறிது தூரம் சென்றுவிட்டால், இப்போதும் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே அவர் மீது அன்பாயிருக்க முடியும். அவர் 10 மைல் தூரம் சென்றிருந்தாலும் உங்களுக்குள் அன்பை உணர முடியும். அவர் இல்லாமல் போய் விட்டாலும் கூட அவரை நினைத்து உங்களுக்குள் நீங்கள் அன்பாய் இருக்க முடியும்.

ஆக, அவரின் பங்கு இல்லாமலே, நீங்கள் சுயமாக அன்பாக இருக்க முடியும். அன்பு என்பது உங்களுடைய தன்மை. ஆனால் அந்தத் தன்மை உங்களுக்குள் திறந்து கொள்ள, நீங்கள் மற்றொருவரை சாவியாக உபயோகிக்கிறீர்கள். உங்கள் அன்பு உங்களுக்குள் ஊற்றெடுக்க வேண்டுமென்றால், அதை வேறொருவர் இயக்கி ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

முன்காலத்தில் ஒரு கார் வாங்கினால் அதோடு சேர்த்து, இரண்டு வேலையாட்களையும் நியமிக்க வேண்டும். காரை சிறிது தூரம் வேகமாகத் தள்ளினால் தான் அது ஓடத்துவங்கும். ஆனால் இன்று, கார்கள் எல்லாம் 'தானியங்கி' ஆகிவிட்டன.

அதேபோல் உங்கள் அன்பு, ஆனந்தம் எல்லாம் 'தானியங்கி'யாக இருக்க வேண்டும். அதாவது, யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் நம்முள் அன்பாய் இருக்க முடியும். இன்னொரு மனிதன் இருந்தால் அவரோடு அந்த அன்பை பகிர்ந்து கொள்ளலாம். யாரும் இல்லையா, நமக்குள் நாமே அன்பாயிருக்கலாமே!

இன்றிருக்கும் பிரச்சினை, 'அன்பு' என்றால், அது அடுத்தவரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று நாம் போடும் கணக்காகி விட்டது. நீங்கள் ஒருவர் மீது அன்பாக இருந்தால், அவர் நீங்கள் விரும்பும் விதமாக மட்டுமே இருக்க வேண்டும், நீங்கள் விரும்பும் வகையில் மட்டுமே நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிட்டது. இது அன்பல்ல வியாபாரம்.

அடுத்தவரிடம் இருந்து தனக்குத் தேவையானதை பெற்றுக் கொள்ள, அன்பு, காதல் போன்றவற்றை சலுகைச் சீட்டாக மக்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். அலிபாபா கதையை கேட்டிருப்பீர்கள். அதில் "திறந்திடு சீசேம்" என்றால் ஒரு கதவு திறக்கும். அதுபோல, "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்பதும் ஆகிவிட்டது. உங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள இது ஒரு திறவுகோலாகி விட்டது. உங்கள் தேவை உடலளவில் இருக்கலாம். மனதளவில் இருக்கலாம். உணர்வளவில் இருக்கலாம். அது எந்நிலையில் இருந்தாலும், அத்தேவையை நிறைவேற்றிக் கொள்ளவே அன்பை உபயோகிக்கிறீர்கள்.

யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அருகில் மனிதன் இருந்தாலும், மரம் இருந்தாலும், விலங்கு இருந்தாலும், உங்கள் கண்கள் திறந்து இருந்தாலும், நீங்கள் கண்மூடி அமர்ந்திருந்தாலும், உங்கள் உணர்வுகள் இனிமையாய் இருக்குமானால், அதுதான் 'அன்பு'.