சுவாசம் - சூட்சுமங்கள் மற்றும் சொல்லப்படாத சில தகவல்கள்!
ஆழமாக சுவாசியுங்கள் என்ற குறிப்பை பலவிதமான முகாம்களில் கேட்டிருப்பீர்கள். எனினும் அதிக ஆழமாக்க முயன்றால் இருமத்துவங்கும் அளவு நம் ஆழமான சுவாசம் கூட ஆழமில்லாமல் இருப்பதே நிதர்சன உண்மை. அப்படியிருக்க ஈஷாவில் கற்றுத்தரப்படும் ஆசனப்பயிற்சிகளைச் செய்வதுமூலம் சுவாசம் தானாக ஆழமாகும் அழகை இக்கட்டுரை விளக்குகிறது.
ஆழமாக சுவாசியுங்கள் என்ற குறிப்பை பலவிதமான முகாம்களில் கேட்டிருப்பீர்கள். எனினும் அதிக ஆழமாக்க முயன்றால் இருமத்துவங்கும் அளவு நம் ஆழமான சுவாசம் கூட ஆழமில்லாமல் இருப்பதே நிதர்சன உண்மை. அப்படியிருக்க ஈஷாவில் கற்றுத்தரப்படும் ஆசனப்பயிற்சிகளைச் செய்வதுமூலம் சுவாசம் தானாக ஆழமாகும் அழகை இக்கட்டுரை விளக்குகிறது.
Subscribe
சத்குரு:
பொதுவாக, மனிதர்கள் ஒரு நிமிடத்திற்கு, 12லிருந்து 15 முறை சுவாசம் செய்கிறார்கள். 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே தனது நுரையீரலின் திறனை மக்கள் பயன்படுத்துகின்றனர். உங்கள் நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கும்போது, இயல்பாக சுவாசம் செய்யும்போதே, நீங்கள் விடும் சுவாசத்தின் எண்ணிக்கையும் குறையும். மூச்சை அடக்கிப் பிடிக்காமல் இது நிகழும்.
பாரம்பரிய ஹட யோகப் பயிற்சிகளைப் பின்பற்றினால், காலப்போக்கில் உங்கள் சுவாசத்தின் வேகம் குறைவதைப் பார்க்க முடியும். இதனை வெளிப்படுத்த, கவித்துவமான சில சொல்லாக்கங்கள் உள்ளன. ஒரு நிமிடத்திற்கு 11 என உங்கள் சுவாசம் குறைந்தால், விலங்குகள், பட்சிகளின் மொழி உங்களுக்கு புரியும் என்பார்கள். ஒரு நிமிடத்திற்கு 9 என உங்கள் சுவாசம் குறைந்தால், இந்தப் பூமியின் மொழி உங்களுக்கு புரியும். ஒரு நிமிடத்திற்கு 7 என உங்கள் சுவாசம் குறைந்தால், இந்தப் பிரபஞ்சத்தில் அறிய வேண்டிய அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். அதாவது, உங்கள் உடல் திடமாக, மந்தமில்லாமல் அனைத்தையும் பரிபூரணமாய் கிரகித்துக்கொள்ளும் திறனுடன் இருக்கிறது என்று அர்த்தம்.
நாம் தற்சமயம் இருக்கும் நிலையிலும் உடலால் அத்தனை விஷயங்களையும் கிரகித்துக்கொள்ள முடியும். அப்படி இல்லாவிட்டால், அதனால் உயிர் வாழ முடியாது. உங்களது புரிதலில் இல்லாவிட்டாலும், இந்தப் பூமி எப்படி சுழல்கிறது என்பது உங்கள் உடலிற்குத் தெரியும். சூரியனில் நிகழ்வது தெரியும், இங்கு நிகழ்வது அத்தனையும் தெரியும். நீங்கள் வாழும் காலம் வரை, உங்கள் உடல் அத்தனை விஷயங்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது.
உங்கள் உடலமைப்பு மேன்மை அடைய அடைய, ஒரு நிமிடத்திற்கு நீங்கள் செய்யும் சுவாசத்தின் எண்ணிக்கை இயல்பாகவே குறைந்து விடுகிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் கூறுவதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
உங்கள் சுவாசம் மென்மேலும் திடமாகிக் கொண்டே செல்லும்போது, வாழ்வில் ஏற்படும் இடர்கள் மறைந்துவிடுகின்றன. என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். இதனை யோகாசனங்களின் மூலம் சாதித்துக் கொள்ளலாம், அல்லது பரிபூரண தியான நிலையை எட்டுவதன் மூலம் அடையலாம். உதாரணத்திற்கு, நீங்கள் சூன்ய தியானம் செய்தால், உங்கள் சுவாசத்தின் வேகம் குறைகிறது. சுவாசமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது. சூன்ய தியானம் செய்யும்போது, உங்களில் பலபேரது சுவாசம் ஒரு நிமிடத்திற்கு ஒன்பதிலிருந்து பத்து முறை மட்டுமே நிகழ்கிறது. மீண்டும், சில கணங்களில் வேகமான சுவாசம் நடைபெற துவங்குகிறது.
இந்நிலையினை தியானம் மூலமும் அடையலாம். ஆனால், உடலையும் இதுபோன்ற தீவிர நிலைக்கு உயர்த்தி, அதில் நீடிக்கக்கூடிய நம்பகமான கருவியாய் ஆக்க, போதிய ஆயத்தப் பயிற்சிகள் அவசியம். தியானம் செய்வதனால், இன்று நமது சுவாசத்தின் வேகம் குறையலாம், நாளை அப்படி இல்லாமல் போகலாம். ஆனால், உடலைத் தயார் செய்தால் முன்னேற்றம் தடையறாது, நிலையாய் இருக்கும். தினசரி பயிற்சி செய்வதற்கான முக்கிய காரணம் இதுதான். தினசரி பயிற்சிகள் செய்யும்போது, அது படிப்படியாய் உங்களை மேலேற்றும். வெறும் தியானத்தினால், ஒரு நாள் நீங்கள் உயர்ந்த நிலையிலும், மற்றொரு நாள் அப்படி இல்லாமலும் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உங்களது இயல்பான சுவாசத்தை நீங்கள் நீட்டித்தால், சற்று நேரம் கழித்து மூச்சுவாங்கும் சூழ்நிலை ஏற்படும். அது, இந்த உடலமைப்பு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான வழியல்ல. கஷ்டப்பட்டு, பலவந்தமாக எதையோ திணிப்பதற்கு அது ஒப்பாகும். அதேசமயம், நீங்கள் ஆசனங்களைப் பயிற்சி செய்தால், இயல்பாய் செய்வதைவிட சற்றே ஆழமாய் சுவாசம் செய்தால், காலப்போக்கில் சுவாசத்தின் எண்ணிக்கை குறையும். உங்கள் இயல்பான சுவாசம் மென்மையாகவும், இயல்பை விட சற்றே ஆழமாகவும் இருக்கும்.
உடல், படைப்பின் ஒரு துளி என்பதால் அதற்கு இந்தப் படைப்பில் உள்ள அத்தனை விஷயங்களும் புரியும். அதற்கு படைப்பை பற்றிய அத்தனை விஷயங்களும் தெரியும். ஏகப்பட்ட தொந்தரவுகள் நம்மைச் சூழ்வதால் நம்மால் அதனை உணர முடிவதில்லை. உதாரணத்திற்கு சொன்னால், இடி இடித்துக் கொண்டிருக்கிறது, மின்னலும் மழையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ரேடியோ கேட்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் எப்படி இருக்கும்? மழை திடீரென நின்றால், ரேடியோ தெள்ளத் தெளிவாக கேட்கும், அல்லவா? அதனால், நமக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தை நிறுத்தினால், அத்தனையும் புரியும்.