குழந்தைகள் (Kulanthaigal) நன்றாக வளர...
"குழந்தைகள் வளரும்போது அவர்களின் கவனத்தை எதில் திருப்புவது? அவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எந்த அளவிற்கு முடிவெடுக்கலாம்?" இந்தக் கேள்விகளுக்கு இங்கே சத்குரு அளிக்கும் பதில், ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டியது...
கேள்வி: வளரும் வயதில் குழந்தைகள் கவனத்தை எதில் திருப்புவது நல்லது?
சத்குரு:
வளரும் வயதில் குழந்தைக்கு எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் தேவையில்லை. அதிலும் குறிப்பாக, அவர்களுக்கு பெற்றோரின் மீது கவனம் இருக்கத் தேவையில்லை. அவர்கள் இயல்பாக வளர வேண்டும். வளர்ச்சி என்பது உடலைப் பொறுத்தது மட்டுமல்ல. கட்டாயம் இன்றி, ஏதொன்றும் வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிக்கப் படாமல் அவர்கள் வளர வேண்டும். நீ நல்லவனாக வளர வேண்டும். தப்பான வழிகளில் போகாதே, போகாதே என்று சொல்லத் தேவையில்லை. நல்லவனாக வளர வேண்டும் என்று அறிவுறுத்துவதால் மட்டுமே அவர்கள் அப்படி வளர்ந்து விட முடியாது.
வளரும் குழந்தைகளுக்கு டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்றெல்லாம் ஐந்து வயதிலிருந்தே கனவு இருக்கத் தேவையில்லை. அவர்களுக்குத் தங்கள் வளர்ச்சி பற்றி கவனம் இருந்தால் போதும்.
சமூகம் மிகப் பெரியதாகக் கொண்டாடுவதைத்தான் நாமும் செய்ய வேண்டும் என்ற அவசியமேயில்லை. ஒரு குழந்தை இசையில் ஆர்வம் கொள்கையில், நீ அரசனாக வர வேண்டும் என்று பெற்றோர் தங்கள் விருப்பத்தை அதன் மீது திணிப்பது புத்திசாலித்தனமல்ல. எத்தனையோ அரசர்களை நாம் மறந்து விட்டாலும், தான்சேன் என்ற இசைக்கலைஞனை நாம் மறக்கிறோமா?
உடல், மனம், உயிர்சக்தி இவை முழுமையாக வளர்ந்தால் போதும். மற்றவற்றை இயற்கை கவனித்துக் கொள்ளும். உயிர் அதன் உச்சத்தில் இயங்க வேண்டுமென்றால், அதற்கான முழு வளர்ச்சியை அவ்வுயிர் கண்டிருக்க வேண்டும். வேறு எதில் கவனம் பதிந்து விட்டாலும், சுய வளர்ச்சி பற்றிய கவனம் சிதறிவிடும். செய்வதை முழுமையாகச் செய்தால், ஒரு புல்லை வளர்த்தால் கூட, அது பிரமிப்பூட்டும் விதமாக அமைந்து காட்டும்.
Subscribe
கேள்வி: குழந்தைகள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எந்த அளவிற்கு முடிவெடுக்கலாம்?
சத்குரு:
பொதுவாக பெற்றோர் வாழ்ந்த காலம் வேறு, குழந்தைகள் வாழும் காலம் வேறு. இது புரியாமல், சூழல்கள் மாறிவிட்டபோது குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட முனைவது, சமயத்தில் அர்த்தமற்றுப் போகலாம். அதேசமயம், பெற்றோரின் அனுபவங்களைப் பயன்படுத்தாமல், தாமாக தவறானவற்றை முயன்று அதில் கிட்டும் அனுபவத்தால் குழந்தைகள் கற்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இவை இரண்டிற்கும் இடையில் ஒரு பொதுவான சமநிலையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கும் சமநிலையில், நம் குழந்தைக்கும் உடன்பாடு இருக்க வேண்டும்.
குழந்தையுடன் நல்ல நட்புடன் நீங்கள் பழகி வந்திருந்தால், குழந்தை தானாகவே உங்கள் வழிகாட்டுதலை விரும்பும். குழந்தைகளை அம்மாவாக, அப்பாவாக சில காலம் மட்டுமே நடத்த முடியும். அதற்குப் பிறகு அவர்களிடம் நீங்கள் நண்பராகத் தான் பழக வேண்டும். விரும்பாத இடத்தில் அறிவுரைகள் சொன்னால், அவை வேலை செய்யாது.
நண்பர்களாக சேர்ந்து உட்கார்ந்து பார்த்தால், இருக்கும் வாய்ப்புகளில் எது சிறந்தது என்று அறிவுரைகள் சொல்லாமலேயே தேர்ந்தெடுக்க முடியும்.
கேள்வி: இன்றைக்கு கல்வி கூட பணம் சம்பாதிக்கும் தொழிலாகிவிட்டதே?
சத்குரு:
பணம் என்பது நம் வாழ்வின் எல்லாப் பகுதியிலும் எல்லாக் கோணத்திலும் நுழைந்துவிட்டது. வணிகம் நம் வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது. மருத்துவம், கல்வி, கோயில் என்று வாழ்க்கையின் அத்தியாவசியமான அம்சங்கள் எல்லாவற்றிலும் பணம் பிரதானமாகிவிட்டது. வாழ்வின் சில மிக முக்கிய அம்சங்களான கல்வி, ஆரோக்கியம், ஆன்மீகம் போன்றவற்றை பொருளாதார ரீதியில் அணுகுவது சரியல்ல. அவற்றை வேறு மனநிலையுடன் அணுக வேண்டும். ஆனால் இன்று, இவை அனைத்தும் பொருள் சார்ந்திருப்பது வருத்தத்துக்குரியது.
தொடர்புடைய பதிவுகள்:
குழந்தை வளர்ப்பென்ன சவாலா? பகுதி 1
இன்றைய நாட்களில் அதிகமாக பேசப்படும் சில விஷயங்களில் குழந்தை வளர்ப்பும் ஒன்று. பத்து பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாய் வளர்த்த இந்த கலாச்சாரத்தில், இன்றோ குழந்தை வளர்ப்பு நம்மைப் பாடாய் படுத்துகிறது. குழந்தையும் படுத்துகிறது! கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள் பலர். என்ன செய்வது? சத்குரு சொல்கிறார்...
குழந்தை வளர்ப்பென்ன சவாலா? பகுதி 2
பெற்றோரின் லட்சணம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் குணங்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் விரிவாக அலசுகிறார் சத்குரு. அத்துடன் நாம் எளிதாக கடைபிடிக்கக் கூடிய சில குறிப்புகளையும் வழங்குகிறார். படியுங்கள்...
குழந்தை தான் சிறந்த Life Teacher!
குழந்தைகளுக்கு நாம் எதையாவது போதிக்க வேண்டுமென்ற நோக்கில் அவர்களை அணுகும் மனப்பான்மைதான் பெற்றோர்கள் உட்பட பெரியவர்களிடத்தில் உள்ளது. மறைந்த நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் நடிகர் கிரேசி மோகன் அவர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து சத்குருவிடம் கேள்வி எழுப்பிய போது, குழந்தைகளை நாம் எப்படி அணுகவேண்டும் என்பதை சத்குரு புரிய வைக்கிறார்.
குழந்தைகள் எந்த அளவு சுதந்திரமாக இருக்கலாம்?
"குழந்தைகளுக்கு பெற்றோர் எவ்வளவு தூரம் சுதந்திரம் வழங்குவது?" என சத்குருவிடம் வி.வி.எஸ்.லக்ஷ்மண் கேட்கிறார்.