விவாகரத்துக்கான (Divorce in Tamil) காரணங்கள்

கேள்வியாளர் 1: திருமணம், சோர்வை ஏற்படுத்தும் ஒரு யுத்தகளமாகும் போது, விவாகரத்து செய்துகொள்வது மேலானதுதானே?

சத்குரு: நம்மால் மற்றொரு நபருடன் சண்டையிடாமல் வாழமுடிந்தால், அப்போது விவாகரத்து என்ற கேள்வியே எழாது. நீங்கள் வீதியில் செல்லும் யாரோ ஒருவருடன் சண்டையிடவில்லை, ஒரு காலத்தில் அற்புதமானவர் என்று யாரை நீங்கள் நினைத்தீர்களோ அவருடன் சண்டையிடுகிறீர்கள். இந்த சண்டையானது, அந்த நபர் திடீரென்று அசிங்கமானவர் ஆகிவிட்டார் என்ற காரணத்தினால் அல்ல. இந்த சண்டை ஏன் எழுந்துள்ளது என்றால், நாம் வளர்ந்து வரும் நிலையில், நமக்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இரண்டு நபர்கள், இரண்டு திசைகளில் வளர்வது சரியானதுதான். இணைந்திருப்பதற்கு ஒரே விதமாக நாம் இருக்கவேண்டியது இல்லை. இருவரும் ஒரே விஷயங்களை விரும்பவேண்டும், ஒரே விஷயங்களைச் செய்யவேண்டும் அல்லது ஒரே விதமாக உணரவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் வெவ்வேறு வழிகளில் வித்தியாசமாக இருந்துகொண்டும், இணைந்து வாழமுடியும். உங்களுடன் இணைந்திருப்பதற்கு, மற்றவரும் உங்களைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஒருவிதமான முதிர்ச்சியின்மை இருக்கிறது. உலகில் எங்குமே, இரண்டு தனிமனிதர்கள் அச்சு அசலாக ஒரே விதமாக இல்லை. இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில், வாழ்வின் சில அம்சங்களில் சில வித்தியாசங்கள் இருக்கும்.

வீதியில் செல்லும் மனிதரை மறந்துவிடுங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெருங்கிய நபரிடம்கூட உங்களுக்கு பல அடுக்குகளில் எதிர்ப்பு இருக்கிறதல்லவா?

ராபர்ட் ஒவன் என்ற அமெரிக்க நூலாசிரியர் கூறினார்,” உலகத்தில் இருக்கும் அனைவரும் வினோதமானவர்களாகவே இருக்கின்றனர், என்னையும் உங்களையும் தவிர. ஆனால் நீங்களும்கூட சிறிது வினோதமானவர்தான்.” தயவுசெய்து உங்கள் மனதை உற்றுப்பாருங்கள். உங்கள் காரண அறிவின் பாதையில் நீங்கள் சென்றால், உலகத்தில் ஒருவரும் சரியானவர் இல்லை. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் அன்பான நபரை சற்று நெருங்கிச் சென்று, அந்த நபருடன் உங்களுக்கு எத்தனை அடுக்குகள் எதிர்ப்பு இருக்கிறது என்று சோதனை செய்து பாருங்களேன். வீதியில் செல்லும் மனிதரை மறந்துவிடுங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெருங்கிய நபரிடம்கூட உங்களுக்கு பல அடுக்குகளில் எதிர்ப்பு இருக்கிறதல்லவா? ஆகவே, அதன் பொருள் என்னவென்றால், உலகில் ஒருவரும் உங்களுக்கு சரியானவர் இல்லை. ஒருவரும் சரியில்லை என்றால், இதில் சரி அல்லது சரியில்லை என்பதெல்லாம் கிடையாது. அது என்னவென்றால் நீங்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அதை நோக்கி நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துள்ளது போல் தோன்றுகிறது! அந்த நோக்கில் நீங்கள் மேலும் முன்னேறினால், அது மேலும் பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்.

 

இரண்டு வெவ்வேறு நபர்கள், இரண்டு வித்தியாசமான புரிதல்களுடன் செயல்படுவதில் தொந்தரவு எதுவும் இல்லை. அடிநாதமான காதல் உணர்ச்சிதான் இருவரையும் இணைத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட, நீங்கள் இருவரும் பரஸ்பரம் மற்றவரின் நல்வாழ்வுக்கான தேடுதலில் இணைந்தீர்கள். நாம் இதைப் புரிந்துகொள்வோம். காதல் என்று இப்போது வழக்கத்தில் இருப்பதெல்லாம் பொதுவாகவே பரஸ்பர இலாப திட்டமாகத்தான் இருக்கிறது. உங்களுக்கென்று சில தேவைகள் உள்ளன, மற்றொரு நபருக்கும் சில தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இருவரும் இணைகின்றீர்கள். அந்தத் தேவைகள் உடலியல், உளவியல், உணர்ச்சி, சமூகம் அல்லது பொருளாதாரம் என்று பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடும். உங்களது ஏதோ ஒரு தேவை சரிவர நிறைவேறாமல் போகும் அந்தக் கணமே, அது முடிந்துவிடுகிறது. அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உறவு நிலையில் அங்கே வேறெதுவும் இருப்பதில்லை. இன்னொரு நபரிடமிருந்து நீங்கள் மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், மற்றொரு நபரும் உங்களிடமிருந்து மிகச் சிறந்ததைப் பிழிந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார். இது ஒரு யுத்தம்தானே தவிர, காதல் உறவு அல்ல.

காதல் என்பது உங்களைப் பற்றியது

நீங்கள் எதனைக் காதல் என்று அழைக்கிறீர்களோ, அது யாரோ ஒருவரைப் பற்றிய விஷயம் அல்ல, அது உங்களைப் பற்றியது, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. உங்கள் உடல் இனிமையாக இருந்தால், இதை நாம் ஆரோக்கியம் மற்றும் இன்பம் என்று அழைக்கிறோம். உங்கள் மனம் இனிமையாக இருந்தால், இதை நாம் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் என்கிறோம். உங்களுடைய உணர்ச்சிகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் அன்பு அல்லது நேசம் என்று அழைக்கிறோம். உங்கள் சக்தி நிலைகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் பரவசம் என்று அழைக்கிறோம். இவைகள் உங்களுக்குள் நீங்கள் எப்படி இருப்பது என்பதற்கான சில வழிகள். இதற்கு வேறு எவருடனும் எதுவும் செய்வதற்கில்லை, ஆனால் நீங்கள் இதை யாரோ ஒருவருடன் தொடர்புபடுத்துகிறீர்கள். யாரோ ஒருவர் உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமைப்படுத்த வேண்டும் என்று இருந்தால், நீண்ட காலத்திற்கு இது நிகழப்போவதில்லை. எந்த மனிதரும் அதை என்றென்றும் ஒரே நிலையில் தொடர்ந்து வைத்திருக்கமுடியாது. ஒருவேளை அவர்கள் உங்களைச் சந்தித்த புதிதில், மூன்று நாட்களுக்கு, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பதற்கு எல்லாவற்றையும் செய்வார்கள், ஆனால் அதையே ஒருவராலும் நீடித்திருக்கச் செய்யமுடியாது. அது எந்த மனிதருக்கும் சாத்தியமே இல்லை.

ஆகவே, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது உணர்ச்சிகள் இனிமையின் வழியில் இருந்தால், நீங்கள் உங்கள் இயல்பிலேயே அன்பாக இருப்பதுடன், வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், எல்லாம் சரியாக இருக்கிறது. அது இல்லையென்றால், ஒவ்வொரு சிறு வித்தியாசமும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உங்களுக்குள் ஒருவிதமான இனிமை இருக்கும்போதுதான், மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமான வட்டத்தில் இருக்கமுடியும்.

விவாகரத்து என்பது என்ன?

விவாகரத்து, divorce in tamil, மறுமணம், remarriage tamil

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேள்வியாளர் 2: நான் ஏற்கனவே ஒரு விவாகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன், என்னில் ஒரு பகுதி மரணமடைவதைப் போல் உணர்கிறேன். எப்படி இதை நான் கண்ணியமாக கடக்கமுடியும்?

சத்குரு: தற்போது “நான்” என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்களோ, அது ஞாபகப்பதிவின் மிகப்பெரிய தொகுப்பாக இருக்கிறது. உங்கள் உடல் இப்போது இந்த விதமாக இருப்பது ஏனென்றால், மரபுவழி ஞாபகப்பதிவை அது சுமக்கிறது. “என் உடல்” என்று நீங்கள் அழைத்துக்கொள்வது எதுவோ அது ஞாபகப்பதிவின் சிக்கலான ஒரு சேர்க்கை. இந்தக் காரணத்தினால்தான், உங்கள் தாயின் மூக்கு மற்றும் தந்தையின் நிறம் உங்களுக்கு இருக்கிறது. மிகப் பழமையான ஞாபகம் உங்களது உடலில் வாழ்கிறது. தற்போது “எனது மனம்” என்று நீங்கள் அழைத்துக்கொள்வது, 100 சதவிகிதம் ஞாபகப்பதிவுதான். பல விதங்களிலும் நீங்கள் ஒரு மிகப்பெரிய ஞாபகப்பதிவின் குவியலாக இருப்பதுடன், உங்களுக்குள் வெவ்வேறு வழிகளில் ஞாபகப்பதிவு தங்கியிருக்கிறது. நீங்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, ருசிப்பது மற்றும் தொடுவது என்னவோ, அவைகள் மூலம் ஞாபகத்தை சேகரிக்கிறீர்கள். ஞாபகத்தை சேகரிக்கும் இந்த ஐந்து வித்தியாசமான வழிகளுக்குள், நீங்கள் பார்ப்பதும், தொடுவதும் ஞாபகத்தின் மிக ஆழமான வடிவங்களாக இருக்கின்றன. குறிப்பாக, நீங்கள் எதைத் தொடுகிறீர்களோ, அது உடலமைப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு ஞாபகப்பதிவை உருவாக்குகிறது.

விவாகரத்து தன்னிச்சையான மரணம். உங்களில் ஒரு பாகமாக உள்ள ஏதோ ஒன்றை நீங்களே கொன்று விட முடிவு செய்துவிட்டீர்கள்.

வாழ்க்கைத் துணை என்றால், அவர்கள் உங்களைத் தொட்டிருக்கிறார்கள் என்பதுடன், ஒரு குறிப்பிட்ட அளவிலான நினைவு பதிவுசெய்யப்படுகிறது. ஒரு விவாகரத்து என்றால், ஏதோ ஒரு வகையில் நீங்கள் அந்த நினைவை கிழித்தெறிய முயற்சிக்கிறீர்கள், மேலும் பல்வேறு காரணங்களுக்காக அது எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில், நீங்கள் விவாகரத்து செய்கிறீர்கள் என்றால், ஏதோ ஒரு வழியில் அந்த நினைவுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறீர்கள். அந்த நினைவை அழிக்காமல் இருக்க நினைக்கலாம், ஆனால் காரணம் என்னவாக இருந்தாலும், பல விதங்களிலும் உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்த ஒருவரை, தூக்கி செல்ல விரும்பாத ஒரு சுமையாக நீங்கள் மெல்லமெல்ல உணரத் தொடங்கியுள்ளீர்கள். அந்த சுமையை விலக்கி வைக்க விரும்புகிறீர்கள், ஆனால் அந்தச் சுமை நீங்கள் தன்னிச்சையாக சுமக்கும் ஒன்று அல்ல என்று உணருகிறீர்கள்; அது கட்டாயமாக உங்களுடன் ஒட்டிக்கொண்ட ஒன்றாகிவிட்டது. கட்டாயமாக ஒட்டியிருப்பது எதுவாக இருந்தாலும், நீங்கள் அதைக் கிழித்தெறிய முற்பட்டால், அங்கே வலி இருக்கும்.

உங்களது வாழ்க்கைத் துணையைக் குறித்த ஞாபகம் மனதில் கட்டப்பட்டுள்ளது, அவ்வளவு எளிதில் அதை அகற்ற முடியாது. நீங்கள் (சம) சீரான நிலையில் உணர்வுபூர்வமாகவும், உளவியல்ரீதியாகவும் இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருப்பினும், உங்கள் முழு உடலமைப்பும் ஒரு குறிப்பிட்ட அளவிலான துன்பம் அனுபவிப்பதைப் பார்ப்பீர்கள். குறிப்பாக, நீங்கள் நீண்ட காலம் இணைந்து வாழ்ந்திருந்தால், அவருக்கு மரணம் ஏற்படும்போது உங்களது உடலின் ஒவ்வொரு அணுவிலும் உங்கள் துணையின் ஞாபகம் செயல்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். அது வெறும் உணர்ச்சி மற்றும் உளவியல்ரீதியான செயல்முறை மட்டும் அல்ல; அது மிகவும் உடல்ரீதியான செயல்முறை.

விவாகரத்து ஒரு தன்னார்வ (தன்னிச்சையான) மரணம். ஏதோ ஒன்று எவ்வழியிலோ உங்களின் பாகமாக உள்ள ஒன்றை நீங்கள் கொல்ல முடிவு செய்துவிட்டீர்கள். இந்தக் காரணத்திற்காகத்தான், படைப்பின் மூலம் மற்றும் நம் உடல்கூறு செயல்படும் விதத்தின் புரிதலுடன், “மரணம் வந்து உங்களை பிரிக்கும் வரை நீங்கள் பிரியாமல் இருப்பீர்கள்" என்று உங்களுக்கு எப்போதும் கூறப்பட்டது. ஏனென்றால் இதில் உடல்ரீதியான நினைவுகள் இருக்கிறது. மேலும் உடலுக்கு மனதின் சமநிலை இல்லை. மனம் முடிவு செய்து பின்னோக்கி செல்ல முடியும், ஆனால் உடலால் முடியாது. நீங்கள் எந்த அளவுக்கு நினைவுகளை உருவாக்குகிறீர்களோ, அந்த அளவுக்கு குழப்பமடைகிறது.

விவாகரத்து (Divorce in Tamil) மற்றும் மறுமணம் (Remarriage in Tamil)

பெரும்பாலான மக்கள் விவாகரத்து பெற்றவுடன் சரிவர நடந்துகொள்ள வேண்டிய சிறந்த வழி உடனடியாக அதைப்போன்ற மற்றொரு உறவுக்குள் குதித்துவிடுவதுதான் என்று நினைக்கிறார்கள்.

அதைச் செய்வதன் மூலம் உங்கள் உடல் அமைப்புக்கு மேலும் அதிகமான போராட்டமும் குழப்பமும் ஏற்படும். மிக மிக முக்கியமானது அந்த நினைவிலிருந்து மீண்டு, அந்த நினைவை ஒரு குறிப்பிட்ட எல்லையில் வைத்திருக்க உடலுக்கு போதுமான அவகாசம் தேவைப்படும். இல்லையென்றால், நீங்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ மிகக் கடினமான முயற்சி தேவைப்படும்படியான இடத்திற்கு உங்களை நீங்களே தள்ளி விடுவதாகும்.

விவாகரத்தை தவிர்க்க முடியாதபோது

விவாகரத்தைத் தவிர்க்க முடிந்தால், அது மிகச் சிறந்தது. ஆனால் ஏதோ காரணத்துக்காக, விவாகரத்தைத் தேர்வு செய்ய வேண்டிய அந்த ஒரு சூழலுக்கு நீங்கள் வந்திருந்தால், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, விவாகரத்து என்றால், உங்களின் ஒரு பாகமாக இருக்கும் ஏதோ ஒன்றை கொல்ல நீங்கள் தேர்வு செய்துவிட்டீர்கள்.

நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது நம் வெளிப்புறத் தேவைகளை பொறுத்திருக்கிறது. ஆனால் நமது உள்நிலையின் இருப்பு (தானே) அதுவாகவே முழுமையாக இருக்கிறது.

இணைந்திருந்த இரண்டு நபர்கள், அவர்கள் பகிர்ந்த உணர்ச்சிகள், அவர்கள் உடல், அவர்கள் உணர்வுகள், அவர்கள் வாழ்ந்த இடம் இவற்றிலிருந்து வலுக்கட்டாயமாக விலகுவது, ஏறக்குறைய உங்களையே கிழித்தெறிவதைப் போன்றது. ஏனென்றால் இரண்டு நினைவுகளும் பல வழிகளில் ஒன்றுபட்டிருக்கும். இனிமேலும் அந்த நபரை நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற ஒரு நிலைக்கு நீங்கள் அனேகமாக வந்திருந்தாலும், இன்னமும் அது வலியை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், நீங்கள் ஒரு நினைவை கிழித்தெறிய முயற்சிக்கிறீர்கள், அது நீங்கள்தான் - ஏனென்றால் நீங்கள் ஒரு நினைவுக் குவியலாகத்தான் இங்கு இருக்கிறீர்கள்.

ஆனால் உங்களை நீங்கள் ஏற்கனவே விவாகரத்து செய்துகொண்டீர்கள் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பிணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் உங்களது வாழ்வு பேணி வளர்க்கப்படுகிறது, கூட்டமைப்பு (இணைந்திருத்தல்) அல்லது பிணைப்பு - நீங்கள் இதில் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பதை பொறுத்து - உங்களை ஒருவிதத்தில் முழுமையாக உணர வைக்க. இதைப்போன்ற பெரும்பாலான கூட்டமைப்புகள் ஏன் ஏற்படுகிறது என்றால், நீங்கள் நிறைவில்லாத மற்றும் முழுமையற்றவராக இருப்பதாக தானாகவே உணருவீர்கள். ஆனால் அப்படி இல்லை வாழ்க்கை. இயல்பாகவே முழுமையான வாழ்க்கை செயல்முறை தெரிந்தவராக இருக்கிறீர்கள். வெளியிலிருந்து அதற்கு எந்த உதவியும் தேவையில்லை.

விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் என்றால், உள்முகமாகத் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த வாழ்வின் தன்மை என்ன என்பதன் முழுமையைக் கண்டுபிடிப்பதற்கான நேரம் இது. இந்த உயிர் முழுமையானது என்பதுடன் அது அப்படி இருப்பதற்கு, வெளியிலிருந்து எந்த உதவியும் அதற்கு தேவையில்லை என்பதை கண்டுபிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு சமூகத்தில் நம் வாழ்க்கையை நடத்துவதற்கு, நாம் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கிறோம், ஆனால் இந்த உயிரினத்தின் அடிப்படை, சமநிலை, இடம் மற்றும் இது என்ன என்பதற்கான சாத்தியம் இதுவே ஒரு முழுமையான செயல்முறையாகும். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது நம் வெளித்தேவைகளைப் பொறுத்தே இருக்கிறது, ஆனால் நம் உள்நிலையின் இருப்பு இயல்பாகவே முழுமையாக உள்ளது. நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை விவாகரத்து செய்கிறீர்கள் என்றால் அது மோசமானதாக உள்ளது, உங்களை உங்களிடமிருந்து விவாகரத்து செய்துகொள்ளாதீர்கள்.

மறுமணத்தின் மூலம் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள்

கேள்வியாளர் 3: சத்குரு, நான் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டேன். எனக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். சில நேரங்களில், நான் அன்பை இழந்தவளாகவும், மறுமணத்திற்கான ஒரு தேவையையும் உணர்கிறேன். தந்தையின் உருவில் வீட்டில் யாரும் இல்லையே என்று என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான். நான் உண்மையில் குழப்பமாக இருக்கிறேன், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.

சத்குரு: இன்றைய உலகில், திருமணத்துக்குப் பிறகு குழந்தை என்பது தானாக நிகழும் செயல் அல்ல. இதைத் தவிர வேறு வழியே இல்லை என்று முன்பு ஒரு சமயம் (காலம்) இருந்தது. நீங்கள் மணம் செய்துகொண்டால், குழந்தைகள் வந்துகொண்டே இருந்தார்கள். ஆனால் இன்றைய உலகில், ஒரு குழந்தைப் பிறப்பு என்பது தானாக நிகழ்வது இல்லை – பொதுவாக இது திட்டமிடப்படுகிறது. உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அது உங்களுக்கான இருபது வருடத் திட்டம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களது குழந்தை மிகவும் திறமைசாலியாக இருந்தால், அது 15 -16 வருடத் திட்டம். ஒரு குழந்தை பெறுவதற்கு நீங்கள் முடிவெடுக்கும்போது, குறைந்தபட்சம் 15 வருடத் திட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். அந்தப் பொறுப்புணர்வு உங்களுக்கு இல்லையென்றால், அதற்குள் நீங்கள் செல்லக்கூடாது; அது தேவையில்லாதது. ஏனென்றால், உங்கள் கருப்பையைத் தட்டியெழுப்பி, எந்தக் குழந்தையும், “எனக்கு பிறப்பு கொடுங்கள்,” என்று கூறிக்கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட ஆதரவை உங்களால் அந்தக் குழந்தைக்கு கொடுக்கமுடியுமா என்பதில் நீங்கள் உறுதியாக இல்லை என்றால், குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த தவறான செயலுக்குள் நீங்கள் செல்லக்கூடாது.

விவாகரத்துக்குப் பின், ஒற்றைத் தாயாக (கணவர் இல்லாத் தாயாக) இருப்பது

இன்னொரு திருமணம் குழந்தையை சீராக வைத்திருக்கும் என்று நினைப்பது, மிகவும் தவறான ஒரு கருத்து. குழந்தைக்கு அது தீர்வாக இருக்காது என்று நான் கூறவில்லை, ஒருவேளை அது தீர்வாகலாம். ஆனால், “குழந்தையின் தந்தை இல்லாத நிலையில், வேறொரு நபரை தந்தையாகக் கொண்டுவந்தால், எல்லாம் சரியாகிவிடும்,” என்று மட்டும் சிந்திப்பது மிகவும் ஆபத்தான கருத்து. பத்து சதவிகிதம் மட்டுமே அப்படிப்பட்ட விஷயங்கள் சரியாக செயல்படும் என்றுதான் நான் கூறுவேன். தொண்ணூறு சதவிகித நேரங்களில், அது தீர்வுகளை விட அதிக பிரச்சனைகளை உருவாக்குகின்றன. உங்கள் திருமண பந்தத்தை நீங்கள் ஏன் முறித்தீர்கள் என்று நான் கேட்கவில்லை, அது உங்களைப் பொறுத்த விஷயம். நீங்கள் அதை முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளீர்கள் என்றால், குறைந்தபட்சம் எல்லா சாத்தியமான வழிகளிலும் குழந்தைக்கு ஒரு முழுமையான பெற்றோராக இருக்கும் பாத்திரத்தை ஏற்பதற்கு உங்களையே நீங்கள் திறன்மிக்கவராக உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் வேறு ஏதோ விஷயத்திற்காக ஏக்கம் கொள்ளும் காரணத்தால், குழந்தையும் உங்களுடன் சேர்ந்து ஏங்குகிறது.

தன்னருகில் இல்லாத ஒருவருக்காக எப்போதும் ஏங்கும் உதவியற்ற நிலையில் உங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டாம். உங்களது எட்டு வயதுக் குழந்தை உங்களுடன் எவ்வளவு நேரத்தைச் செலவிட விரும்புகிறது? ஏதோ சில மணித்துளிகள்தான். ஒரு குழந்தையானது சாதாரணமாக அதற்கே உரிய விளையாட்டுகளில் மும்முரமாக இருக்கும். ஆனால், எப்போதும் உங்களுடனேயே ஒட்டிக்கொண்டிருக்கும் அளவுக்கு ஆதரவில்லாத ஒரு உயிராக அவனை நீங்கள் உருவாக்கினால் தவிர, மற்றபடி குழந்தைக்கென்று செய்வதற்கான அதற்கே உரிய விஷயங்கள் அதிகம் உண்டு. அதுதான் வாழ்வின் இயல்பு; குழந்தைகள் செய்வதற்கு அவர்களுக்குரிய பல விஷயங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் தவறான விஷயங்களைச் செய்து, தங்களுக்கே ஆபத்தை உண்டாக்கிக்கொள்ளாதவாறு மட்டும் அவர்கள் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்வது நல்லதா?

நீங்கள் மறுமணம் செய்துகொள்ள விரும்பினால் – அது உங்களது முடிவு. அதை நீங்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். சிறுவனைக் காரணம் கூறவேண்டாம். சிறுவனுக்கு நீங்களோ அல்லது அவனது தந்தையோ தேவைப்படாத அளவுக்கு, அவனை உருவாக்குங்கள். அவன் தன்னளவில் நன்றாகத்தான் இருக்கிறான். அவனுக்கு உங்களது ஆதரவும், கவனிப்பும்தான் தேவைப்படுகிறது, வேறு எதுவும் இல்லை. நீங்கள் என்ன செய்தாலும், அதற்கு ஒரு பின்விளைவு இருக்கும். நீங்கள் திருமணம் செய்யவில்லை என்றால், அதற்கு ஒருவிதமான பின்விளைவு இருக்கும். நீங்கள் மறுமணம் செய்தால், அங்கே வேறொரு விதமான விளைவு இருக்கும் – நீங்கள் ஏற்கனவே ஒருமுறை உணர்ந்திருக்கிறீர்கள், ஆகவே, அதை நீங்கள் முன்பைவிட நன்றாகக் கையாளக்கூடும். ஆனால் இரண்டுக்கும் அவைகளுக்கான விளைவுகள் இருக்கும். மேலும், விளைவுகள் அவசியம் இனிமையாகவோ அல்லது இனிமையில்லாமலோ இருக்கவேண்டிய தேவையில்லை. அது விளைவுகளை நீங்கள் எப்படி சுமக்கிறீர்கள் என்பதையே சார்ந்திருக்கிறது. நீங்கள் விளைவை ஆனந்தமாக சுமந்தால், அது வேண்டிவிரும்பும் ஒரு சுமையாக இருக்கும். இல்லையென்றால், அது சுமையாக மட்டும் இருக்கும்.