கரும்பு, நாட்டுச்சர்க்கரை… விவசாயத்தோடு வியாபாரத்தை இணைத்த smart விவசாயி!
கரும்பு சாகுபடியிலும் அதன்மூலம் லாபம் ஈட்டுவதிலும் பெரும் பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்துவரும் சூழலில், ஒரு இயற்கை விவசாயி தனது புத்திசாலித்தனத்தால் கரும்பை மதிப்புக்கூட்டி, நேரடி விற்பனை செய்து நம்மை அசரவைக்கிறார். தொடர்ந்து படித்தறியுங்கள் அவரின் தொழில் இரகசியங்களை! இந்த முதல் பகுதியில், சுபாஷ் பாலேக்கர் அவர்களின் வழிகாட்டுதலில் தான் கற்றுக்கொண்ட விஷயங்களையும், கரும்பினை நாட்டுச்சர்க்கரையாக மாற்றும் வழிமுறையும் நம்முடன் பகொர்கிறார்.
சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவை தொகையை பெறுவதற்கான தொடர் போராட்டங்கள் ஒருபுறம், கரும்பு கொள்முதலுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றொருபுறம். இவ்வாறு தமிழக கரும்பு விவசாயிகள் சந்திக்கும் 2 முக்கிய பிரச்சினையிலும் சிக்காமல், தான் உற்பத்தி செய்யும் கரும்பை தானே நாட்டு சர்க்கரையாக மாற்றி நேரடி விற்பனை மூலம் நல்ல லாபம் பார்த்து வருகிறார் கரும்பு விவசாயி சோமசுந்தரம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 50 ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் போன்றவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் அவரை பார்ப்பதற்காக மாலை நேரம் ஒன்றில் சென்றிருந்தேன். சத்தியமங்கலத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள ராஜநகர், கொத்தமங்கலம் ஆகிய 2 கிராமங்களில் மொத்தம் 5 இடங்களில் அவருக்கு தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு தோட்டமாக அழைத்து சென்று சுற்றி காண்பித்தார் இயற்கை விவசாயி சோமசுந்தரம்.
பரம்பரை விவசாய குடும்பமா இருந்தாலும் நான் கடந்த 30 வருசமா மர வியாபாரம்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுல சம்பாதிச்ச பணத்த வச்சு ஆத்து ஓரத்துல நிலம் வாங்க முடிவு பண்ணேன். 2013-ல இங்க 2 தோட்டத்தை வாங்குனேன். 2015-ல ஈஷா ஏற்பாடு பண்ண பாலேக்கர் ஐயாவோட ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ வகுப்புல கலந்துகிட்டத்துக்கு பிறகு அடுத்த 3 தோட்டத்தையும் வாங்குனேன்.
இப்போ மொத்தம் இருக்குற 50 ஏக்கர் நிலத்துல 20 ஏக்கர்ல கரும்பும் 13 ஏக்கர்ல வாழையும் போட்டுருக்கேன். 10 ஏக்கர்ல பூசணிக்காயும், அரசாணி காயும் சேத்து போட்டுருக்கேன். 5 ஏக்கர்ல கிளைரிசெடியா நட்டுருக்கேன். அதுல இந்த மாசம் மிளகு கொடி ஏத்தப்போறேன். இதுதவிர மீதமிருக்குற நிலத்துல நெல், காய்கறிகள், பழ மரங்கள் போட்டுருக்கேன்.
பாலேக்கர் ஐயா வகுப்ப முடிச்சதுக்கப்பறம் ஈஷா விவசாய இயக்கத்துல இருந்து தோட்டத்துக்கு அடிக்கடி வந்து நிறைய ஆலோசனைகள் கொடுத்தாங்க. அதுல முக்கியமா மதிப்பு கூட்டி நேரடி விற்பனை பண்ணா நல்ல லாபம் பார்க்க முடியும்னும் சொன்னாங்க. நானும் சரினு சொல்லிட்டு என் தோட்டத்துல விளையுற கரும்புங்கள நாட்டு சர்க்கரையா மாத்தி விக்க ஆரம்பிச்சேன் என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய தோட்டத்தில் உள்ள சிறிய சர்க்கரை ஆலைக்கு அழைத்து சென்றார்.
Subscribe
தோட்டங்களில் விளையும் அனைத்து கரும்புகளையும் கூலி ஆட்கள் அறுவடை செய்து ஆலைக்கு எடுத்து வருகின்றனர். அங்குள்ள அரவை எந்திரத்தில் சாறு பிழிந்து, கரும்பு சாறு மட்டும் ஒரு குழாய் வழியாக அருகில் உள்ள பெரிய கொப்பரைக்கு செல்லும் விதமாக அதை வடிவமைத்துள்ளனர். கரும்பு சக்கைகளை காய வைத்து அடுப்பு எறிப்பதற்கு பயன்படுத்தி கொள்கின்றனர். கரும்பு சாறை நன்கு சுண்ட காய்ச்சி பின்னர் அதை இன்னொரு கொப்பரைக்கு மாற்றி நாட்டு சர்க்கரையாக மாற்றுகின்றனர்.
அடுத்த பகுதியில்…
கரும்பை நாட்டுச்சர்க்கரையாக மாற்றி, அதனை வெற்றிகரமாக நேரடி விற்பனை செய்வதால் இலாபம் ஈட்ட முடியும் என்ற சூட்சுமத்தையும், கரும்பு சாகுபடியில் விவசாயிகளுக்கு தேவைகான சில முக்கிய டிப்ஸ்களையும் வழங்குகிறார் விவசாயி சோமசுந்தரம்.
விதை விதைப்போம்...
ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
நன்றி: தினத்தந்தி
(குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது)
ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!