டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்:

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

தைராய்டு அறிகுறிகள் (Thyroid Symptoms in Tamil) மற்றும் தீர்வுகள்

ஹைபோதைராய்டிஸம்: (Hypothyroidism in Tamil)

இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.

அறிகுறிகள் (Hypothyroidism Symptoms in Tamil): உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.

காரணங்கள்: உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும் போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூடரி சுரப்பியில் நோய், மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.

சிகிச்சை: மருந்துகள் மூலம் இந்த ஹார்மோன் அளவை சரிசெய்ய முடியும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொண்டால் உங்கள் அறிகுறிகள் முழுவதும் குணமடையாமல் இருக்கும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தூக்கமின்மை, எடை குறைவு, பதட்டம், அதிக பசி, படபடப்பு, சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை ஏற்படும். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. மருத்துவர் உங்களுக்கு மருந்து ஆரம்பித்து 6 - 10 வாரங்கள் கழித்து, மருந்தின் அளவை நிர்ணயம் செய்ய, இரத்தப் பரிசோதனை செய்வார். இதன் பின்பு வருடம் ஒரு தடவை இரத்தப் பரிசோதனை செய்யலாம்.

thyroid test, thyroid symptoms in tamil, தைராய்டு அறிகுறிகள்

உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ, மேற்கூறிய பிற அறிகுறிகள் ஏற்பட்டாலோ, பிற மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலோ, சரிவர மருந்துகள் எடுக்கவில்லை என்றாலோ, மருந்துகள் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றாலோ, கர்ப்பம் தரித்தாலோ மருத்துவரை அணுகி தைராய்டு ஹார்மோனின் அளவை பரிசோதிப்பது அவசியம்.

ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism in Tamil)

இது, உடலின் தேவையைவிட அதிக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் நிலை. இந்த நிலையில், உடலின் அனைத்து இயக்கங்களின் வேகம் அதிகரிக்கிறது. இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாக ஆரம்பித்து முன்னேறுவதால், மன அழுத்தம் அல்லது பதட்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்.

அறிகுறிகள் (Hyperthyroidism Symptoms in Tamil): பதட்டம், அதிக வியர்வை, படபடப்பு, கை நடுக்கம், தூங்குவதில் சிரமம், சருமம் மெலிதல், முடி உதிர்தல், தசைகள் ஓய்ந்து போதல் - குறிப்பாக தொடை மற்றும் தோற்பட்டை தசைகள், அடிக்கடி மலம் கழித்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருத்தல், எடை குறைதல் ஆகியவை.

காரணங்கள்: ‘கிரேவ்ஸ்’ நோய் எனப்படும் நோயால் பொதுவாக ஏற்படும். இது தவிர தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கட்டி அல்லது முடிச்சுகளாலும், எரிவாலும், தொற்றாலும் சில வகையான மருந்துகளாலும் ஏற்படலாம்.

சிகிச்சை: மருந்து, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மருந்துகள், பிற மருந்துகள் என நோயின் தன்மை மற்றும் காரணத்தைப் பொறுத்து நபருக்கு நபர் தைராய்டு சிகிச்சை மாறுபடும்.

தைராய்டு காய்டர்:

இது தைராய்டு சுரப்பி பெரிதாவதைக் குறிக்கும். இந்நிலையில் சுரப்பி அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது ஏதும் மாற்றமில்லாமலும் செயல்படலாம்.

காரணம்: உணவில் அயோடின் பற்றாக்குறை, ஆட்டோ இம்யூன் நோய், தைராய்டில் எரிவு போன்றவற்றால் இது ஏற்படும்.

சிகிச்சை: பெரிதான சுரப்பி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். தைராய்டு சுரப்பி கழுத்தில் பார்க்க முடிகிறதென்றால், உடனே மருத்துவரை அணுகவும்.

தைராய்டு கட்டிகள்:

தைராய்ட்டு சுரப்பியில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் ஏற்படலாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக இவை எந்த தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு கழுத்தில் வலி, விழுங்குவதில் சிரமம், மூச்சு வாங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் போன்றவை ஏற்படுத்தும். மருத்துவரிடம் சென்று இது புற்றுநோய் கட்டியல்ல என்று உறுதி செய்து கொள்வது அவசியம்.

தைராய்டு எரிவு:

தைராய்டு செல்கள் எரிவுக்கு உள்ளாகும்போது அதன் வீரியத்தைப் பொறுத்து பாதிப்படையும். மருந்துகள், மகப்பேற்றுக்குப்பின் தொற்றுகள் (Infection) போன்றவை இவற்றை ஏற்படுத்தும். சிலவகையான எரிவுகள் வலியை ஏற்படுத்தும்.

தைராய்டு புற்றுநோய்: (Thyroid Cancer in Tamil)

தைராய்டு - பிரச்சனைகளும் தீர்வும், Thyroid prachanaigalum theervum

 • இந்தப் புற்றுநோயை பெரும்பாலும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். மற்ற புற்றுநோய்கள் போன்று இது வலியோ, பாதிப்போ ஏற்படுத்துவதில்லை.
 • பொதுவாக இவை எந்த அறிகுறியும் ஏற்படுத்துவதில்லை.

சிலருக்கு வலி, விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.

 • குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரும் வாய்ப்பு அதிகம்.
 • மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

யாருக்கு தைராய்ட் நோய் வரும் வாய்ப்பு அதிகம்?

கீழ்க்கண்டவை இருந்தால் அவர்களுக்கு மற்றவரை விட தைராய்டு நோய் வரும் அபாயம் அதிகம்.

 • பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்
 • ஆட்டோ இம்யூன் வியாதிகள், குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்சினைகள் இருப்பது, தைராய்டு அறுவை சிகிச்சை மற்றும் கழுத்தில் கதிர்வீச்சு சிகிச்சை செய்திருப்பவர்கள்
 • புகைபிடித்தல், உணவில் அயோடின் குறைபாடு
 • கர்ப்பகாலம் மற்றும் குழந்தை பிறந்த ஓரிரு வருடங்களில்

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா?

மிகுந்த அசதி, திடீரென உடல் எடை அதிகமாகவோ குறைவாகவோ ஆவது, பதட்டம், மனச்சோர்வு, இயல்பைவிட மிகக் குறைந்த அல்லது அதிக கொலஸ்டிரால் அளவு, மலம் கழிப்பதில் பிரச்சினை, முடி உதிர்தல், சருமத்தில் மாற்றம், கழுத்துப்பகுதியில் வீக்கம், வலி அல்லது கட்டி, குரல் மாற்றம், தசை, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருத்தரித்தலில் சிக்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

அயோடின்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

thyroid symptoms in tamil, தைராய்டு அறிகுறிகள்

தைராய்டு ஹார்மோனின் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அத்தியாவசியமானது. இதை உணவிலிருந்து மட்டுமே பெறமுடியும் அல்லது மருந்தாக உட்கொள்ள வேண்டும். இதன் குறைபாடு தைராய்டு சுரப்பியில் பல்வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். அனைவருக்கும் அயோடின் மிகமிக அவசியம். குறிப்பாக கர்ப்பமடைந்த பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அயோடின் மிக முக்கியம். போதிய அளவு அயோடின் இல்லையென்றால், குறைப்பிரசவம், குழந்தை இறந்தே பிறப்பது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை, மூளைத்திறன் குறைவான குழந்தை, பேச்சு, கேட்கும் திறனில் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும். அயோடின் சேர்க்கப்பட்ட சமையல் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த குறைபாட்டை எளிதில் தடுக்கலாம்.

தைராய்டு பிரச்சினைகளுக்கு யோகா:

yoga for thyroid

 • யோகப்பயிற்சிகள் தைராய்டின் செயல்பாட்டை மட்டுமின்றி உடலிலுள்ள எல்லா பாகங்களின் செயல்திறனையும் திறம்பட செயல்பட வைக்கிறது.
 • யோகப் பயிற்சிகள் சுரப்பிகளின் செயல்களைச் சீராக்குகின்றன.
 • இது தவிர உடலின் சக்தியை அதிகரித்து மனஅழுத்தத்தைக் குறைத்து, வளைவுத் தன்மையை அதிகரித்து தசை மற்றும் மூட்டின் இறுகுத்தன்மையை குறைப்பதால் தைராய்டு பிரச்சினையின் பாதிப்புகளை சமாளிக்க முடிகிறது.
 • 2010 வருடத்தின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் ஈஷா யோக பயிற்சி செய்ததில், 51 சதவீதத்தினர், தங்கள் நோயில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அதில் 50 சதவீதத்தினர் மருந்தின் அளவை குறைக்க முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.

தைராய்டு - சத்குருவின் பார்வையில்

கேள்வி: சத்குரு, இப்போது பலருக்கும் தைராய்டு பிரச்சனை இருப்பதாக பரிசோதனை முடிவுகள் அறிவிக்கிறது. நாம் தற்போது அயோடின் உப்பையே பயன்படுத்தி வந்தாலும் பிரச்சனை இன்னும் தொடர்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரிக்க காரணம் என்ன? சர்க்கரை நோய், BP போல இதுவும் மன அழுத்தம் சம்மந்தப்பட்டதா?

கிரியா அல்லது ஹடயோகா செய்வதன் மூலமோ அல்லது ஈஷா யோக மையம் போன்ற பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழ்வதாலேயோ இதிலிருந்து விடுபட முடியுமா? இதிலிருந்து வெளிவர நாம் என்னென்ன செய்யலாம்?

சத்குரு: ஹடயோகா செய்தே பலரும் இதிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள், அது பற்றி கேள்வியே இல்லை. பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழ்வதும் நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்.

ஆனால், தைராய்டு சமநிலை இல்லாமல் போவது என்பது இப்போது மிகப்பரவலாக இருக்கிறது. நாம் இதை புரிந்துகொள்ள வேண்டும். எதை நாம் தைராய்டு என்கிறோமோ - யோக மரபில் சுரப்பிகளை நாம் அந்த விதமாக அணுகுவதில்லை. ஆனால், நவீன மருத்துவத்தின்படி, நீங்கள் தைராய்டு என்று எதை அழைக்கிறீர்களோ, அது உங்கள் உடலில் தினசரி என்ன நடக்கவேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப இயங்கும் சுரப்பியாக இருக்கிறது. எவ்வளவு ஜீரணம் நடக்க வேண்டும், எவ்வளவு சக்தி உற்பத்தியாக வேண்டும், எவ்வளவு கொழுப்பு உற்பத்தியாக வேண்டும், எவ்வளவு தசைகள் சேர வேண்டும் - இவை எல்லாவற்றையும் உங்கள் உடல் அமைப்புக்கு தேவையானபடி தீர்மானித்து, நிறைவேற்ற முயற்சிக்கிறது.

மிக நுணுக்கமாக, மிக துல்லியமான செயல்பாடுகளை கொண்ட ஒரு சுரப்பி என்றால் அது தைராய்டு. இது எளிதாக கவனிக்கக்கூடிய ஒன்று. முதலில் உங்கள் உடல் மற்றும் மனரீதியான சில விஷயங்கள் சற்று தாறுமாறாக செயல்படும் - காரணம் தைராய்டில் ஏற்படும் தடுமாற்றம்.

உங்கள் உடல் அமைப்பு, உங்கள் மன அமைப்புடன் மிக நெருக்கமாக சம்மந்தப்பட்டுள்ளது. இன்று இதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது - இங்கே உட்கார்ந்தபடி நீங்கள் ஒரு மலையைப் பற்றி நினைத்தால், உங்கள் சுரப்பிகள் ஒருவிதமாக சுரக்கும். நீங்கள் ஒரு புலியை நினைத்தால், ஒருவிதமாக சுரக்கும். சமுத்திரத்தை பற்றி நினைத்தால், இன்னொரு விதமாக சுரக்கும். ஒரு ஆணையோ பெண்ணையோ நினைத்தீர்கள் என்றால், அப்போது சுரப்பு வேறுவிதமாக இருக்கும்.

வெறும் எண்ணமே - வேறு எதுவுமே தேவையில்லை, மலை, புலி, ஆண், பெண் அல்லது சமுத்திரம் என எதனோடும் நீங்கள் நேரடியாக தொடர்பில் இல்லை என்றாலும் - வெறும் ஒற்றை எண்ணமே உங்கள் சுரப்பிகளின் செயல்பாட்டை மாற்றிவிடும். அந்தளவுக்கு உங்கள் உடல் மிக நுட்பமாக இயங்குகிறது, அதாவது இந்த உடல் எல்லாவற்றையும் சீர்படுத்தி உங்களை நல்லபடியாக வைத்திருக்க எப்போதும் முயற்சிக்கிறது.

தைராய்டும் உடலும்

இப்போது உங்களிடம் இருக்கும் பிரச்சனையே, உங்களுக்கு ஒரு மாட்டு வண்டி தேவைப்படுகிறது, ஆனால் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை பரிணாம வளர்ச்சி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. உங்களுக்கு ஒரு மாட்டு வண்டிதான் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் ஒரு விண்வெளிக் கப்பலை உங்களிடம் தந்துவிட்டார்கள். அதிலிருக்கும் ஒவ்வொரு சின்ன அம்சமும் அசாத்தியமான பல காரியங்களைச் செய்யும். சும்மா தொட்டாலே, அது வேண்டிய இடத்துக்கு போகும். நீங்கள் தொட்ட உடனே, அந்த இயந்திரத்திற்குள் தாரை தாரையாக என்னென்னவோ நடக்கிறது. சும்மா இப்படி பார்த்து, இந்த மரத்தைப் பற்றி நீங்கள் ஒரு முடிவுசெய்து வைத்துகொண்டாலே போதும் விதவிதமான ரசாயன மாற்றங்களும் மற்ற பல விஷயங்களும் நடக்கும். சுரப்பிகளின் செயல்பாடே மாறிப்போகும்.

நீங்கள் எங்கே இருந்தாலும் - மும்பை, நியூயார்க், லண்டன் என எங்கே இருந்தாலும் - நீங்கள் நடந்து செல்லும் அந்த சூழ்நிலையை கொஞ்சம் வெறுமே கவனித்துப் பாருங்கள். சமூகரீதியாக அங்கே நடப்பதெல்லாம் உங்களுக்கு பழகிப் போயிருக்கலாம், ஆனால், நீங்கள் நடந்து செல்லும் அந்த சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். எத்தனை எத்தனை விஷயங்கள் நடக்கிறது என்பதை கவனியுங்கள். எதுவுமே இந்த உயிருக்கு உகந்ததாக இல்லை. நீங்கள் அதனோடு அனுசரித்து போயிருக்கலாம். அந்த நகரத்தை விட்டு வெளியே வேறு எங்கேயும் வாழமுடியாதபடி நீங்கள் மாறிப் போயிருக்கலாம், அது வேறு. ஆனால் இப்போது நீங்களாக இருக்கும் இந்த உயிருக்கு அந்த சூழல் மீது நாட்டமில்லை.

இதனால் பலவாறாக உங்களுக்குள் நடக்கும் மாற்றங்கள் எல்லாமே உங்களுக்கு சாதகமானதாக இல்லை. சுரப்பிகளில் கோளாறு என்பது அதன் ஒரே ஒரு வெளிப்பாடுதான்.

மிக நுணுக்கமாக, மிக துல்லியமான செயல்பாடுகளை கொண்ட ஒரு சுரப்பி என்றால் அது தைராய்டு. இது எளிதாக கவனிக்கக்கூடிய ஒன்று. முதலில் உங்கள் உடல் மற்றும் மனரீதியான சில விஷயங்கள் சற்று தாறுமாறாக செயல்படும் - காரணம் தைராய்டில் ஏற்படும் தடுமாற்றம்.

மற்றொரு அம்சம் என்னவென்றால், உங்களுக்குள் இருந்து ஏற்படும் தொந்தரவு - உங்களுடைய மனோரீதியான விஷயங்கள்.

தைராய்டும், சில வழிமுறைகளும்

ரசாயனம் கலக்காத உணவு:

உங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் இன்னொரு அம்சம், எந்தவிதமான உணவு உங்கள் உடலுக்குள் செல்கிறது என்பதுதான். இன்று இரசாயன கலப்பில்லாத எந்த உணவையும் நீங்கள் உண்ணும் வாய்ப்பே இல்லை. ஆர்கானிக் என்று சொல்லப்படும் இயற்கை உணவை நீங்கள் உண்பதாக இருந்தாலும், அதிலும்கூட குறைந்த அளவில் ஆர்கானிக் ரசாயனம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படியொரு நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

காட்டில் இப்போது விளைந்த ஏதோ ஒன்றை அப்படியே செடியிலிருந்து நேரடியாக பறித்து உண்ண முடியும் என்பது மிக சிரமமாகி இருக்கிறது. இப்போது அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. மிகக் குறைந்த சதவிதத்தினருக்கு மட்டுமே அப்படி உண்ணும் வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி எல்லாமே சந்தையில் இருந்துதான் வருகிறது. சந்தை என்றாலே அது அளவு பற்றியதாகவே இருக்கிறது, தரத்தின் மீது கவனம் இல்லை.

சத்குருவின் பாட்டி காய்கறிகளைக் கையாளும் விதம்:

அதுமட்டுமில்லாமல், இந்த நாட்டில் இப்போது பலவும் காணாமல் போயிருக்கிறது, பயப்பட வேண்டாம், நமது பாட்டியைப் பற்றி பேசுகிறோம். தினமும் காய்கறி விற்பவர்கள் அப்போது பறித்த காய்கறிகளோடு 7.30, 8.00 மணிக்கு வீட்டு வாசலுக்கு வந்துவிடுவார்கள்.

அவர்கள் கொண்டு வரும் காய்களை பாட்டி பார்ப்பார், எதை வாங்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அந்த காயை அந்த காய்கறிகாரரையே தொட விடமாட்டார். அவர்தான் காய்கறிகளை பறித்துக் கொண்டு வந்திருப்பார், செடியில் இருந்து இப்போதுதான் பறித்து வரப்பட்டிருக்கும். ஆனால் அதை எடை போடவேண்டும் என்றாலோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தாலோ, காய்களை பாட்டியே ஒவ்வொன்றாக பார்த்து தேர்ந்தெடுப்பார், காய்கறிக்காரரை தொடவே விடமாட்டார்.

"என் காய்கறியை தொடவேண்டாம்" என்றே சொல்லிவிடுவார். இது கிருமியை தவிர்ப்பதற்காக இல்லை. அந்த ஆணோ, பெண்ணோ தன் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் சாப்பிடப் போகும் காய்கறியை தொடுவதை இவர்கள் விரும்புவதில்லை. அதை ஒரு குறிப்பிட்ட விதமாக அவர் தொடுவார். அதை அன்பாக வருடி, தடவி கொடுத்து, இப்படி பார்த்து, இப்படி பார்த்து, அப்புறம்தான் அதை நறுக்கி சமையல் செய்வார்.

இதெல்லாம் வேடிக்கை என நினைக்க வேண்டாம். இந்த விஷயங்களெல்லாம் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றால், சுரப்பி சரியாக செயல்படுவதற்கான மாத்திரையைதான் நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு மாத்திரையை விழுங்கினால் மட்டும் உங்களுக்கு சமநிலை வந்துவிடாது. அதை அடக்கி வைக்கலாம், ஆனால் சமநிலைக்கு கொண்டுவர முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் வித்தியாசப்படுகிறது, ஒவ்வொரு கணமும் வித்தியாசப்படுகிறது. இதுதான் ஆற்றல் அறிந்து திருத்தம் செய்வது. இடைவிடாமல், மிக துடிப்போடு இந்த திருத்தம் தொடர்ந்து நடக்கிறது.

அதை அழித்துவிட்டு, சும்மா ஒரு மாத்திரையை விழுங்கி, எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தால் - நீங்கள் கொஞ்சம் செயலிழந்த இயந்திரம்தான். இந்த செயலிழப்பால், செயலிழந்த இயந்திரம் தன்னை பலவிதத்திலும் குறைபாடுகளாக வெளிப்படுத்தும். கொஞ்சம் அதிகமாக வேலை வாங்கும் போதுதான் இது உங்களுக்கே புரியத் துவங்கும். உடலை குறைந்தபட்ச இயக்கத்தில் வைத்திருந்தால், எதுவும் தெரியாது.

அதாவது, உங்கள் காரில் ஒரு டயர் பஞ்சர் ஆகிவிட்டால்கூட, 20 கிலோ மீட்டர் வேகத்தில் அப்படியே ஓட்டி வீடுவரை வந்து சேர்ந்துவிடலாம். ஏதாவது கொஞ்சம் உடையும், ஏதாவது கொஞ்சம் கிழியும், ஆனாலும் வந்துவிடலாம். நீங்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது டயர் பஞ்சரானால், அப்போது ரோட்டில் இருந்து பறப்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். இதுவும் அது போன்றதுதான்.

இந்த விஷயங்களை எல்லாம் சரியாக பார்த்துக்கொண்டால், உங்கள் உயிரின் இயக்கத்தை இன்னும் உயர்ந்த நிலைக்கு நீங்கள் தீவிரப்படுத்தும்போது, அது சுலபமாக அப்படி போகும். அந்த சமநிலையை கொண்டுவராமல் உயிர்த்தன்மையை தீவிரப்படுத்தினால், அப்போது அது தடம்புரள்வதை பார்ப்பீர்கள். தினமும் உங்களைச் சுற்றி இப்படி நடப்பதைப் பார்ப்பீர்கள்.

இந்தளவுக்கு உங்கள் வாழ்க்கையில் நிஜமாக்குவதற்காக, நீங்கள் நகரத்தை விட்டுவிட்டு காட்டுக்குள் போய் வாழமுடியாது. உங்கள் சூழ்நிலைகளை அப்படியே விட்டுவிட்டு போய்விட முடியாது. குறைந்தபட்சம், அந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தாத அளவுக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளலாம். அதன் தாக்கம் எப்படியும் இருக்கும், ஆனால் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்பதுதான் கேள்வி.

வீட்டில் செடிகளை வளருங்கள்:

குறைந்தபட்சம் உங்கள் வீட்டுக்குள்ளாவது, உங்களைச் சுற்றி செடிகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இடம் இல்லையென்றால், உங்கள் அறையை நிரப்பிவிடலாம். இதனால் விசித்திரமான அறைகள் உருவாகும் என நினைக்கிறோம்! கூரையையும் பாதியளவுக்கு திறந்துவிடலாம். “ஆனால், சத்குரு எங்க வீட்டுக்கு மேல இன்னொரு வீடு இருக்கே...” இருக்கட்டும். அப்படியென்றால் அடைத்து வைத்திருக்கும் அந்த சுவரை சற்றே திறங்கள் - கொஞ்சம் சூரிய வெளிச்சம் உங்களுக்குள் வரட்டுமே. ஆம், எல்லாப் பக்கமும் அடைத்து வைத்துக்கொண்டு, ஒரு ஏசி மட்டும் எப்போதும் ர்ர்ர்ர் என இரைந்துகொண்டே இருக்க வேண்டுமா? அப்படி வேண்டாமே.

இயந்திரங்களின் அதிர்வுகள் ஏற்படுத்தும் தாக்கம்:

இது ஒரு அம்சம். உங்களைச் சுற்றி இருக்கும் இந்த ஓசை அதிர்வுகளெல்லாம் இந்த உடலை கடுமையாக பாதிக்கிறது. எப்போதும் ஒருவித ர்ர்ர்ர்ர்ர்ர்.. கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, ஐரோப்பா கொஞ்சம் பரவாயில்லை, அமெரிக்காவில் எல்லா நேரமும் ம்ம்ம்ம் என ஏதோ ஒன்று தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது.

நாம் இங்கே நமது மையத்திற்கு வந்தால், அப்படியே (சைகை காட்டுகிறார்) சும்மா அசைவில்லாமல் இருக்கிறது, இது உங்களை உயிரோட்டமாக வைக்கிறது. எல்லாமே சத்தம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தால், நாம் அப்படியே கிறுகிறுத்து விடுவோம். பெரும்பாலான மக்களுக்கு இது தங்களுக்கு நடக்கிறது என்பது கவனத்தில் இல்லை என்றாலும், அவர்களுக்கும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூங்குகிறார்கள் என்பதே இதனால்தான். அவர்கள் இயற்கையான சூழலில் வாழ்வதில்லை. தூங்குவதன் மூலமாக அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

குறைந்தபட்சம் உங்கள் வீட்டுக்குள்ளாவது, உங்களைச் சுற்றி செடிகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம்.

எனவே, நோய்களிலிருந்து, மன நோய்களிலிருந்து, எல்லாவிதமான சமநிலை கோளாறுகளிலிருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு நாளில் நீங்கள் எட்டு மணி நேரம் தூங்குகிறீர்கள். அதாவது உங்கள் வாழ்க்கையில் பாதி நேரம், இறந்து கிடக்கிறீர்கள்.

மரணம் எப்போதுமே ஒரு நல்ல உபாயம்தான், ஆனால் நாம் தேடும் தீர்வு அது இல்லையே. அப்படித்தானே? நாம் வாழ்வதற்கான ஒரு தீர்வை எதிர்பார்க்கிறோம், முடித்து வைப்பதை அல்ல. நீங்கள் ஏதோ ஒன்றிற்கு முடிவு கட்டிவிட்டால், அதோடு அது முடிந்துவிடும், ஆனால் தீர்வு வருமா? ம்ம்? அது முடிந்துவிட்டது, ஆனால் அது நாம் விரும்பக்கூடிய தீர்வாக இல்லை. நாம் இங்கே வாழ விரும்புகிறோம், முழு உயிர்ப்போடு, முழுமையான தீர்வை அடைய விரும்புகிறோம்.

நாம் தூங்கும் சூழல்

bedroom with plants, thyroid symptoms in tamil, தைராய்டு அறிகுறிகள்

இது நிகழ வேண்டுமென்றால், இது உங்களால் முடிவதுதான் - நீங்கள் விசித்திரமாக தெரியலாம், நானும்கூட உங்களை விசித்திரமானவர் என நினைக்கக்கூடும் - இருந்தாலும் நீங்கள் தூங்கும் இடத்தில் கொஞ்சம் செடிகளை வைக்க முயற்சிக்கலாம். நீங்கள் நடந்து செல்லும்போது, மனிதனை தவிர மற்ற உயிர்களும் வாழ்கிறது என்பது எப்போதுமே உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு மனிதர்கள் இருப்பதே கவனத்தில் இல்லை, எனவே உயிரோடு இருக்கிற ஒவ்வொன்றுமே கவனத்தில் இருக்க வேண்டும் என நாம் உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஒரு மரம், ஒரு செடி, ஒரு புல், குதித்தோடும் ஒரு வெட்டுக்கிளி, அதோடு உங்களுக்கு பிடிக்காத உங்களை கடந்து செல்லும் மக்கள், இப்படி ஒவ்வொன்றோடும் நீங்கள் உயிரோட்டமாக இருக்கவேண்டும்.

அதற்காக, “ஐ லவ் திஸ் ட்ரீ” என எதையாவது செய்யத் தேவையில்லை. நீங்கள் மரத்தை காதலிக்க வேண்டியதில்லை, மரத்தால் நீங்கள் ஊட்டமடைய வேண்டும், அதுதான் உயிர்வாழ ஒரே வழி. உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, இப்போது அது உங்களுக்கு ஊட்டமளிக்கிறது. விழிப்புணர்வாக நீங்கள் அதை நடத்தினால், எல்லாமே இன்னும் சிறப்பாக நடக்கும்.

உங்களைச் சுற்றி இருக்கும் அனைத்துடனும், பாரபட்சமின்றி உயிர்ப்பாக இருப்பது எனும் இந்த ஒரு சாதாரண விஷயமே உங்கள் தைராய்டு பிரச்சனையை சீர்செய்துவிடக் கூடும். அதோடு காலையில் ஹடயோகா, கிரியா பயிற்சிகள் இருக்கிறது, இது எல்லாமே நிச்சயமாக உதவும். மேலும், சக்தி வாய்ந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள் என நிறைய விஷயங்கள் இருக்கிறது.

உடலுக்கு உழைப்பு வேண்டும்

games, physical activity, thyroid symptoms in tamil, தைராய்டு அறிகுறிகள்

இதில் இன்னொரு முக்கியமான காரணம், தொழில்நுட்பம் வளர வளர, மனிதர்களின் உடலளவிலான செயல்பாடுகள் குறைந்துகொண்டே போகிறது. சராசரியாக ஒரு நாளில் ஒரு சாதாரண மனிதர், அந்த காலத்தில் நமக்கு முந்தைய தலைமுறையினர் எந்த அளவுக்கு உடலுழைப்பு செய்ய வேண்டியிருந்தது என்பதோடு ஒப்பிட்டாலே, இன்று நமது உடலுழைப்பு என்பது பல மடங்கு குறைவுதான். இவ்வளவு குறைவான உடலுழைப்போடு, இந்த உடலில் சமநிலையை பேணுவது மிகச் சிரமம்.

அதனால் கொஞ்சம் சமநிலை தவறினாலும் கூட, உடனே படுக்கையில் விழுந்து விடாதீர்கள், கொஞ்சம் சமநிலை தவறுவதாக நீங்கள் உணர்ந்தாலும் உடனே செயலில் குதித்துவிட வேண்டும். எங்கெல்லாம் கொஞ்சம் தீவிரத்தோடும் உற்சாகத்தோடும் செயல் நடக்கிறதோ, நீங்கள் அந்த செயலில் குதிக்க வேண்டும். உடல் சரியில்லாதது போல உங்களுக்கு தோன்றினால் இன்னும் அதிகப்படியாக அந்த செயலில் ஈடுபட வேண்டும்.

ஆம், ஏனென்றால் நீங்கள் அதிலிருந்து பின்வாங்கும் அந்த கணத்தில், அந்தப் பிரச்சனையை நீங்கள் மேலும் பலப்படுத்துகிறீர்கள். ரொம்பவே உடல் முடியாமல் இருக்கிறது என்றால் அது வேறு விஷயம். மற்றபடி உங்கள் உடலுக்கு உழைப்பு வேண்டும். அடிப்படையில், இப்போது நாம் பலவிதமான சுரப்பி கோளாறுகளைப் பற்றி பேசுகிறோம்; இவை எல்லாவற்றுக்கும் செயல் என்பது ஒரு எளிமையான தீர்வாக இருக்கிறது.

குறிப்பாக நியூயார்க்கில் இருப்பவர்களுக்கு இதை நினைவூட்ட விரும்புகிறோம் - ஏதோ ஒரு செயலை நீங்கள் உருவாக்கத் தேவையில்லை. உங்கள் கையில் உங்கள் உடலசைவை அளக்கும் 'ஹெல்த் பேண்ட்' கட்டிக்கொண்டு 10 அடி, 12 அடி நடப்பது செயல் செய்வதற்கான வழியில்லை. அப்படி செய்வதால் ஒருவேளை நோய் இன்னும் அதிகரிக்கக்கூடும். சும்மா ஆனந்தமாக எதையாவது செய்யுங்கள்.

ஆனந்தமாக, உயிரோட்டமாக இருங்கள். சும்மா இங்கே உட்கார்ந்து உற்சாகமாக உயிரோட்டமாக இருக்கத் தெரியவில்லை என்றால், ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுங்கள் அல்லது சும்மா ஓடுங்கள். அந்த வெட்டுகிளியை போல நடக்க முயற்சி செய்து பாருங்கள்.

தளருங்கள் மிளிருங்கள்

relax, thyroid symptoms in tamil, தைராய்டு அறிகுறிகள்

உண்மையில், உங்கள் அடிப்படையான பிரச்சனை, உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் மிக இறுக்கமாக மாறிவிட்டீர்கள். அதனால் உங்களுக்கு நாம் மறுபடியும் நினைவுப்படுத்த வேண்டி இருக்கிறது. எப்படி இருந்தாலும், நீங்களும் ஒருநாள் இறப்பீர்கள், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இது முடிந்துவிடும். அதனால் இவ்வளவு இறுக்கமாக இருக்க வேண்டாம். நீங்கள் உங்கள் பிடியைக் கொஞ்சம் தளர்த்த வேண்டும்.

இப்போது நீங்கள், உங்கள் பிடியை கொஞ்சம் தளர்த்தினால், அந்தக் கடைசி காட்சி வேறுவிதமாக இருக்கும். இல்லையென்றால் - மக்கள் உங்களை இப்படித்தான் பார்ப்பார்கள். உங்கள் பிடியை தளர்த்துவது என்பது உங்களுக்கு நடந்த மிக நல்ல விஷயமாக அமையும். இப்போதே அந்த பிடியை நீங்கள் தளர்த்தினீர்கள் என்றால், வாழ்க்கை உங்களுக்கு அற்புதமாக, சிறப்பாக நிகழ்ந்திடும்!