சத்குரு கொடியசைக்க, கோலாகலமாய் துவங்கியது காவேரி கூக்குரல் வாகனப் பேரணி!
ஆதியோகியிலிருந்து புறப்பட்ட வாகன பேரணி… கொடியசைத்து துவக்கி வைத்த சத்குரு! காவேரி கூக்குரல் முன்னெடுப்பின் முதற்கட்டமாக துவங்கப்பட்ட இந்த வாகனப் பேரணி எதற்காக? நேற்றைய இந்த நிகழ்வில் சத்குரு பேசிய உரையின் சாரம் மற்றும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் ஆகியவற்றை தொடர்ந்து படித்தறியலாம்.

”நம் தேசத்தில் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட வளமான மண்ணும் தேவையான தண்ணீரும் இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம்.” - சத்குரு

தென்னிந்திய மக்களின் உயிர்நாடியாக திகழும் காவேரி நதியை மீட்டெடுப்பதற்காக ‘காவேரி கூக்குரல்’ எனும் இயக்கத்தை ஈஷா துவக்கியுள்ளது. இத்திட்டம் குறித்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் சுமார் 5,000 கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாகன பேரணியின் தொடக்க விழா கோவையில் நேற்று (ஜூலை 31) நடைபெற்றது. ஈஷா யோகா மையத்தில் மையத்தில் ஆதியோகி முன்பாக நடந்த இவ்விழாவில், சத்குரு அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார்.
சத்குரு: இங்கிருந்து புறப்படும் விழிப்புணர்வு வாகனங்கள் அடுத்த ஒரு மாதத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் சுமார் 5,000 கிராமங்களுக்கு சென்று ’காவேரி கூக்குரல்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
Subscribe
தண்ணீருக்கு மூலம் நதி இல்லை, ஏரி இல்லை, கிணறு இல்லை. தண்ணீருக்கு மூலம் மழை மட்டும் தான். மழைத் தண்ணீரை எந்த அளவுக்கு பூமியில் பிடித்து வைத்துக்கொள்ள முடியுமோ அந்தளவுக்கு நம் நாட்டை வளமாக வைத்துக் கொள்ள முடியும்.
இப்போது, செடி, மரங்கள் இல்லாததால் மழைநீரை சேமிக்க முடியாமல் போகிறது. கடந்த 100 வருடங்களில் ஒவ்வொரு பத்தாண்டில் பெய்யும் மழையின் அளவு தோராயமாக அதே அளவில் தான் உள்ளது. ஆனால், மரங்கள் இல்லாததால் அவை பூமிக்குள் செல்லாமல் வேகமாக ஓடிவிடுகிறது.
இதை மாற்றுவதற்கு மரங்கள் நட வேண்டும். இது நமக்கு புதிது அல்ல. நம் கலாச்சாரத்தில் விவசாயிகள் எத்தகைய விவசாயம் செய்தாலும் தங்கள் நிலத்தில் குறைந்தது 20, 30 மரங்களை வளர்த்து வந்தார்கள். ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் ரசாயன உரங்களின் வருகையால் மரங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் இருந்தால் அவை இரசாயன உரங்களை உண்டுவிடும் என்று மக்கள் மனங்களில் தவறான எண்ணங்கள் விதைக்கப்பட்டன. இதனால், மரங்களில் எண்ணிக்கை பெருமளவு குறைந்து போனது.
உங்கள் எல்லோருக்கும் நன்று தெரியும். நம் தேசத்தில் மிக கஷ்டமான, வெட்கப்பட கூடிய விஷயம் என்னவென்றால், 15 வருடங்களில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு காரணம் வங்கி கடன் என்றும் இன்னும் பல காரணங்களையும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அடிப்படையாக வளமான மண்ணும் தேவையான தண்ணீரும் இல்லாததால் தான் இத்தனை தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
நம் தேசத்தில் கடந்த 70 வருடங்களில் 4 போர்கள் நடைபெற்றன. 3 போர்கள் பாகிஸ்தானுடனும், ஒரு போர் சீனாவுடனும் நடந்தது. இந்த போர்களில் இரு தரப்பிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், நம் தேசத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைவிட பேராபத்து ஒன்று நிகழ வேண்டுமா? இதை இப்படியே விட்டால் இன்னும் பல பாதிப்புகள் ஏற்படும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல செயல்கள் செய்ய வேண்டும். அதன் முதல்படியாக, காவேரி படுகையில் உள்ள விவசாயிகள் 33 சதவீதம் மரப்பயிர் விவசாயத்துக்கு மாற வேண்டும். இது வெறும் மரம் நடும் விவசாயம் மட்டும் அல்ல. விஞ்ஞானப்பூர்வமாக மரப்பயிர் விவசாயம் செய்தால் சராசரி விவசாயிகளின் வருமானம் 5ல் இருந்து 8 மடங்குவரை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இதற்காக தலகாவேரியில் இருந்து திருவாரூர் வரை ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளோம். அதற்கு முன்பாக, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த வாகன பேரணி இன்று தொடங்கி உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த மரப் பயிர் விவசாயத்துக்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் 4 வருடம் அரசு மானியம் வழங்கினால் பெரிதும் உதவியாக இருக்கும். இதுதொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இத்திட்டம் மட்டும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் நம் விவசாயிகள் வேறு யாரிடமும் எதற்காகவும் கையேந்த தேவையில்லை.
கோவையில் இருந்து புறப்பட்ட 28 விழிப்புணர்வு வாகனங்கள் இம்மாதம் முழுவதும் காவேரி நதிப் படுகையில் அமைந்துள்ள 28 மாவட்டங்களுக்கு பயணிக்க உள்ளது. தாலுகா வாரியாக செல்லும் இவ்வாகனங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு வீடியோ மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், வார இறுதி நாட்களில் தாலுகா தலைமையகங்களில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்படும்.
இதில் ஈஷா களப் பணியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்று வேளாண் காடு வளர்ப்பு குறித்தும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பலன்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்க உள்ளனர். இதையடுத்து, செப்டம்பர் மாதத்தில் தலகாவேரியிலிருந்து திருவாரூர் வரை சத்குரு விழிப்புணர்வு பைக் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக, துவக்க விழாவில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் திருமதி.வானதி சீனிவாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் திரு.கிருஷ்ணசாமி, நடிகை திருமதி.ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி: 80009 80009