கொல்லைப்புற இரகசியம் - பகுதி 6

நம் உமையாள் பாட்டி இந்தமுறை, பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத மருந்து ஒன்றைக் கூறுகிறாள். அசோக மரத்தின் பட்டையும், அதன் பூவும் எந்த அளவு மகத்துவம் வாய்ந்தவை என்பதை, தனக்கே உரிய கைவைத்திய அனுபவத்தால் புரியவைக்கிறாள் அவள்!

"பாட்டி... பாட்டி..." சற்று ஒலியளவை உயர்த்தி அழைத்தபடி பாட்டியின் குடிலுக்குள் நுழைந்தேன். "வாடியம்மா வா! இப்பதான் இந்த பாட்டி ஞாபகம் வந்ததா...?" என்று செல்லக் கோபம் காட்டிய உமையாள் பாட்டி, "என்ன சாப்பிடுற.. இரு பாட்டி உனக்கு குடிக்கறதுக்கு எதாவது செய்யுறேன்" என்று என் கைபிடித்து திண்ணையில் அமர வைத்தாள்.

"இல்ல பாட்டி, ஒன்னும் வேணாம்."

"அசோக மரத்தோட பட்டையோட பசும்பாலும் தண்ணியும் சேத்து சாறெடுத்து தினமும் குடிச்சியான்னா குருதிப் போக்கு நின்னு மாதவிடாய் சுழற்சி சீராகும்."

"ஏன்டிம்மா...! இந்தப் பாட்டியால என்ன செய்யமுடியும்னு நினைக்கிறியா? இந்தப் பாட்டியப் பத்தி என்ன நினைச்ச, இப்பக்கூட தனி ஆளா நின்னு பத்துப்பேருக்கு சமைப்பேனாக்கும்!"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

'அதுக்கில்ல பாட்டி, எனக்கு உடம்பு சரியில்ல, அதான் ஒன்னும் சாப்பிடப் பிடிக்கல" என்று நான் சொன்னதும், வேகமாக அருகில் வந்து நெற்றியில் கை வத்துப் பார்த்தாள்.

"எனக்கு ஜுரமெல்லாம் இல்ல பாட்டி... எனக்கு ப்பீரியட்ஸ் டைம்"

"ஓ மாதவிடாய் காலமாக்கும். ம்கும்... அதானப் பாத்தேன், புள்ள முகம் வாடிப்போய் இருக்கேன்னு! இது வழக்கமா மாதாமாதம் பெண்களுக்கு வர்ற இயற்கை உபாதைதானே?! அதுகூட இந்தக்காலத்தில பெரிய பிரச்சனையா போச்சு! இந்தக் காலப் பிள்ளைக ஃபாஸ்ட் ஃபுட்டுனு சொல்லிக்கிட்டு, கடையில கிடைக்கிற கண்டதையும் சாப்பிடுறீங்க. குளிர்பானம்னு கார்பன்டை ஆக்ஸைடு அடைச்சு வச்ச பாட்டில வாங்கி குடிச்சுக்கிறீங்க. மொத்தத்தில உங்க ஜீரண மணடலமும் வளர்சிதை மாற்றமும் இதனால பாதிக்கப்படுது. சரி... சரி... இப்போ உனக்கு என்ன பிரச்சன? அதிக வலியா இருக்குதா இல்ல அதிக உதிரப் போக்கா...?"

"எனக்கு வழக்கமா வர்ற மூனு நாளையும் தாண்டி ரத்தப்போக்கு கன்ட்டினியூவ் ஆகுது பாட்டி. உடம்பு வேற ரொம்ப வீக்காகுது. அதான் இப்போ டாக்டர பார்க்கப் போறேன். அப்படியே போற வழியில உங்களயும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்"

நல்ல காரியம் செஞ்ச போ...! டாக்டர போய் பாரு. அதுக்கு முன்னாடி நான் ஒரு கை வைத்தியம் வச்சிருக்கேன், அத உனக்கு சொல்றேன். இந்த பிரச்சனைக்கு ஒரு அற்புத மருந்து அசோக பட்டை.

"அசோகப் பட்டையா அப்படின்னா...?!" என்றேன் ஆர்வத்துடன்.

"அசோக மரத்தோட பட்டையோட பசும்பாலும் தண்ணியும் சேத்து சாறெடுத்து தினமும் குடிச்சியான்னா குருதிப் போக்கு நின்னு மாதவிடாய் சுழற்சி சீராகும்."

"சரி பாட்டி அசோகப் பட்டைய எங்க போயி தேடுறது?"

"அசோகப் பட்டை நாட்டு மருந்து கடைகள்ல (Raw drug stores) கிடைக்கும். இப்போ இந்தப் பாட்டி உனக்காக எங்கிட்ட இருக்குற அசோகப் பட்டைய பக்குவமா சாறெடுத்து தர்றேன் குடிச்சிட்டு டாக்டரப் போயி பாரு!" என்று அவள் கூறியபோது எனது உடல் மருந்து சாப்பிடாமலே புத்துணர்ச்சி கொண்டது.

அவள் எனக்காக அசோகப் பட்டையை சாறெடுக்கத் துவங்கினாள். அவளது கைவண்ணத்தை வியப்புடன் திண்ணையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

குறிப்பு:

பட்டை: பட்டையின் சாறு பெரும்பாடு நீங்க தரலாம். (வீட்டுக்கு விலக்கான மூன்றாம் நாளுக்கு மேலும் தொடரும் குருதிப்போக்கு நிற்கும்.)

பட்டை-105கிராம், பசுவின் பால்-2ஆழாக்கு (336மிலி), நீர்;-8 ஆழாக்கு (1344 மிலி) கலந்து 1/5ல் பாகமாக சுருக்கி, நாள் ஒன்றுக்கு 2-3 முறை குடித்துவர பெரும்பாடு தீரும்.

அசோக மரத்தின் பூ : பூவை பொடித்து நீருடன் கலந்து கொடுக்க குருதிக்கழிச்சல் குருதியும் சீழும் கலந்த கழிச்சல் நிற்கும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்