கொல்லைப்புற இரகசியம் - பகுதி 12

திரிகடுகத்தில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் திப்பிலியின் மருத்துவ குணங்களை உமையாள் பாட்டி வாயிலாக தெரிந்துகொள்ளலாம், இந்தப் பதிவில்!

நான்கைந்து நாட்களாக இருமலும் சளியும் வாட்டி வதைக்க ஆங்கில மருத்துவம் நாட மனமின்றி, மூலிகை வைத்தியம் ஏதும் இருக்குமா என அறிய நினைத்தேன். அபயம் வரும்போது ஆபத்பாந்தவராக எனக்குத் தெரிவது உமையாள் பாட்டிதான்! விரைந்தேன் உமையாள் பாட்டியின் குடிலுக்கு.

நெஞ்சு சளிய வெளியேற்றுவதுக்கு சிறந்த மருந்தா இருப்பதாலதான் திப்பிலிக்கு ‘கோழையறுக்கி’னு பேரு.

“என்ன பாட்டி... எப்படியிருக்கீங்க?”

பாட்டியிடம் நான் நலம் விசாரிப்பதற்குள் ‘கொள்... கொள்’ என்று அவ்வளவு இருமல்கள் இடைமறித்தன என்னை.

“என்னப்பா இவ்வளவு நெஞ்சு சளிய வெச்சிக்கிட்டு டாக்டர்கிட்ட போகாம இருக்க? பாட்டி. கேட்டுக்கொண்டே வரவேற்றாள் வாயிலில்.

“அதான் உங்க கிட்ட வந்திருக்கேனே... ஏதாவது மருந்திருந்தா சொல்லுங்க பாட்டி.” இருமிக்கொண்டே கேட்டேன்.

“அதான் உன்னோட ஃபேவரெட் நாட்டுக்கோழி சூப்பு இருக்கே! பக்குவமா வீட்டுல வைக்க சொல்லி சாப்பிட வேண்டியதுதான...?”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“ஐயோ அது தப்பு பாட்டி!”

“ஏம்பா சைவம் படம் பாத்துட்டு சைவமா மாறிடலாம்னு முடிவெடுத்திட்டியா...?!”

எனது அசைவ உணவு பழக்கத்தை நன்கறிந்திருந்த பாட்டியின் கேள்வியில் எள்ளல் இருந்தது.

“சித்திரை திருவிழாவுக்காக ஊருல காப்பு கட்டியிருக்காங்க. திருவிழா முடியற வரைக்கும் அசைவம் சாப்பிடக் கூடாது. இந்த நெஞ்சு சளிக்கு ஒரு நல்ல மருந்து சொல்லுங்க, ரொம்ப அவஸ்தையா இருக்கு” பாட்டியிடம் நான் முறையிட்டேன் .

“அதான் ஊருக்கே தெரிஞ்ச மருத்துவம் இருக்கே, திப்பிலி!”

“பாட்டி அது எனக்குத் தெரியாது. விளக்கமா சொல்லுங்க!”

“நெஞ்சு சளிய வெளியேற்றுவதுக்கு சிறந்த மருந்தா இருப்பதாலதான் திப்பிலிக்கு ‘கோழையறுக்கி’னு பேரு.

இருமல் சளி தொல்லைகளுக்கு 1 கிராம் திப்பிலி பொடிய தேனோட கலந்து சாபிட்டு வரலாம் (அல்லது) திப்பிலி பொடிய (3 விரல் அளவு) எடுத்து கம்மாறு வெற்றிலை சாறு மற்றும் தேனோட கலந்து சாப்பிட்டு வரலாம். (உணவுக்கு முன்)

காச நோய்னு சொல்லப்படுற டிபி(TB) இருக்குறவங்க திப்பிலி பொடி மற்றும் கடுக்காய் பொடி ரெண்டையும் சரிசமமா எடுத்து தேன்ல கலந்து இலந்தை பழ அளவு மூன்று மாதம் இருவேளை சாப்பிட்டு வந்தா நோய் சரியாகும்.

சளி இருமல் மட்டுமில்லாம குறுக்கு வலிக்கும் (விலாஎலும்பு வலி) திப்பிலி நல்ல மருந்தா இருக்குது. திப்பிலி வேரை பால்விட்டு அரைத்து பாலில் கலந்து (உணவுக்கு பின்) குடிச்சு வந்தா குறுக்கு வலி குணமாகும்.

திப்பிலி பொடி, திரிகடுகு பொடி ரெண்டுமே ஈஷா ஆரோக்கியா மருத்துவ மனையிலேயே கெடைக்குது!”

“சரி பாட்டி... நான் போயி வாங்கிட்டு வர்றேன்.” பாட்டியிடம் பை சொல்லிவிட்டு பைக்கை முடுக்கினேன், ஈஷா ஆரோக்கியாவிற்கு!

குறிப்பு:

திப்பிலி கற்பம் - திப்பிலி பொடியை தேனில் கலந்து ஒரு மாதம் வரை (உணவுக்கு பின்) உண்டு வர தேமல் நீங்கும்.

ஆண்மை பெருக - திப்பிலி அரிசி பொடியை நெய்யுடன் கலந்து 1-2 கிராம் (உணவுக்கு பின்) உண்டு வர பலன் கிடைக்கும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்